"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
02 ஆகஸ்ட் 2011

புதுப்பள்ளி - புதுமைகளின் பள்ளி (Part-5)

0 comments
புதுப்பள்ளி முஹல்லா குறித்து எழுதும்போது இந்த முஹல்லாவைக் கட்டமைத்து,மார்க்க ரீதியில் வழிகாட்டிய முன்னோர்களில் சிலரையும் குறிப்பிட வேண்டியுள்ளது.எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சிலரைப் பற்றிய குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறேன்.இவைகளை மர்ஹூம். அப்துல் ரஹ்மான் (லக்கி) ஹாஜியார் எழுதிய 'அதிரை கலைக்கலஞ்சியம்' என்ற நூலிலிருந்தும்,நண்பர்கள் உதவியோடும் திரட்டியுள்ளேன்.பத்துவருடங்களுக்கு முன்பு http://members.langoo.com/jamal22b என்ற (அதிரைக்கான முதல் தமிழ்) இணைய தளத்தில் பதிந்திருந்தேன் என்றாலும் தற்போது அதன் சேவை நிறுத்தப்பட்டு விட்டதால், சிலவற்றை மட்டும் மீள்பதிவு செய்துள்ளேன்.

1) அ.மு.க.முஹம்மது ஷரீப் மரைக்காயர் (மறைவு:12-02-1945):அதிரையிலுள்ள மஸ்ஜித்களுக்கான தண்ணீர் செலவுக்காக தனக்குச் சொந்தமான நான்கு கடைகளை வக்ஃப் செய்ததோடு,மண்ணப்பன் குளத்திலிருந்து குடிநீர் கொண்டுவருவதற்கு தண்ணீர் வண்டியோடு மாடுகளையும் வழங்கினார்.கள்ளிச்செடிகளை அகற்றி சுற்றுச்சூழல் பராமரிப்பிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார்கள்.

2) மு.மீ.முஹம்மது மீராசாஹிப் ஹாஜியார்:அரசு ஆஸ்பத்திரியை விரிவாக்கம்செய்ய உதவியது. காரைக்குடி- சென்னை சென்ற:( கம்பன் எக்ஸ்ப்ரஸில் அதிராம்பட்டினத்திற்காக தனிப்பெட்டியை இணைக்க கோரிக்கைவைத்து வெற்றி பெற்றார்கள். கல்லூரி மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்கள்.

3) அ.மு.க. முஹம்மது ஷேக் மரைக்காயர்: (மறைவு 1948): மேலத்தெரு பழைய ஜும்ஆ பள்ளிக்கு வெள்ளை விரிப்புகளை தானே நெய்து வழங்கினார். அனைத்து சமூகத்தினரும் விருந்து வைபவங்களில் பெருமளவில் சமையல் செய்யத்தேவையான பாத்திரங்கள் மற்றும் தளவாடங்களை இலவசமாக வழங்கினார்கள்.விவசாயத்தில் புதிய விதைகளை அறிமுகப்படுத்தி, தஞ்சை விவசாயப்பண்ணையின் பாராட்டைப் பெற்றதோடு, பொதுமக்களுக்கு விவசாய ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

4) கோனா ஆலிம்: இலங்கை-சம்மாங்கோடு பள்ளிவாசலை நிர்மானித்தது கோணா ஆலிம்ஷா வகையறாக்கள் என்பதை ஏற்கனவே வாசித்துள்ளோம் (அ.எ.சுட்டி). இலங்கையுடன் வர்த்தக தொடர்புகள் கொண்டிருந்த தமிழக வணிகர்கள் தொழுவதற்காகக் கட்டப்பட்ட இலங்கையின் பள்ளிவாசல்களில் இது பிரபலமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். பொருளீட்டச் சென்றபோதிலும்,நமது முன்னோர்கள் இறைக்கடமைகளைச் செய்வதைக் கைவிட வில்லை என்பதற்கு இந்தப்பள்ளி வரலாற்றுச்சின்னமாக இன்றும் திகழ்கிறது. இதை நெடுங்காலமாக நிர்வகித்து வந்தவர்கள் மர்ஹூம் கோனா ஆலிம் அவர்களின் சந்ததிகள் என்பதும்,அவர்களில் பலர் புதுப்பள்ளி முஹல்லா என்பதும் குறிப்பிடத் தக்கது.

5) முஹம்மது அபூபக்கர் ஆலிம்:எனக்கு விபரம் தெரிந்து சந்தித்த அதிரையின் முதுபெரும் மார்க்க அறிஞர் மர்ஹூம் முஹம்மது அபூபக்கர் ஆலிம் அவர்கள்தான். தள்ளாத வயதிலும் புதுப்பள்ளிக்கு தொழச்செல்லும்போது எங்கள் வீடுவழியாகச் சென்றது பசுமையாக நினைவில் நிற்கிறது.எங்கள் பாட்டானாரின் சொத்துக்களை ஷரீஅத் முறைப்படி பங்கீடு செய்துகொடுத்த கையெழுத்துப் பிரதிகள் எங்கள்வீட்டு ஆவணங்களில் ஒன்றாகப் பாதுகாத்து வருகிறேன்.

ஒருநாள் தஹஜ்ஜத் (நடுநிசி தொழுகை) தொழுவதற்காக மின்சாரமற்ற இரவில் புதுப்பள்ளிக்குச் சென்றுகொண்டு இருந்தபோது திருடன் ஒருவன் அருகிலுள்ள வீட்டில் தேங்காய்களை திருடிக்கொண்டிருந்தபோது, கையிலுள்ள டார்ச் லைட்டை அடித்து யாரப்பா அது இந்நேரத்தில் தேங்காய் பறிக்கிறது?என்று கேட்டதும் திருடன் பயந்தவாறு தேங்காய்களை அப்படியே விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான். தற்போது அக்கம்பக்க கழிவுநீர்களால் சாக்கடை ஆகிவிட்ட புதுப்பள்ளி குளம் ஒருகாலத்தில் குளிக்கும் குளமாக இருந்தது. இறுதியாக 1980 ஆம் ஆண்டுவாக்கில் மர்ஹூம் அபூபக்கர் ஆலிம் அவர்களும் இந்தக்குளத்தில் குளித்திருக்கிறார்கள்.

இவர்களின் மரணத்தின்போது ஆஸ்பத்திரி தெரு முழுவதும் திரண்டிருந்த மக்கள்கூட்டம்,அன்னார்மீது ஊர்மக்கள் கொண்டிருந்த அன்பின் அடையாளம். அன்றைய தினம் தம்பிக்கோட்டையைச் சேர்ந்த பாவன்னா சூனா என்ற பெரியவர் தம் கையில் மாலையுடன் வந்திறங்கினார். இறந்தவரின் உடலுக்கு மாலை போடுவது இஸ்லாத்தின் பார்வையில் அங்கீகரிக்கப்படாதது என்று எடுத்துச்சொன்னதும் அது தவிர்க்கப்பட்டது. அபூபக்கர் ஆலிம் அப்பா தன்னுடைய மரணத்திற்கு சிலமாதம் முன்பு தன்னுடைய சொத்து ஒன்றை விற்றிருக்கிறார்கள். இந்த விற்பனை சம்பந்தமாக அப்பா அவர்கள் கொடுக்க வேண்டியிருந்த நூறு ரூபாய்களுக்காக அதிரையிலிருந்து தம்பிக்கோட்டை வந்து தன்னிடம் திருப்பித் தந்தததாகச் சொல்லி பாவன்னா சூனா @ பாலசுப்ரமணிய தேவர் ஐயா சிலாகித்ததைக் கேள்விப்பட்டு நெகிழ்தேன்.

மர்ஹூம் அபூபக்கர் ஆலிம் அவர்கள் காலத்தில் புதுப்பள்ளி முஹல்லா பஞ்சாயத்து மற்றும் மார்க்க ரீதியிலான ஃபத்வாக்களுக்கு மாவட்டம் தாண்டியும் மதிப்பு இருந்தது பலருக்கும் தெரிந்திருக்கும்.

-தொடரும்
பதிப்பு :அதிரைக்காரன்
நன்றி :அதிரை எக்ஸ்பிரஸ்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி