சோழவந்தான்: சோழவந்தான் அருகே ஈவ் டீசிங் கொடுமையால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள அயன்குருவிதுறையை சேர்ந்தவர் டெய்லர் மணியின் மகள் அபிராமி (17). இவர் அருகில் உள்ள அய்யப்ப நாயக்கன்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
அபிராமி பள்ளிக்கு செல்லும்போது கல்லூரி மாணவரான கோபி (19), கண்ணன் (17) ஆகியோர் தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாகத் தெரிகிறது.
நேற்று காலை அபிராமி பள்ளிக்கூடம் சென்றபோது கோபியும் கண்ணனும் வழிமறித்து ஆபாசமாகப் பேசியுள்ளனர். உன்னைப் பற்றி சுவற்றில் ஆபாசமாக எழுதுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால் வெறுத்துப் போன அபிராமி வீட்டுக்கு வந்து அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டு, தூக்கு போட்டுக் கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அபிராமி இறந்தார்.
இதையடுத்து கோபி, கண்ணன் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைப் பிடிக்க
தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நன்றி : EAST ADIRAI