"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
07 ஆகஸ்ட் 2011

புதுப்பள்ளி - புதுமைகளின் பள்ளி (Part-6)

0 comments

பிரமிப்பாகத்தான் இருக்கிறது! இந்த தொடரை எழுதத் தொடங்கியதன் நோக்கம்,எங்கள் முஹல்லா புதுப்பள்ளியின் கட்டுமானச் செலவுக்கு நிதியுதவி கோருவதாகவே இருந்தது. கூடுதலாக இப்பள்ளியின் பாரம்பரிய சிறப்புகளைப் பகிர்ந்து கொள்வதோடு, முஹல்லாவின் சிற்பிகளையும் நினைவு கூர்வதாகவும் அமைந்துவிட்டது. அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக! இதுவரை குறிப்பிட்ட சிலரோடு, மேலதிகமாக சிலரையும் குறிப்பிட்டால் இத்தொடர் முழுமை அடையும் என்று நம்புகிறேன்.

6) முஹம்மது அப்துல்லாஹ் ஆலிம்: மர்ஹூம் அபூபக்கர் ஆலிமின் மூத்த மகன். முகச்சாயலில் அபூபக்கர் ஆலிம் அவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் காண்பது கடினம். அதிரையில் பிறந்தாலும் வாழ்நாளின் பெரும்பகுதியை இலங்கை காத்தாண்குடியில் கழித்துள்ளார்கள். தமிழர்கள் மட்டுமின்றி சிங்களர்களும் மதிக்கும் ஆளுமை. இலங்கைத் தமிழுடன்கூடிய இவர்களின் பயான்கள் கேட்பவர் கவனத்தை ஈர்க்கும்.


7) A.S.M.ரஹ்மதுல்லாஹ் ஹாஜியார்: இன்று நமக்கிடையேயான பஞ்சாயத்து களுக்கு மாற்று மதத்தவரை நோக்கி நம்மவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். மர்ஹூம் ரஹ்மதுல்லாஹ் ஹாஜியார் அவர்கள் உயிரோடிருந்தபோது, மீனவர்களும், கரையூர் தெரு, பழஞ்செட்டித் தெருவாசிகளும் தங்களது பிரச்சனைகளைத் தீர்க்க ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியாரின் வீட்டுக்கே வருவார்கள். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் இவர்களது ஆளுமையின் அடையாளங்கள்.

புதுப்பள்ளியின் தொடக்க காலம்:

புதுப்பள்ளி கட்டுவதற்கு 1934 ஆம் ஆண்டு மர்ஹூம் (கொப்பரைவாடி) முஹம்மது முகைதீன் அவர்கள் ஒரு பகுதியை இலவசமாக வழங்கி இருக்கிறார்கள்.அப்போது புதுப்பள்ளி கூரைப் பள்ளியாகத்தான் துவங்கப்பட்டது.

பின்னர் பள்ளிவாசலை புதுப்பித்துக்கட்ட 1945-ஆம் ஆண்டு மர்ஹூம் அஹமது ஹாஜா (தென்னம்பிள்ளைகாரர் வீடு) தனது வீட்டின் ஒரு பகுதியை (அதாவது முன்னாள் சக்கரவத்தி மெடிக்கல் மற்றும் இரத்தப் பரிசோதனை நிலையம்) ஆகியவற்றுக்குப்பகரமாக ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் வேறொரு நிலத்தை வழங்கியிருக்கிறார்கள்.

மர்ஹூம் காசியார் அவர்களின் வாப்பா, நடுத்தெரு ஒவாஜா காக்கா மற்றும் சுண்டுவீடு வகையறா நூர் முஹமது ஆகியோர் 1934 ஆம் ஆண்டு இப்பள்ளி துவங்குவதற்கு உறுதுணையாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மர்ஹூம் ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார், மர்ஹூம் அபூபக்கர் ஆலிம் குடும்பத்தினர் மற்றும் அ.மு.க, சி.மு.க குடும்பத்தினர் மற்றும் பலர் இணைந்து புதுப்பள்ளியை கட்டியுள்ளார்கள். மீண்டும் 1973-1980 க்கு இடைப்பட்ட காலங்களில் இப்பள்ளியை புதிதாகக் கட்ட, ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் தலைமையில் மொத்த செலவான Rs 80,000 த்தில் 75% அப்துல் ஜப்பார் மரைக்காயர் (அ.ஜ.) வகையறாக்களும்,25% ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் மற்றும் வாப்புவீட்டு சேனா அப்பா என்று அழைக்கப்படும் செய்து முஹம்மது இன்னும் பெயர் தெரியாதவர்கள் சிலரும் கொடுத்திருக்கிறார்கள்.

தர்பியத்துல் இஸ்லாமியா நர்சரி பள்ளிக்கு வசதியாக தனது வீட்டையொட்டிய ஒரு சந்தை, ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் அவர்கள் இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள். மேலும் பழஞ்செட்டித் தெருவிலிருந்த ஒரு வீட்டையும் ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் அவர்கள் இப்பள்ளிவாசலுக்காக இலவசமாக கொடுத்திருக்கிறார்கள். மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் A.S.M. அப்துல்காதர் ஹாஜி (ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் அவர்களின் மகன்) அவர்கள் மூலம் சொல்லக்கேட்டு, நண்பர் ஷம்சுதீன் (ரஹ்மதுல்லாஹ் ஹாஜியாரின் பேரன், AYDA அமைப்பின் தலைவர்) மூலம் கேட்டறிந்தது.

8) மர்ஹூம் மொஹிதீன் அப்துல் காதர் (உதுமான் மரைக்காயர் ஹாப்ஸா, யாகூப் காக்கா மாமா) இவர்கள் ரமழான் நாட்களில் ஒரே இரவில் தராவீஹ் தொழுகையில் குர்ஆனின் 30 ஜூஸுக்களையும் ஓதியிருக்கிறார்கள். தெரு முழுக்க ஸ்பீக்கர் கட்டி உச்ச ஸ்தாயியில் ராகமேடுத்து ஓதியது புதுப்பள்ளியில் தான் நடந்திருக்கிறது.

9) மர்ஹூம் முஹம்மது அலிய் ஆலிம்: புதுப்பள்ளி முஹல்லாவின் அடையாளங்களில் மர்ஹூம் முஹம்மது அலிய் ஆலிம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.மர்ஹூம் முஹம்மது அபூபக்கர் ஆலிம்ஷாவின் மருமகன். ஷரீஅத் சட்டங்களில் ஆழ்ந்த அறிவு. தமிழார்வம் மிக்க மார்க்க அறிஞர்களில் முஹம்மது அலிய் ஆலிம் குறிப்பிடத்தக்க ஒருவர். மெட்ராஸ் மாநகர்- சென்னை என்று மாற்றப்பட்டபோது அதை ஆங்கிலத்தில் CHENNAI என்று குறிப்பிட்டது தவறு. ஏனெனில் CHE/ச்செ என்ற ஒலியிலுள்ள சொல்/வார்த்தை தமிழில் கிடையாது என்பதால் CHENNAI என்பதை SENNAI என்பதுதான் சரி என்று கடிதம் எழுதியதாகக் கேள்விப்பட்டேன். அதிரையில் பல குடும்பங்களின் உறவுமுறைகளை நினைவில் வைத்திருந்ததோடு,வயது வித்தியாசம் பாராமல் உறவுமுறையைச் சொல்லி உறவாடும் பண்பாளர். சுருக்கமாக அதிரையின் நடமாடும் ENCYCLOPEDIA.

மேலும், இந்த முஹல்லாஹ்வைச் சார்ந்த மர்ஹூம் அப்துல் அஜீஸ் காக்கா (காங்கிரஸ் கட்சி) தமிழக அளவில் அறியப்பட்ட அரசியல் பிரபலம்.மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் 'கர்மவீரர்' காமராசருக்கு சீனியர் என்ற தகவலும் கேள்விப்பட்டுள்ளேன். அதேபோல், டைரி அப்பா, சுண்டப்பா என்றழைக்கப்பட்ட மர்ஹூம் சேக் அப்துல் காதர் மற்றும் சில சுவாரயஸ்ய மனிதர்களும் இந்த முஹல்லாஹ்வில் நடமாடியுள்ளார்கள்.இன்ஷா அல்லாஹ் நேரமும் வாய்ப்பும் கிடைக்த்தால் அவர்களைப்பற்றியும் விரிவாக எழுத முயல்வேன்.

வேண்டுகோள்: புதுப்பள்ளி கட்டுமான நிதிகோரிய பதிவு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அதிரை எக்ஸ்ப்ரஸில் வெளியாகி இருந்தது. கிட்டத்தட்ட 75% கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, துரித நிதியுதவி கிடைத்தால் இன்ஷா அல்லாஹ் விரைவில் முழுமையாகப் பூர்த்தியடையும் சாத்தியமுள்ளது. இந்தப் பள்ளியில் செயல்பட்ட மதரஸாவில் கல்வி பயின்ற மற்றும் இங்கு பிறந்து வளர்ந்த பலர் அல்லாஹ்வின் அளப்பரிய கருணையால் பல்வேறு நாடுகளில் வசதியாக இருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களின் செல்வத்தில் மேலும் விருத்தியைக் கொடுப்பானாக!

உலகில் ஓர் இறையில்லம் கட்டப்படுபதற்கு உதவியவர்களுக்காக அல்லாஹ் வாக்களித்துள்ள ஈருலகப்பேறுகள் பன்மடங்காகும் வாய்ப்புள்ள ரமளான் மாதத்தில், புதுப்பள்ளியின் கட்டுமான நிதிக்கு உங்கள் தானதர்மங்களின் ஒருபகுதியை கொடுத்து உதவும்படி முஹல்லாவாசிகள் சார்பிலும் அதிரை எக்ஸ்ப்ரஸ் குழுவினர் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் நிதிப் பங்களிப்புகளைப் பின்வரும் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கவும்.

SHADULIYA PUTHU PALLIVASAL
Account No: 115-1-12695
Dhanalakshmi Bank Ltd.,
Adirampattinam-614701.

நன்றி - வஸ்ஸலாம்

குறிப்பு: இந்த தொடருக்கு குறிப்புகள் தந்துதவையவர்கள் 1) சகோ.அபூபக்கர் 2) அபூசுஹைமா, ஜஃபருல்லாஹ் மற்றும் சகோ.சம்சுதீன்.

பதிப்பு : அதிரைக்காரன்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி