08 ஆகஸ்ட் 2011
உயர் அழுத்தத் தொழிற்சாலைகளுக்கு இரவு நேர மின்வெட்டு 20 சதம் குறைப்பு: ஜெயலலிதா
சென்னை: உயர் அழுத்தத் தொழி்ற்சாலைகளுக்கு இன்று முதல் இரவு நேர மின்வெட்டு 20 சதவீதம் குறைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் மின் நிலைமை, நாளுக்கு நாள் மோசமடைந்து, அனைத்து தரப்பு மின் நுகர்வோர்களுக்கும் பல மணி நேர மின் தடை அமலில் இருந்தது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.
வீட்டுப் பயனீட்டாளர்களுக்கு, சென்னை மாநகரத்தில் 1 மணி நேர மின் தடையும்; மாநிலத்தின் பிற பகுதிகளில் 3 மணி நேர மின் தடையும் நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது இருந்தது என்பதையும் இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.
எனது தலைமையிலான, அதிமுக அரசு பொறுப்பேற்ற உடன், மின் நிர்வாகத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக, சென்னை நீங்கலாக மாநிலத்தின் பிற இடங்களில் இருந்த மூன்று மணி நேர மின் தடை, 1.7.2011 முதல் 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
உயர் அழுத்தத் தொழிற்சாலை மற்றும் வணிகப் பயனீட்டாளர்களுக்கு தேவை மற்றும் பயனீட்டு அளவில் 20 விழுக்காடு மின் தடை அமலில் இருந்து வந்தது. உச்சக்கட்ட நுகர்வு நேரமான மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலத்தில், அனைத்து உயர் அழுத்தத் தொழிற்சாலைகளுக்கும் மின் வாரியக் கட்டமைப்பிலிருந்து 10 விழுக்காட்டிற்கு மிகாமல் விளக்கு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காக மின்சாரம் கடந்த 20.8.2010 முதல் வழங்கப்படுகிறது. அதாவது, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான உச்சக்கட்ட நுகர்வு நேரத்தில், உயர் அழுத்தத் தொழிற்சாலைகளுக்கு 90 விழுக்காடு மின் தடை அமல்படுத்தப்பட்டு வந்தது.
தற்போதும், உயர் அழுத்தத் தொழிற்சாலைகள் மற்றும் வணிகப் பயனீட்டாளர்களுக்கு இந்த மின் கட்டுப்பாட்டு முறைகள் நடைமுறையில் உள்ளன.
காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தின் மொத்த உற்பத்தித் திறன், 6,007 மெகாவாட் ஆகும். ஆனால், காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் எப்போதும் ஒரே அளவில் கிடைப்பதில்லை. காற்று அதிகமாக உள்ள ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில், அதிலும், காற்று அதிகமாக வீசக்கூடிய நேரங்களில், காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் அதிக அளவில் இருக்கும்.
இவ்வாறு காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு, மின்சாரத் தேவை குறைவாக உள்ள இரவு நேரங்களில் தான் அதிகமாக கிடைக்கும். எனவே, பல நேரங்களில் இவ்வாறு கிடைக்கக் கூடிய மின்சாரத்தைப் பயன்படுத்த இயலாமல் போய் விடுவது உண்டு. இதன் காரணமாக, காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்போர், அந்த மின்சாரத்தை, விற்க இயலாத நிலை ஒரு பக்கமும், மின்சாரத் தேவை உள்ளோர் அதனைப் பெற இயலாத சூழ்நிலை ஒரு பக்கமும், நிலவுவது உண்டு.
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து வைக்க இயலாது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். எனவே, மின்சாரத் தேவை குறைவாக உள்ள நேரங்களில் கிடைக்கப்பெறும் அதிக அளவு மின்சாரத்தை, தேவை உள்ளவர்களுக்கு வழங்குவது தான் சிறந்த மின் நிர்வாகம் ஆகும்.
ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் காற்றாலை மூலம் இரவு நேரங்களில் பெறப்படும் அதிக அளவு மின்சாரத்தை தற்போது பயன்படுத்த எனது தலைமையிலான அரசு ஒரு செயல் திட்டத்தை வகுத்துள்ளது.
இதன்படி, காற்றாலை மூலம் இரவு நேரங்களில் பெறப்படும் சுமார் 100 மெகாவாட் மின்சாரம், உயர் அழுத்தத் தொழிற்சாலைகளுக்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை 20 விழுக்காடு மின் தடையை விலக்கிக் கொண்டு வழங்கப்படும். காற்றாலை மூலம் இவ்வாறு பெறப்படும் மின்சாரம் முழுவதும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதால், தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் இந்த மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ள இசைவு தெரிவிப்பவர்களுக்கு இது வழங்கப்படும்.
இந்த செயல் திட்டம் இன்று, அதாவது, 8.8.2011 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம், உயர் அழுத்தத் தொழிற்சாலைகளுக்கு சுமார் 100 மெகாவாட் அளவுக்கு நிவாரணம் கிடைப்பதுடன், காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்பவர்கள் அந்த மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்பதன் மூலம் பயன் பெறுவர்.
மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் மின் தேவை மற்றும் மின் பயனீட்டு அளவுக் கட்டணமாக சுமார் ரூ. 10 கோடி வருவாய் ஈட்டும் என்பதையும் தெரிவித்துக்கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
நன்றி :தட்ஸ்தமிழ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி