இப்படியொரு கடிதம் 1995 -ல் நானும் என் மனைவியும் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் வந்து சேர்ந்து அதிர வைத்தது. உண்மையில் அந்தச் சகோதரி போன்ற ஊனமுற்ற சகோதரிகள் – சகோதரர்கள் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாத – பேசாத நேரம் அது. பெயர் ஊர் விபரம் இல்லாத கடிதம் அது. தபால் முத்திரையை வைத்து ஓரளவு ஊகித்துக் கொள்ள முடிந்தது.
உடனே அக்கடிதத்தை நர்கிஸில் வெளியிட்டு ஹஜ்ஜின் போது நிச்சயமாக அவருக்காக – அவரைப் போன்ற சகோதர சகோதரிகளுக்காக துஆச் செய்வோம் என்ற வாக்குறுதியையும் பத்திரிகையிலேயே தெரியப் படுத்திவிட்டு ஹஜ்ஜுக்குப் புறப்பட்டோம்.
ஹஜ்ஜின் போது மறக்காமல் துஆ (பிரார்த்தனை) கபூலாகும் (நிறைவேறும்) என்று அறியப்பட்ட இடங்களிலெல்லாம் எங்களது பிரார்த்தனைகளில் அவர்களையும் குறிப்பாக அந்த நடக்கமுடியாத ஏழைச் சகோதரியின் நல்வாழ்வுக்காகவும் துஆ செய்தோம். குறிப்பாக தவாபே விதா (விடை சொல்லிக்கொள்ளும்)வின் போது ஜம்ஜம்(வற்றாத நீருற்றுக் கிணற்றின்) படிக்கட்டின் மீது நின்று சப்தமிட்டு நீண்ட நேரம் உருக்கத்துடன் கேட்ட துஆவுக்குப் பின் திரும்பிப் பார்த்தபோது மொழி தெரியாத எத்தனையோ ஹாஜிகள் எங்கள் துஆவோடு இணைந்து கொண்டிருந்தமை கண்டு நெகிழ்ந்து நெக்குருகிப்போனோம்.
தாயகம் திரும்பியவுடன் ஒரு வாரம் ஓய்வில்லை. வந்து கிடந்த நூற்றுக் கணக்கான கடிதங்களிலிலிருந்து அச்சகோதரியின் கடிதத்தை அடையாளம் கண்டு கையிலெடுத்தேன்; படித்தேன்.
என்னையறியாமல் கண்ணீர் விட்டு அல்ஹம்துலில்லாஹ் … அல்ஹம்துலில்லாஹ் … என்று உரத்துக் கூறினேன்.
மனைவியும் அக்கடிதத்தைப் படித்துவிட்டு நெகிழ்ந்தார்.
அல்லாஹ் உங்கள் துஆவை ஏற்றுக் கொண்டு விட்டான்; முன்பு என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்த உறவுக்காரரே என்னைத் திருமணம் செய்து கொண்டுவிட்டார். நான் இப்போது மாமியார் வீட்டில் இருக்கிறேன்” என்று கூறியது கடிதம்.
அதே கடிதக் குவியலிலிருந்து சவூதி அரேபியாவிலிருந்து இன்னொரு கடிதம். வேப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் -திருமணம் முடித்து முறையாக தலாக் (மணப்பிரிவு) கொடுத்துவிட்டுத் தனித்திருப்பவர் -தன் முகவரி – முழு விபரம்- இந்திய தொடர்பு முகவரி -நபர்கள் விபரம் எல்லாம் கொடுத்து, தான் அந்தச் சகோதரியைத் திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பதாகத் தெரிவித்திருந்த கடிதம்.
சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூய்மையானவன்)! நாங்கள் திக்குமுக்காடிப் போனோம். அந்தச் சகோதரரரைப் பாராட்டி அவருக்காக துஆசெய்து, அந்தச் சகோ¡தரிக்குத் திருமணமாகிவிட்ட தகவலைச் சொன்னோம். இந்த இருவரிடமிருந்தும் பிறகு தொடர்பில்லை.
‘துஆவை அல்லாஹ் கபூல் (ஒப்புக்கொள்வானா?) செய்வானா? ”
என்று சந்தேகிப்பதே கூடப் பெருந்தவறு என்பார்கள் பெரியார்கள்!
சிறியதோ பெரியதோ எந்தப் பிரச்சினையானாலும் கஷ்டமானாலும் நஷ்டமானாலும் அந்த வல்ல நாயனிடம் முறையாக முன்வைக்கும் போது பிரச்சினைகளும் கஷ்டங்களும் வெப்பம் பட்ட பனிக்கட்டி போலக் கறைந்து போய்விடும் நிஜத்தை அனுபவித்திருக்காத மனிதர்களே இருக்க முடியாது; அதிலும் பிரார்த்தனைகள் நமக்காக என்றில்லாமல் பிற சகோதர சகோதரிகளுக்காக என்று இருக்குமேயானால், அதற்குத் தனித்தகுதிநிலை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. அதிலும் அந்தப் பிரார்த்தனைகள் பாதிக்கப்பட்ட -நசுக்கப் பட்ட -ஏழைகள்- ஊனமுற்றோருக்காக என்று இருக்குமானால் அதன் தகுதிநிலை எவ்வளவோ உயர்ந்தது என்பதை விளக்கவே இந்த ஊற்றுக்கண் வரிகள்!
இப்போது சமுதாயத்தில் ஊனமுற்றோர் நலனுக்காக ஆங்காங்கே சில அமைப்புக்கள் தோன்றியுள்ளன. பரிபாலனம், தொழில் முனைப்பு, என்று சில அறக்கட்டளைகள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளன. ஆனால் இவை போதாது. தேவை மிக அதிகம். சென்ற ஜூலை 2003-ல் இலங்கைப் பயணத்தின் போது கொழும்பு நகருக்கருகில் உள்ள திஹாரியில் முஸ்லிம் அங்கவீனர் நிலையம் மற்றும் பள்ளி மற்றும் பயிற்சிக் கூடத்துக்கு விஜயம் செய்த நினைவுகள் இப்போது அலைமோதுகின்றன. அது ஒரு மாதிரிப்பள்ளி; பயிற்சியகம். உலகக் கல்வியுடன் தொழிற்கல்வி மற்றும் வேலை பெற்றுத்தரும் உன்னத அமைப்பு இது. இச்செய்தி இவ்வரிய பணியில் தமிழகத்தில் ஈடுபட்டுள்ளோர் பார்வைக்கு.
நன்றி: சிந்தனைச் சரம் - ஹிமானா சையத்
நன்றி: சித்தார்கோட்டை.காம்
பதிப்பு : அதிரை எக்ஸ்பிரஸ்