"நாளைக்கு கடலுக்குப் போகனும். எல்லாரும் சரியாக இத்தனை மணிக்கு வந்துவிடவும்" என கட்டளைகள் இருக்க, போகும் வழியில் உப்பளத்தில் ஆடி, ஓடிச் சென்று கொண்டு இருக்கும் நேரத்தில் கண்ணில் பட்டது குட்டி நாய்கள். கண் திறக்காத நிலையில் பல நிறங்களில் காணப்பட்டன. உடனே நாங்கள் எடுத்த முடிவு, ஆளுக்கு ஒன்று என்ற கணக்கில் எடுத்து வீட்டுக்கு தெரியாமல் வளர்ப்போம் என ஆசை வைத்து, அருகில் நெருங்கிய உடன்தான் விபரீதம் புரியும். தாய் நாய் விரட்ட கடல் அலைகளை விட அதிவேகமாக பிடித்த ஓட்டம் அதிரை நுழைவாயில் (ரயில்வே கேட்) சேர. ரயில்வே பணியாட்கள் எங்களை கவனிக்க... வழக்கம் போலதான்.
அரபு உலகே ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருக்கும் அமெரிக்கப் படையை விட வலிமையான எங்கள் படை பிறர் சொல் கேட்குமோ? படை சென்று வெற்றிக் கொடியை நாட்டியது! ஒரு நாய் குட்டியை கைப்பற்றியது! வீதிக்கு வரும் முன் செய்திகள் வீட்டிற்கு எட்ட வலுக்கிறது எதிர்ப்பு விட்டில்.
நாய் வளர்ப்புத் திட்டம் நழுவ, வேறு திட்டம் போட, வீட்டு செல்லப் பிராணி பூனையைத் தேடி அலையும் இக்கூட்டம். வெற்றி பெற இதனைப் பாதுகாப்பான இடத்தில் வைத்து வளர்க்க, ஒரு பாழடைந்த வீட்டைத் தேடிப் பிடிக்க, அங்கு குரங்கு கூட்டம் போல தலைகீழாக ‘வெளவால்’ கூட்டங்கள் தொங்கிக் கொண்டு….. இப்படியாக…
பாவம்! இன்றைய இளைய தலைமுறை! அருமை மக்களே! உங்கள் ஆசிரியர் இடம் ‘வெளவால், பல்லி, ஓணான், தும்பி, கிளி என்பனவற்றை புத்தகத்திலேனும் காட்டச் சொல்லுங்கள்!
மழைக் காலம் நம்மைத் தொட, அதிரை மழை நீரால் மிதக்கும். காரணம் அந்த காலத்தில் குடிசை வீடுகள் அதிகம். அன்றைய முன்னோர் மழை நீரைச் சேமிக்கப் பயன்படுத்திய உத்திதான் இன்றைய "மழை நீர் சேமிப்பு திட்டம்." தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை மாவட்டம். நமதூர் பசுமையாக இருக்க... குளிர்ந்த நிலையில் இருக்க ஆங்காங்கே பெரிய ‘குளங்களை’ உருவாக்கினார்கள் தெரு வாரியாக. அக்காலத்தில் உள்ள அனைத்து அதிரைவாசிகளுக்கும் ‘நீச்சல்’ தெரியும்!
ஆனால் இன்றைய மக்களிடம்?
வீடுகள் சரிந்த நிலையிலும் மரங்கள் முறிந்தும் நடை பாதைகள் மறைந்தும் ஜில் எனக் காற்று வீச... இனிமையான பசுமையான இளம் விடியற் காலை சூரியக் கதிர் வீச்சுகளை வீச மறுக்க... சற்று இதமாக மழை தூவ…. நீரோடைகள் தன் இருப்பிடத்தைத் தேடி ஓட…..
"மழை பெய்கிறது. வெளிய போகாதே" என உம்மா செல்லமாகச் சொல்ல... வெளியில் வரவேண்டாம் என வானமும் எங்களை மிரட்ட... இடியோடும் மின்னலோடும் பயம் அறியா சிறார்ப் படை, ஊட்டிச் சாரல் போல தூவிக் கொண்டு இருக்கும் அந்த நிலையிலும் மழைக் காலங்களில் கடல் பகுதி, உப்பளம் பகுதியில் ‘உள்ளான் குருவிகள்’ அதிகமாக காணப்படும். படை திரள புதிய திட்டம் தீட்டப்படும். குருவி பிடிக்க ‘கன்னி’ என சொல்லக்கூடிய ஒரு சிறு சாதனத்தை குருவிகள் அதிகம் காணப்படும் இடத்தில் வரிசையாக குத்தி வைப்பது. இக்குச்சிகளின் நுனியில் நரம்பில் சுருக்கு வைத்து, சிறது உணவுகளை தூவி விட்டு மறைவான இடத்துக்கு வந்து, பின்னர் சென்று பார்த்தால் நிறைய உள்ளான் குருவி, கொக்கு, நாரை, என பல பறவைகள் வலையில் சிக்கிக் கொள்ளும். மிக அருமையான சுவை மிக்கது.
பாவம்! இன்றைய இளைய தலைமுறையே! ஆஹா… என்னமா… மழை பெய்கின்றது உள்ளே வந்துவிடுமா... மழை நீர் பட்டால் காய்ச்சல், ஜலதோஷம் வந்து விடும் என அழைக்கும் உன் அன்னையிடம் கேட்டுப் பார்! இந்த குருவிகளையும் மற்றும் மழையைப் பற்றியும்!
ஆக்கம் : எம். அக்பர் அலி (அபுதாபி)
படங்கள் : ஜாகிர் ஹுசைன்
தொடரும்...