சுகாதார பழக்கவழக்கங்களை கைக்கொண்டு சுகவாழ்வு வாழ்வோம்.
இன்று ஏப்ரல் 7ஆம் திகதி உலக சுகாதார தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (World Heath Organization – WHO ) தொடங்கப்பட்ட நாளைக் கொண்டாடும் அதேவேளை உலகெங்கும் சுகாதாரம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனம் செய்து வரும் பணிகளை நினைவுகூரும் தினமாகவும் இது திகழ்கிறது.1948ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் முதல் கூட்டம் நடைபெற்ற போது ஏப்ரல் ஏழாம் திகதியை உலக சுகாதார (நலவாழ்வு) தினமாகக் கொண்டாட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 1950ஆம் ஆண்டு முதல் இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்னும் பழமொழி எமது உடல் நலனின் தேவையை பளிச்சென்று விளக்குகிறது. நோய்களின் கூடாரமாகி விட்ட மனிதனுக்கு சொத்துகள் எத்தனை இருந்தாலும் நிறைவு தருவதில்லை. ஆரோக்கிய வாழ்வே அனைவரும் வேண்டுவது. எனவே இத்தினத்தில் 50 முக்கிய சுகாதாரக் குறிப்புகளை யாவரும் சுகவாழ்வு வாழ வேண்டி தர விழைகின்றோம்.
1. ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை விடியற்காலையில் செய்து வாருங்கள். உடல் சுறுசுறுப்படையும். நாம் உண்ணும் உணவின் சத்து உடலின் எல்லா இடங்களுக்கும் பரவும்.
2. உடற்பயிற்சி செய்வதுடன் உங்கள் உணவுப் பழக்கத்திலும் சிறு மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். பெரும்பாலான உணவு காய்கறிகள் மற்றும் பழங்களாக இருக்கட்டும். மாற்றத்தை விரைவிலேயே உணர்வீர்கள்.
3. அதிகமாகத் தண்ணீர் குடியுங்கள். விடியற்காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ஒரு லீற்றர் தண்ணீர் குடிப்பவர்களை நோய்கள் நெருங்காது.
4. நன்றாகத் தூங்குங்கள். குறைந்தபட்சம் எட்டு மணிநேரம் தவறாமல் தூங்குங்கள். மதியம் அரை மணிநேரம் குட்டித் தூக்கம் போடுவதும் உடலுக்கு நல்லது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
5. உடலுக்கு என்னென்ன சத்து தேவையென்பதை அறிந்து உண்ணுங்கள். அதிக கொழுப்பு, எண்ணெய்ப் பொருட்களை தவிர்க்கவும். பல நிற காய்கறிகளில் பல வகை குணங்கள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
6. உடல் எடையைக் கவனித்துக் கொள்ளுங்கள். அதிக எடை இருப்பதாக உணர்ந்தால் அதை கண்டிப்பாகக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
7. உடல் எடையை உடற்பயிற்சியின் மூலமாகவும், உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலமும் மட்டுமே குறைக்க வேண்டும். பட்டினி கிடப்பதும், மாத்திரைகள் உட்கொள்வதும் ஆபத்தானவை.
8. அளவாக உண்ணுங்கள். இடைவெளிகளில் கொறிப்பதை நிறுத்துவது மிகவும் முக்கியம். உணவு உட்கொள்ளும் முன் சற்று தண்ணீர் குடிப்பது அதிகமாய் உண்பதைத் தடுக்கும். 9. ஆயுர்வேதம் என்னும் பெயரில் விற்கப்படுவதெல்லாம் உடல் நலத்துக்கு நல்லது என்னும் மாயை எம்மிடம் உண்டு. அதை விட்டு விடுதல் நலம்.
10. தாய்மை நிலையில் இருப்பவர்கள் உணவுப் பழக்கத்தை மருத்துவர் அனுமதியின்றி மாற்றுதல் கூடாது.
11. ஈரல், கிட்னி போன்றவற்றையும், மாமிச உணவில் தோலையும் தவிர்ப்பது நல்லது.
12. உடல்நலம் சரியில்லாமல் மருந்து உட்கொள்கிறீர்கள் எனில் மருத்துவர் சொல்லும் அளவில் மருந்தை உட்கொள்ளுங்கள். ஒரு வாரம் மருந்து சாப்பிடச் சொன்னால் நோய் குணமானதாய்த் தோன்றினாலும் ஒரு வாரம் சாப்பிடவேண்டும். இல்லையேல் அந்த நோயின் கிருமிகள் முழுதும் அழியாமல் திரும்பவும் வீரியத்துடன் தாக்கக் கூடும்.
13. மருந்துகளுக்கு ஏதேனும் எதிர்வினை உண்டா என மருத்துவரைக் கேட்டுத் தெரிந்து கொள்தல் நலம் பயக்கும்.
14. எலுமிச்சைச் சாறு உடலுக்கு நல்லது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்தும் அது நம்மைப் பாதுகாக்கும்.
15. நன்றாக மென்று உண்பதும், மென் பானங்களைத் (கோக், பெப்சி போன்றவை) தவிர்ப்பதும் அவசியம்.
16. மது அருந்துதல், புகை பிடித்தல், மன அழுத்தம் போன்றவை பல்வேறு நோய்களை சம்பாதித்துத் தரும். அவற்றை விலக்குதல் மிகவும் அவசியம்.
17. ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று முழுப் பரிசோதனை ஒன்றைச் செய்து கொள்வது பலன் தரும்.
18. தினமும் அரை மணி நேரம் நடப்பது உடல் எடை அதிகரிக்காமலும் உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுவதுடன் இதய சம்பந்தமான நோய்கள் வருவதிலிருந்தும் பாதுகாக்கிறது.
19. எதையேனும் எடுக்கக் குனியும்போது உட்கார்ந்து எழுந்து எடுப்பது தசைகளை வலுவாக்கும். முடிந்தவரை உடலிலுள்ள தசைகளுக்கு ஏதேனும் பயிற்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
20. வரிசையில் காத்திருக்க நேர்ந்தால் ஒரு காலை தரையில் ஊன்றி மறுகாலை அரை அங்குலம் தரைக்கு மேலே தூக்கி நில்லுங்கள். இப்படி மாற்றி மாற்றி செய்வது கால்களை வலுவாக்கும்.
21. நட்புடன் கட்டித் தழுவுதல் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
22. தினமும் அவ்வப்போது ஐந்து நிமிட நேரம் மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளிவிடுங்கள்.
23. பழத்தை உண்பதும், பழச் சாற்றை உண்பதும் ஒரே பலன் என்று பலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பழத்தை உண்பதே மிகச் சிறந்தது.
24. கார்போஹைதரேட்டுகள் தேவையற்றவை எனும் மாயையை விட்டு விடுங்கள். அது மிகவும் முக்கியமானது!
25. அளவுக்கு அதிகமாய் உண்ணாதீர்கள். உண்பது பசியை அடக்கவே. வயிற்றை அடைக்க அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
26. எமது ஆரோக்கியத்தில் ஒரு கால்பகுதி மட்டுமே எமது பெற்றோராலும், பரம்பரையாலும் நிர்ணயிக்கப்படுகிறது. மற்றவை எம்மால் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
27. மிச்சமாகிறது என்பதற்காக உண்பது மிகவும் ஆபத்தானது. குறைவாக உண்பதே ஆரோக்கியமானது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
28. மூன்று வேளை வயிறு முட்ட உண்பதை விட அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாய் ஆரோக்கியமான உணவுகளை உண்பது நல்லது. 29. அதிகாலை வெயிலில் சற்று நேரம் நடப்பது நல்லது. குறிப்பாக முதியவர்களுக்கு அது மிகவும் நல்லது. உடலுக்குத் தேவையான விற்றமின் டி இதன் மூலம் கிடைக்கிறது.
30. தினமும் சற்று நேரம் உடற்பயிற்சி செய்வது எலும்புகள் வலுவடையவும் உதவும். இது வயதானவர்களுக்கு வரும் எலும்பு உடைவுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கும்.
31. அருகிலுள்ள கடைகளுக்குச் செல்லும்போதும், அலுவலகம் செல்லும்போதும் எப்போதெல்லாம் நடக்க வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நடவுங்கள்.
32. ஓய்வாக இருங்கள். மனதை இலகுவாக்கி, தியானம் போன்ற ஏதேனும் ஒன்றைப் பயிற்சி செய்து பாருங்கள். ஓய்வான மனம் ஆரோக்கியமான உடலைத் தரும்.
33. சமூகத்தோடு இணைந்து வாழுங்கள். தனி மரமாய் வாழ்பவர்களை விட மற்றவர்களோடு இணைந்து வாழ்பவர்கள் அதிக காலம் வாழ்வதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
34. ஆனந்தமாய் இருங்கள். வாழ்க்கை சோகங்களைச் சுமக்கும் கழுதையல்ல, இலட்சியங்கள் ஆனந்தம் தருபவையாய் இருக்கட்டும்.
35. மூளைக்கு வேலை தரும் புதிர்ப் போட்டிகள் போன்றவற்றிலும் கவனம் செலுத்துங்கள். அது மூளையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளும்.
36. தேவையான தடுப்பு மருந்துகளை சரியான நேரத்தில் போட்டுக் கொள்தல் வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசிகளைப் போடுதலில் அலட்சியம் கூடவே கூடாது.
37. மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபட வேண்டும். மனதை ஆனந்தமான நிகழ்வுகளின் பால் திருப்புதல் பயன் தரும்.
38. உங்கள் பழக்கவழக்கங்களை மருத்துவர் ஒருவரிடம் சொல்லி உங்களுக்கு வர வாய்ப்புள்ள இன்னல்கள் பற்றிய தெளிவை ஏற்படுத்திக் கொள்தல் நலம்.
39. உங்கள் உயிரையும், உடலையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். போக்குவரத்து விதிகள் முதல் உணவு விதிகள் வரை கவனமுடன் பின்பற்றுங்கள்.
40. உங்கள் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறதா என்பதைக் கவனமுடன் கண்காணியுங்கள். அது பலவிதமான நோய்களுக்கு ஆளாக்கி விடும்.
41. உடலுக்கு உடற்பயிற்சி கொடுக்கும்போது கண்களுக்கும் பயிற்சி கொடுக்க மறக்காதீர்கள்.
42. லிப்ட்டில் பயணிப்பதைத் தவிர்த்து படிகளில் ஏறி இறங்குங்கள்.
43. நாய் வளர்ப்பீர்கள் என்றால் அதைக் கூட்டிக் கொண்டு சற்று தூரம் நடக்கலாம்.
44. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் பற் தூரிகையை மாற்றுங்கள்.
42. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டே உணவு உண்பதைத் தவிருங்கள்.
43. குழந்தைகள் வீட்டில் இருந்தால் அவர்களுடன் சற்று நேரம் நடனமாடி விளையாடுங்கள்.
44. தினமும் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழும்புங்கள்.
45. வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருங்கள், அல்சீமர் போன்ற நோய்கள் ஓடிவிடும்.
46. தினமும் அமைதியாய், மெதுவாய் குளியுங்கள்.
47. இரவு உணவை தாமதப்படுத்தாதீர்கள். எட்டு மணிக்கு முன் உண்ணுங்கள்.
48. தினமும் ஒரு பழம் உண்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
49. நார்ச்சத்துள்ள காய்கறிகள், தானியங்கள் என்பவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
50. மன்னிப்பு, பொறுமை, மனிதநேயம் போன்ற உயரிய பண்புகளை மனதில் ஆழமாய்ப் பதியுங்கள்.
ஆரோக்கியம் என்பது நோயற்ற நிலை அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தினசரி வாழ்வின் பாகமாக்கிக் கொண்டு வாழ்வோம். ஆரோக்கிய வாழ்வை எமக்கு அளித்து வருகின்ற சுகாதாரத்தைப் பேணுவோம். வாழ்க்கை வாழ்வதற்கே.
Engr.Sulthan
It is Usefull information !
Thanks to Adirai Fact