என்னைச் சாய்த்துவிட்டு
நீ சாய்ந்துக்கொள்ளச்
சாய்மானம்;
வெட்டிவிட்டு;
நல்லவிலைக்கு விற்றுவிட்டுப்
பெற்றுக்கொள்வாய் வெகுமானம்!
காவலுக்கு நான்
உன் வீட்டுக் கதவாக;
இமைத் தட்டும் உறக்கத்திற்கு
உன்னைத் தாலாட்டும்
கட்டிலாக!
உன் குழந்தைகள்
கட்டிப்பிடித்து விளையாட
நண்பனாய்;
முத்தமிடும் வியர்வையை
முதுகில் தட்டிவிட்டு
வழியனுப்பும் நிழலாய்!
ஓட்டைவிழும்
ஓசோனுக்கு மாற்று
மருந்தாய்;
கூடுக்கட்டிக் குடிவாழும்
குருவிகளுக்கு வீடாய்!
கொடுத்தேப் பழகிய எனக்கு;
கேட்க வெட்கமாய்தான்
இருக்கிறது;
வெட்டுங்கள்;
வெட்டுவதற்கு முன்னே
ஒருச் செடியாவது நட்டுவிடுங்கள்!
ஆக்கம் : - யாசர் அரபாத்