"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
08 டிசம்பர் 2011

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே புதிய அணை ஆய்வுப் பணியை தொடங்கிய ஆந்திரா

0 comments

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆய்வுப் பணியை ஆந்திர மாநில அரசு தொடங்கியுள்ளது. ரூ. 65 கோடி செலவில் இந்தப் பணிகளை அது மேற்கொள்ளவுள்ளது.

வேலூர் மாவட்ட எல்லையில், பாலாற்றின் குறுக்கே கணேசபுரம் என்ற இடத்தில் ஆந்திர மாநில அரசு அணைகட்டும் திட்டத்தை முதலில் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

தற்போது அந்த இடத்திற்கு பதிலாக புதிய இடத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் அணையை கட்டும் பணிக்கான இடத்தை தேர்வு செய்து அதற்கான அடிப்படை பணிகளை ஆந்திர மாநில அரசு தொடங்கி உள்ளது.

கர்நாடகாவில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திரா வழியாக 38 கிலோ மீட்டர் கடந்து வந்து, தமிழ்நாட்டில் 222 கிலோ மீட்டர் ஓடி செங்கல்பட்டு அருகே சட்ராஸ் எனப்படும் சதுரங்கப்பட்டினத்தில் கடலில் கலக்கிறது.

ஆந்திர மாநில முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவின் தொகுதியான குப்பம் பகுதியில் ஏற்கனவே ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை என்று 20 இடங்களில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டி உள்ளது. கர்நாடக அரசோ ஏற்கனவே 15 இடங்களில் தடுப்பணைகளை கட்டி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு வர வேண்டிய பாலாறு முற்றிலும் தடைபட்டுக் காணப்படுகிறது.

விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பாலாறையே பிரதானமாக நம்பி உள்ள வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மழை வரும்போதெல்லாம் பாலாற்றில் தண்ணீர் வருமா? என ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆற்றில் சிறிதளவு தண்ணீர் வந்தாலே அது பெரிய செய்தியாக இருக்கிறது. காரணம், ஆந்திராவும், கர்நாடகாவும் கட்டி வைத்துள்ள தடுப்பணைகள்.

ராஜசேகர ரெட்டி ஆட்சியின் போது குப்பம் அருகே உள்ள கணேசபுரத்தில் ரூ.55 கோடி செலவில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. தற்போது சிவராமபுரத்தில் ரூ.65 கோடி செலவில் அணை கட்டப்பட உள்ளது.

இதற்கான ஆய்வுப்பணிக்காக தென் ஆப்பிரிக்காவில் இருந்து என்ஜினீயர்களை வரவழைத்து குப்பம்-சந்திரபுரம் இடையே உள்ள சிவராமபுரத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை உயர் அதிகாரி ராமேஷ்முண்டா தலைமையில் பொறியாளர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கணேசபுரத்தில் அணைகட்ட இருந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானதாக இருந்தது. எனவே, கடந்த வாரம் ஆந்திர மாநில சுரங்கத்துறை மந்திரி கல்ல அருணகுமாரி, வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகளுடன் நேரில் வந்து முழுக்க முழுக்க வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தையே தேர்வு செய்து அணைகட்ட பணிகளை தொடங்கி இருப்பதால் இதில் தடை ஏதும் இருக்காது என்று நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அணைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் இதுதொடர்பாக பல்வேறு கட்டங்களில் போராட்டங்களும் நடந்துள்ளன என்பது நினைவிருக்கலாம். தற்போது முல்லைப் பெரியாறு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பாலாறு அணை விவகாரத்தை ஆந்திரா கையில் எடுத்திருக்கிறது.

முல்லைப் பெரியாறு விவகாரத்திலிருந்து தமிழகத்தின் கவனத்தைத் திருப்பும் காங்கிரஸ் கட்சியின் திட்டமா இது என்ற சந்தேகமும் மக்களிடையே எழுந்துள்ளது. ஆந்திராவிலும் தெலுங்கானா விவகாரம் விறுவிறுப்பாக உள்ளது. எனவே பாலாறு பிரச்சினையை எழுப்பி அங்குள்ள அரசியல்வாதிகளையும் திசை திருப்ப முயல்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி