"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
05 டிசம்பர் 2011

ஞாபக சக்தியை அதிகரிக்க!..

0 comments

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹுத்தஆலாவைப் போற்றிப் புகழ்ந்து, இறுதித்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலாத்தையும் ஸலாமையும் காணிக்கையாக்கியவனாக!

மறதி மனிதனது சுபாவத்துடன் பின்னிப்பிணைந்த ஓர் அம்சமாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் மறதி இருக்கின்றது. ஆயினும் ஒருவருக்கு இருக்கின்ற மறதி மற்றவருக்கு இருக்கின்ற மறதியைவிட சற்று வேறுபட்டதாக இருக்கும். அந்தவிதத்தில் சிலருக்கு மறதி அதிகமாகவும் மற்றும் சிலருக்கு குறைவாகவும் காணப்படும்.

மறதியின் மூலம் ஏற்படும் பிரதிகூலங்களை எண்ணி அல்லலுரும் மக்கள் எம்மில் பலர் உள்ளனர். அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் சிறார்களுக்கு மத்தியில் இத்தகைய பலவீனமான நிலை தொடர்வது, அவர்களது கல்வி நடவடிக்கைகளைச் சீராகக் கொண்டு செல்வதற்கு முட்டுக்கட்டையாக அமைகிறது.

எனவே, அனைவரினதும் நலம் கருதி ஞாபக சக்தியை அதிகரிக்க அஷ்ஷேய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித் அவர்கள் எமக்குத் தந்த சில ஆளோசனைகளை உங்களுடன் பரிமாற விரும்புகிறேன். அதனடிப்படையில் பின்வரக்கூடிய வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் எம்மில் ஞாபக சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும்.

· பாவமான காரியங்களை விட்டும் தூரமாகுதல்.

பாவமான காரியங்களானது, மனிதனின் உள்ளத்தில் ஞாபக மறதியை ஏற்படுத்தக்கூடியனவாக இருக்கின்றன. அவையே அறிவில் மந்த நிலையை ஏற்படுத்தவல்லனவாகவும் உள்ளன. ஏனெனில், அறிவு என்பது ஓர் ஒளியாகும். அவ்வொளியானது பாவங்கள் குடிகொண்டிருக்கக்கூடிய உள்ளத்துடன் ஒருபோதும் சங்கமிக்காது. இந்த எதார்த்;த நிலையைக் கருத்தில் கொண்டே இமாம் ஷாபி (ரஹ்) அவர்களுக்கு அவர்களின் ஆசிரியரான வகீஉ (ரஹ்) அவர்கள் உபதேசம் செய்துள்ளார்கள்.

இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
“நான் (எனது ஆசிரியரான) வகீஉ இடத்தில் என்னில் காணப்படும் ஞாபக மறதி பற்றி முறையிட்டேன். (அதற்கவர்) பாவமான காரியங்களை விட்டும் விலகிக் கொள்ளுமாறும், நிச்சயமாக அல்லாஹ்வின் அறிவு ஒளிமயமானது என்றும், அது பாவியான ஒருவனுக்குக் கொடுக்கப்படமாட்டாது என்றும் கூறி உபதேசித்தார்.”

ஒரு மனிதர் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) அவர்களிடத்தில் சமுகம் தந்து, “அபூ அப்தில்லாஹ்வே! இம்மனன சக்திக்குப் பொருத்தமாக (ஏதாவது) ஒரு விடயம் இருக்கின்றதா? என வினவினார்கள். அதற்கு இமாமவர்கள், அவ்வாறு அதற்குப் பொருத்தமான ஒரு விடயம் இருக்குமென்றால் பாவங்களைக் களைதல் என்ற அம்சத்தைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது” என பதிலளித்தார்கள். (அல்ஜாமிஉ லில் ஹதீப்: 387/2)

பொதுவாக ஒரு மனிதன் தனது செயற்பாடுகளில் பாவங்களைக் கலக்கும் போது, அப்பாவங்கள் அவனை ஆட்கொண்டுவிடுகின்றன. ஈற்றில் அதன் பேறாக கைசேதம், கவளை ஆகியன அவனில் சங்கமமாகின்றன. அவனது சிந்தனைகள் அனைத்தும் அப்பாவமான காரியங்களைப் பற்றியதாகவே மாறிவிடும். மேலும், அவற்றிக்காக அதிகமான காலத்தைச் செலவிடுவான். முடிவில் அவன் மனனமிட்ட அனைத்து விடயங்களும் விலாசமற்றுப் போன நிலைக் தள்ளப்படுவான்.

· அதிகமாக அல்லாஹ்வை ஞாபகப்படுத்த வேண்டும்.

ஞாபக சக்தியை அதிகரிக்க சிறந்த வழிகளில் ஒன்றாக அல்லாஹ்வை அதிகமாக ஞாபகப்படுத்தல் கருதப்படுகின்றது. இதனையே அல்லாஹ் பின்வரக்கூடிய திருக்குர்ஆன் வசனத்தில் பிரஸ்தாபிக்கின்றான்.

“நீர் மறந்து விட்டால் (ஞாபகம் வந்ததும்) உமது இரட்சகனை நினைவு கூர்வீராக!” (அல் கஹ்ப்: 24)

· அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ந்து கொள்ளல்.

ஞாபக சக்தியை அதிகரிக்க நாடுபவர் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அதிகமாகச் சாப்பிடுவது, அதிக தூக்கம், புத்தியில் மந்த நிலை, மற்றும் சோம்பரத் தன்மை போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். அத்தோடு, பல்வேறுபட்ட உடல் நோய்களுக்கும் அதுவே காரணமாக அமைகின்றது. இதனையே ஓர் அறபிக்கவிஞன் பின்வருமாறு கூறுகின்றான்.

“நிச்சயமாக நீர் காணும் அதிக நோய்கள் உணவில் இருந்து அல்லது குடிபானத்தில் இருந்து உண்டாகின்றன” என்கிறான்.

· ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளைப் பரிமாறல்.

சில அறிஞர்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிவகைகளைப் பற்றிப் பேசும் போது சில உணவு வகைகளைச் சுட்டிக்காட்டி அவற்றைப் பரிமாறுவதன் மூலம் ஞாபக சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்கள். அந்த விதத்தில்,

1. தேன் குடித்தல்
2. காய்ந்த திராட்சை அல்லது காய்ந்த அத்தி சாப்பிடுதல்
3. சில பால் வகைகளைக் குடித்தல்

போன்ற உணவு வகைகளைக் குறிப்பிடலாம்.

இமாம் ஸுஹ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “நீ தேனைப் பற்றிப் பிடித்துக் கொள், நிச்சயமாக அது சிறந்த மனன சக்திக்கு வழிவகுக்கும்.”
மற்றோர் இடத்தில் கூறும் போது: “யார் ஹதீஸை மனனமிட விரும்புகிறாரோ, அவர் காய்ந்த திராட்சை அல்லது அத்;தியை சாப்பிடட்டும்” என்கிறார். (அல்ஜாமிஉ லில் ஹதீப்: 394/2)

இப்றாஹிம் என்ற அறிஞர் கூறும் போது: “நீங்கள் பாலைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அது உள்ளத்தை உட்சாகப்படுத்தும், மறதியைப் போக்கும்” என்கிறார். (அல்ஜாமிஉ லில் ஹதீப்: 397/2)

மேலும், சில அறிஞர்கள் அதிகமாக அமிலப்பதார்த்தங்களைப் பரிமாறுவது புத்தியில் மந்த நிலையை ஏற்படுத்தும் என்றும் மனன சக்தியைக் குறைக்கும் என்றும் கூறியுள்ளனர்.

· தலையில் இரத்தம் குத்தி எடுத்தல்.

இச்செயன்முறைக்கு அறபியில் அல்ஹிஜாமா என்று வழங்கப்படும். ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கு இரத்தம் குத்தி எடுப்பது சிறந்தது என்று பலரும் தத்தமது அனுபவங்களை முன்வைத்துக் கூறியுள்ளனர். இது தொடர்பான விரிவான தகவல்களை இப்னுல் கையிம் (ரஹ்) அவர்களின் நூலான அத்திப்புந் நபவி என்ற நூலில் காணலாம்.

எனவே, இத்தகைய வழிமுறைகளைப் பேணி நாமும் நமது ஞாபக சக்தியை அதிகரித்து அவற்றை அல்லாஹ்வினுடைய மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காகப் பயன்படுத்த எனக்கும் உங்களுக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

மௌலவி M.T.M.ஹிஷாம் மதனீ

எம். டீ. எம். ஹிஷாம் (ஸலபி, மதனி)

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி