மாமியார் வீட்டு மாப்புளையும் பொறந்த வீட்டு மருமகளும் மற்றும் பல...
பக்கத்து வீட்டு பாத்திமா: அஸ்ஸலாமு அலைக்கும். உன்ன பாக்க முடியலயே! எங்கே போயிருந்தா?
எதிர்வீட்டு நபீஸா: என்னட பழய ஸ்கூலு தோழி வூட்டுக்குப் போயிட்டு வந்தேன். அவள்ற மாமியாவுக்கும் அவளுக்கும் பிரச்சனை இருந்துச்சு. அதான் கொஞ்சம் புத்திமதி சொல்லிட்டு வந்தேன். ரெண்டு நாள் இருந்துட்டு போக சொன்னாள். மாப்புள ஊருல இல்லையா... அதான் புள்ளையயியும் கூட்டிட்டு ரெண்டுநாள் இருந்துட்டேன்
பக்கத்து வீட்டு பாத்திமா: என்னா பிரச்சனையாம்?
எதிர்வீட்டு நபீஸா: எல்லா வூட்லயும் உள்ளதுதான். மாமியார் என்றால் மருமவல கொடுமைப் படுத்துவாங்கன்னு மருமவ நெனைக்கிறது. மருமவன்னா மாமியார மதிக்க மாட்டா, மாப்புளய கைக்குள்ள போட்டுக்குடுவா, புள்ளைய நம்மள உட்டுப் பிரிச்சிடுவான்னு எண்ணுவது... இப்புடித்தானே பிரச்சனை வருது.
பக்கத்து வீட்டு பாத்திமா: ஆமாண்டி நீ சொல்ற மாதிரி அவ்வோ சொல்றத இவ்வோ புரிஞ்சிக்கிட மாட்டங்க. இவ்வோ சொல்றதே அவ்வோ புரிஞ்சிக்க மாட்டங்க. மருமவளும் மாமியாவும் எலியும் பூனையுமா மாறிடுறாங்க. மாமியார் மருமவள பத்தி மவனிடம் சொல்லறது. மருமவ மாமியார பத்தி மாப்பிளைட்ட ஏத்தி உடுறது.
எதிர்வீட்டு நபீஸா: பாவம்டி இந்த விஷயத்துல ஆம்புளையளுவ பாடுதான் திண்டாட்டம். இங்கிட்டு உம்மாட பேச்ச கேக்குறதா, பொண்டாட்டி பேச்ச கேக்குறதான்னு மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க. வருசத்துக்கு ஒரக்க லீவுல வந்தா, இந்தப் பிரச்சினைக்காக பஞ்சாயத்து பண்ணவே நேரம் சரியாப்போயிடும். அப்டித்தான் ஒருத்தி மாப்பிள்ளைட உம்மா பத்தி நிறைய கம்ப்ளேண்டு பண்ணாலாம். அவ்வோ மாப்புள்ள கேக்கவே இல்லையாம். நீங்க என்னாங்க ஒன்னும் கேக்க மாட்டங்றியண்டு கோபமா கன்னத்திலே அரை உட்டது போலே சத்தம் போட்டாளாம். மாப்ள அதோட பெட்டி பாம்பா அடங்கிட்டார்.
பக்கத்து வீட்டு பாத்திமா: எல்லா ஆம்புளயும் இப்படித்தான் பொண்டாட்டிட்டே அடங்கி போறாங்க. இல்லாட்டி ஆம்புளைல்வோ உம்மா பேச்ச கேட்டுகிட்டு வெளுத்துக் கட்டுவாங்க.
எதிர்வீட்டு நபீஸா: நாஞ்சொன்னேன் அவ்வோ மாமியாட்ட, உங்க மருமவள மகளா நினைச்சிக்கோங்க. உங்க அக்கம்பக்கம் உள்ள சில பேர் உங்ககிட்ட இவ உன் மவன கைக்குள்ள போட்டுக்குடுவா.... அப்டி இப்டின்னு வேற என்னவெல்லாம் சொல்லுவாங்க. அதெல்லாம் இந்த காதுல வாங்கி அந்த காதல உட்டுடுங்க. உங்க மருமவள்ட நானும் உம்மா மாதிரிதான் நீயும் எனக்கு மகள்தாண்டு சொல்லிப் பாருங்கன்னு சொல்லி வச்சிருக்கிறேன்.
பக்கத்து வீட்டு பாத்திமா: இந்த மாதிரி பிரச்சனைல இதுமாதிரி நடந்துக்கிட்டா, இன்ஷா அல்லாஹ் எந்த விதமான பிரச்சனையும் வராது தெரிஞ்சிக்கோ. மாமியா மருமவ வீட்டுக்கு வந்தவுடன் எல்லா வேலயயும் அவள்ட கொடுத்துட்டு, டிவி சிரியல் பார்ப்பது, பக்கத்து வீட்டுல உள்ளவங்களிடம் தேவ இல்லாத பெரும் பேச்சு பேசுவது நல்லதல்ல. அவளோடு நீங்களும் வேலைகளை ஆதரவாய் பகிர்ந்துக்குங்க. அப்புடி செஞ்சா வீட்டு வேலையள தன்னால செய்வாள். நீங்களும் முடிஞ்சா ஒக்கதக்க உதவுங்க. ஒரு சேஞ்சுக்கு இதை செஞ்சு பார்க்கலாமே....
எதிர்வீட்டு நபீஸா: டிவி சிரீயல் பாக்குறதயும் நிறுத்தனும். அதுல வர்ர மாமியாருலாம் ஒரு மாதிரியா இருக்கிறாக. நம்ம பொம்புளையலுவலும் அத தன் வாழ்க்கயோடு ஒப்பிட்டுக்கிறது. நீங்க மனசுல என்ன எண்ணுறியலோ அதுபோலத்தான் வாழ்க்கயும் அமையும். தாயானவள் தன் மகன் தன்னுடன் கடைசிவர தனக்கு துணையா இருக்கனும்னு என்று நினைப்பாள். பொண்டாட்டிக்காரி தன் கணவன் எப்போதும் தன்னுடன் இருக்கணும், தன் பேச்சை மாத்திரம் கேட்கனும்னு நெனைக்காதிய.
பக்கத்து வீட்டு பாத்திமா: வயசான எல்லா மாமியா - மாமனாரும் எதிர்பார்ப்பது அமைதியான வாழ்க்கயயும் ஓய்வையும்தான். அதுக்கு எந்த பங்கமும் ஏற்படுத்தாதீங்க. வயசானாலே உடல் ரீதியான தொந்தரவுகள் நெறய வரும். அந்த நேரத்துல, மாமியாவுக்கு ஒரு மகளா நின்னு பணிவிடை செஞ்சா அந்த வயசான உள்ளம் உங்களை பாராட்ட வார்த்தை தெரியாமல் மகிழ்ச்சியில் தவிக்கும்.
எதிர்வீட்டு நபீஸா: நீ சொன்னது சரிதான்...!!! சில மாமியா வூட்டுக்கு போகும் மாப்பிள்ளை கத தெரியுமா?...!!! பொண்டாட்டி வூட்டுல பணமும் வாங்கிட்டு, யாரு சொல்றதையும் கேக்காமே பணத்தை வீண் அடிச்சிட்டு, சம்பாரிக்க போகம, எனக்கு அது வாங்கி வேணும் இது வாங்கி வேனும்னு பொண்டாட்டிய அநியாயம் பண்ணுறாங்க. இப்படியெல்லாம் கேக்க வெக்கமாயில்லே. நீங்களே சொல்லுங்க.....!!! சில பேர் பொண்டாட்டி பேச்ச கேட்டுக்கிட்டு உம்மா, வாப்பாவே நடுத்தேருல உட்டுறாங்க. தாய்ட பதுவா பேரு மட்டும் வாங்க கூடாது.
பக்கத்து வீட்டு பாத்திமா: சரி இருக்கட்டும் நபீஸா...!!! வீட்டு வரி, சமையல் கேஸ் வரி, அத்தியாவசிய சாமான் மீது வரிய மீண்டும் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு போட்டாங்கலாம். அந்த ஆட்சி வந்தால் வில குறையும்; இந்த ஆட்சி வந்தால் விலைக் குறையும்னு சொல்றதுலாம் சும்மா வெறும் பேச்சு.
எதிர்வீட்டு நபீஸா: இது சொல்றியலே! இனிமேல் மனக்கட்டு வாங்குறதுண்டா தலய அடமானம் வைக்கணும் போல...
பக்கத்து வீட்டு பாத்திமா: யாண்டி பொஸ்குன்னு இப்புடி சொல்றா?
எதிர்வீட்டு நபீஸா: நம்மூருல வூடு புரோக்கர்லாம் சேர்ந்து மனை வெலைய ஏத்திவச்சிக்கிறாங்க. முன்னாடி 40க்கு 60 நெலம் வாங்குறதா இருந்தா ஒரு லட்சம்; இல்லாட்டி ரெண்டு லட்சம் இருந்தா வாங்கிடலாம். வரி கொஞ்சம் காசு தான் வரும். இப்போ வூடு புரோக்கர் வெலய ஏத்தி வச்சி, பெரிய பெரிய நாட்டுல இருந்து சம்பாரிகிறாகல்ல அவங்கள்ட விக்கிறாங்க.
பக்கத்து வீட்டு பாத்திமா: பெரிய நாட்டுல உள்ளவங்களும் ரொம்ப கஷ்ட்டப்பாட்டுதானே சம்பாரிக்குறாங்க. அத வீணா செலவு செய்யக் கூடாதுன்னுதானே மனய வாங்கி போடுறாங்க.
எதிர்வீட்டு நபீஸா : இது மத்தவங்களயும் பாதிக்குது. வூடு வாங்கனும்னு தேவ இல்லாதவங்களும் வாங்குறதால புரோக்கர்மாருவ வெலய கூட்டி விக்கிறாங்க. அதனால தேவ உள்ளவங்க வாங்க முடியல. அப்படியே வாங்குனாலும் கூடுதல் வெல குடுத்துதான் வாங்க முடியுது.
பக்கத்து வீட்டு பாத்திமா: இனிமேலாவது நாம எல்லாரும் சேந்து மனக்கட்டை அதிகவிலை விக்கிறவங்கள்ட வாங்காம புறக்கணிப்போம்.
எதிர்வீட்டு நபீஸா: நீ சொல்றது சரிதான் பாத்திமா ராத்தா. ஆனா யாரு ஒத்துழைப்பாங்க?
பக்கத்து வீட்டு பாத்திமா: என்னா செய்றது ஒன்னும் புரியல நபீஸா. நானும் நெலம் வாங்குனும். லட்ச ருபாயிக்கு நெலம் வாங்குனா ஒம்பதாயிரம் வூட்டு வரி கட்டுனுமாம். அஞ்சி லட்சத்துக்கு நாப்பத்தி ஐயாயிரம் ருவா. இதுக்கு அப்பறம் வூடு கட்டனும். என்னா செய்றது ஒண்ணும் புரியலை...!!! இப்படியல்லாம் எல்லாத்துக்கும் நாம தலய ஆட்டிக்கிட்டு இருக்க முடியாது. தமிழ் நாட்டுல ஒட்டு மொத்த பெண்கள் ஒன்று சேர்ந்து இதுக்கு சரியான முடிவு எடுக்குனும்டி.
எதிர்வீட்டு நபீஸா: முதல்வர் செல்வி ஜெயலலிதா சொன்ன வாக்குறுதிய காப்பாத்தும் வகையில் முதியோருக்கு உதவித்தொகை 500 ரூயாய உயர்த்தி 1000 ரூபாய் ௬டுதல் தொகையாக கொடுக்குறாங்க. உங்கூட்ல யாருக்கும் பதிஞ்சியலா. ஸ்கூல் புள்ளைக்கெல்லாம் காலேர்சிப் கொடுக்குறகலாம்.
பக்கத்து வீட்டு பாத்திமா: எங்க உம்மாக்கு பதிய நம்ம வார்டு மெம்பருட்டக் கொடுத்திருக்கேன். அப்படியே கலைஞர் காப்பீட்டுத் திட்டத்த கேன்சல் பண்ணிட்டு, ஏதோ ஒரு காப்பீடு திட்டம் கொண்டு வர்றாகலாம். அதயும் பதியக் கொடுத்திருக்கேன். போட்டாவும் ௬ப்பன் ஜெராக்சும் கேட்டாக. கொடுத்துட்டு வந்தேன்.
எதிர்வீட்டு நபீஸா: காக்கா மொவனுக்கு ஸ்காலர்சிப் தருவாங்கன்னு சொன்னாங்க. அதுக்கு ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் எல்லாம் கேட்டாக. பட்டுக்கோட்டைலதான் கெடக்கிம்னு சொன்னாங்க. அங்க போனாக்கா ஒரு ஆபிசரு என்னாமா இழுத்தடிக்கிறார் தெரியுமா?
பக்கத்து வீட்டு பாத்திமா: நம்ம பொம்பளையல்வோ எழுத படிக்க தெரியாட்டியும் எப்டியோ பாரத்தை எழுதிடுறாங்க. இது சரி இல்லே. அது சரி இல்லேன்னு சொல்லி காலைலேந்து சாய்ந்தரம் வரைக்கிம் அங்கய ஒட்கார வக்கிறாங்க. இதுக்கு யாராச்சும் நடவடிக்கை எடுத்தா தேவல. நம்மூருல ஒரு கவுண்டர் கொண்டுவந்தா பொம்புளையளுவோ புள்ளகுட்டிய உட்டுட்டு வந்தாலும் ஆத்தர அவசரத்துக்கு போயி பார்த்துக்கலாம்.
எதிர்வீட்டு நபீஸா: உள்ளாட்சி தேர்தல் வரப்போவுது. வார்டுமெம்பர் நல்லவங்களா தேர்ந்து எடுத்தா பத்தாது. அவ்வோ தெருவுக்கும் நம்ம ஊருக்கும் சேவை செய்றவலா இருக்றவங்களா தேர்ந்து எடுக்குனும். எல்லா சங்கமும் ஒன்னா சேந்து ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு ஆள நிக்க வச்சா அவங்களுக்கு ஓட்டுப் போட வேன்டியதுதான்.
பக்கத்து வீட்டு பாத்திமா : சரி கெரண்டு போச்சு.. நாளைக்கு பேசலாம். போயிட்டு வர்ரேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
எதிர்வீட்டு நபீஸா : வஅலைக்குமுஸ் ஸலாம்.
ஆக்கம் : சகோதரி மசூதா
நன்றி :அதிரை எக்ஸ்பிரஸ்