1. நான் மிகப்பெரிய பணக்காரன் எனக்கு ஏறக்குறைய ஏக்கர் கணக்கில் நிலம் புலன்கள் உள்ளது. ஆகவே எனக்கு “மரணம்” வரவே வராது எனச் சொல்லவோ.............!
2. நான் சமுதாயத்திற்கு பல சேவைகள் செய்த மிகவும் அந்தஸ்துடன் கூடிய சமுதாயத் தலைவர் ஆகவே எனக்கும் “மரணம்” வராது என்றோ.............!
3. இல்லை....இல்லை......நான் “அல்ஹாஜ்” பல முறை ஹஜ் செய்துள்ளேன், தினமும் தொழுவேன், பெரிய தாடி வைத்துள்ளேன், அழகியத் தொப்பி அணிந்துள்ளேன் ஆகவே எனக்கும்தான் “மரணம்” வராது என்றோ.......................!
4. அட போங்கங்க......நான் அன்றாடம் உழைத்துச் சாப்பிடக்கூடிய பரம ஏழைங்க.........நான் யாருக்கும் எந்த பாவங்களையும் செய்யாமல் அல்லாஹ்விற்கு அஞ்சி நடப்பவனுங்கோ ஆகவே என்னை “மரணம்” அண்டவே அண்டாதுங்கோ என்றோ...................!
5. மார்க்கத்தில் பல பட்டங்கள் பெற்ற அறிவாளி நான்............தினமும் வீடும் மஸ்ஜித்மாக அல்லாஹ்வைத் தொழுதுகொண்டே இருப்பேன்.......வேண்டும் என்றால் எனது நெற்றியைப் பாருங்கள் “கருமை நிறத்தழும்பு” அதில் பதிந்து இருக்கும் என்றோ.................!
6. எனது கணவனுக்கு நல்ல பணிவிடையும், எனது பிள்ளைகளைப் நன்கு பராமரிப்பதிலும் சிறந்த பெண்ணாக விளங்குகிறேன் ஆகவே எனக்கும் “மரணம்” உடனடியாக வராது என்றோ.......................!
7. வரதட்சணையாக 100 பவுன் நகைகளோ, மனைக்கட்டு நிலத்தில் புதிய வீடோ, புதிய வாகனமோ, சீர் வரிசைகளோ என எதுவும் பெண் வீட்டிலிருந்து நான் வாங்கவே இல்லை. ஆகவே எனக்கும் “மரணம்” வராது என்றோ...................!
8. வட்டி வாங்குதல், பொய் சொல்லுதல், திருடுதல், மது அருந்துதல் போன்ற ஒழுக்கம் தவறியச் செயல்களை நான் செய்ததில்லை........ஆகவே எனக்கும் “மரணம்” வராது என்றோ...................!
என இது போன்றவற்றைச் சொல்லி மரணத்தை தள்ளிப்போட முடியாது. “மரணம்” என்பது உங்களுக்காக உறுதி செய்யப்பட்ட ஒன்று ! இம்மரணம் நிகழக்கூடிய நேரத்தையோ, நாளையோ, இடத்தையோ மாற்றி அமைக்க யாராலும் முடியாது. அது எப்போது ? எங்கே ? எப்படி ? எந்த நிமிடத்தில் ? என்பதை யாராலும் கணித்துச்சொல்லவும் முடியாது...... ஒருவனைத் தவிர அவன் “அல்லாஹ்”
மரணத்தின் நிரலாக............!
1. இனி நீங்கள் “மையத்” என்ற பெயரில் அழைக்கப்படுவீர்கள்
2. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டி அனைத்து மஸ்ஜித்களிலும் உங்களின் “மரண அறிவிப்பு” தகவல்களாக அறிவிப்புச் செய்யப்படும்.
3. உங்கள் உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைவரும் வருகை தந்து தங்களின் “மையத்” மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் (“சலாம்”) எனக் கூறுவார்கள்.
4. சுத்தமான முறையில் குளிப்பாட்டப்படுவீர்கள்
5. ஏறக்குறைய 12 மீட்டர் அளவுள்ள வெள்ளைத் துணியால் கஃபனிடப்படுவீர்கள்.
6. வீட்டிலிருந்து “சந்தூக்” எனும் வாகனத்தில் தங்களை ( மையத்தை )அதில் வைக்கப்பட்டு நான்கு சகோதரர்களால் அவர்களின் தோற்ப்பட்டையில் “சந்தூக்”கை சுமந்துவாறு கப்ர்ஸ்த்தான் நோக்கி கொண்டுச் செல்லப்படுவீர்கள்.
7. கப்ர்ஸ்த்தானில் ஆறு அடி நீளம் முன்று அடி அகலம் ஐந்து அடி ஆழத்தில் வெட்டப்பட்ட “குழி’ யில் அடக்கம் செய்யப்படுவீர்கள்.
8. உன் இறைவன் யார் ? உன் மார்க்கம் எது ? உன் வழிகாட்டி ( நபி ) யார் ? உன் தொழுகை எப்படி ? உன் நோன்பு ? உன் ஜகாத் ? உன் இறுதிக் கடமை ஹஜ் ? போன்றவற்றை எவ்வாறு நிறைவேற்றினாய் ? போன்ற கேள்விகள் கேட்கப்படுவீர்கள்..............
பதில் சொல்லத் தயாராகுங்கள்
உங்களுக்காக தொழுகை வைக்கப்படும் முன் நீங்கள் "தொழுது" கொள்ளுங்கள் !
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்......................