"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
29 ஜூலை 2011

தேத்தண்ணி' வந்த கதை (ஒரு செவிவழிச் செய்தி) அதிரை அஹ்மது

0 comments

'வாவன்னா' குடும்பத்தைச் சேர்ந்த 'ஆவ்மி ஹாஜியார்' என்ற அஹ்மது முஹிதீன் ஹாஜியார் பாய்மரக் கப்பலுக்குச் சொந்தக்காரராகிப் பன்னாட்டு வணிகம் செய்த தனவந்தர். பெரும்பாலும் அவரது கப்பல் உள்நாட்டுத் துறைமுகங்களிலும், இலங்கையிலும், சிலபோது அரபு நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்யும் வழக்கம். இவ்வாறான பயணங்களுள் ஒன்றில், அப்போது அவர் தனது வணிகக் குழுவுடன் மக்காவிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தார். "முதலாளி! காற்று திசை மாறி அடிக்குது!"என்று குரல் கொடுத்த கப்பலோட்டியை நெருங்கிச் சென்ற ஹாஜியார், "கொஞ்ச நேரம் கப்பலை அதன் போக்கில் ஓடவிடு" என்று ஆணை பிறப்பித்தார். கப்பலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தேயிலைப் பொட்டலங்கள் அடங்கிய கள்ளிப் பெட்டிகள் மாலுமிக்குப் பாரமாகத் தெரிந்தது. வெள்ளையர்கள் அமெரிக்கத துறைமுகம் ஒன்றில் செய்தது போன்று, ('Boston Tea Party' ) அவற்றைக் கடலில் தள்ளிவிடலாமா என்றுகூட எண்ணினார் மாலுமி. முதலாளிக்கு பயந்து, அவ்வாறு செய்யவில்லை. சற்று நேரத்தில் அவர், "அந்தோ.... கோட்டைப்பட்டினத்து தர்ஹா தெரியுது" என்று உணர்ச்சிப் பெருக்கில் கூவினார். "ஓட்டு அந்தப் பக்கம்!" என்ற முதலாளியின் ஆணைக்கொப்ப, மாலுமி தன தலைப்பாகையை இறுகக் கட்டிக்கொண்டு கண்ணில் தென்பட்ட கரையை நோக்கிக் கப்பலைச் செலுத்தினார். ஒருவாறாக, பத்திரமாகப் பயணக் குழுவினர் கரையை அடைந்து, தரையில் கால் வைத்தபோது, "வாங்க, வாங்க" என்ற வரவேற்புக் குரல்களைக் கேட்டு வியந்து நின்றனர்! அவர்கள் அந்த ஊர்த் தலைவர்கள் என்பது பிறகுதான் தெரிந்தது. 'எல்லாம் இறைவன் செயல்' என்பதை உணர்ந்துகொண்ட ஹாஜியார், அவ்வூர்க்காரர்களின் வீடுகளில் நடந்த விருந்தோம்பலில் திக்குமுக்காடிப் போனார். ஹாஜியாரின் பார்வை எதையோ தேடிக்கொண்டிருந்ததை உணர்ந்த தலைவர் ஒருவர், "என்ன ஹாஜியார்!?" என்றார். "தேத்தண்ணியைத் தேடுறேன்" என்ற ஹாஜியாரிடம், "அது என்னது தேத்தண்ணி?!" என்றார் முன்னவர். "அது, நான் அரபு நாட்டில் இருந்தபோது அரபிகளோடு சாப்பிடும்போது மறவாமல் குடிக்கும் 'சுலைமானி' என்ற பானம்" என்று விளக்கிய ஹாஜியாரிடம், "அப்படி ஒரு சாமான் எங்களுக்குத் தெரியாது" என்று கைவிரித்தனர் அங்கிருந்தோர். "கப்பலில் இருக்கும் கள்ளிப் பெட்டி ஒன்றைத் திறந்து எடுத்து வா" என்ற ஹாஜியாரின் கட்டளையைச் செவியேற்று, அவரின் பணியாட்கள் சற்று நேரத்தில் தேயிலைப் பாக்கெட்டுகளை எடுத்துவந்தனர். சிறிது நேரத்தில் 'சுலைமானி' தயாராயிற்று. அனைவரும் அந்த அரிய பானத்தை அருந்தி மகிழ்ந்தனர். ஓரிரு நாட்கள் அங்கே தங்கி ஓய்வெடுத்த பின்னர், அந்த ஊர்க்காரர்களிடம் பயண வழிகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, ஹாஜியாரும் அவருடைய பயணக் குழுவும் சொந்த ஊரான அதிரைக்கு விரைந்தனர். "அல்லாடே காவலா போய்ட்டு வாங்க ஹாஜியாரே!" என்று கோட்டைப்பட்டினத்தார் வழியனுப்பிவைத்தனர். 'கோட்டைப்பட்டினத்துக்குத் தெரியாதது நம்மூருக்கும் புதிதுதான்' என்று சிந்தித்த அஹ்மது முஹிதீன் ஹாஜியார், இன்று நாம் கணினி மென்பொருள்களை ஊரில் அறிமுகம் செய்வது போன்று, அன்று அதிரையில் அறிமுகம் செய்து வைத்ததுதான் 'தேயிலை' என்ற அற்புதப் பொருள்.

நன்றி :அதிரைவரலாறு

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி