ஊழலை தடுக்க மத்திய கண்காணிப்பு ஆணையம் உள்ளிட்ட சில அமைப்புகள் இருந்தும், கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, ஊழல் குறித்து இளம் வயதினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினால், எதிர்கால ஊழல் நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று மத்திய கண்காணிப்பு ஆணையம் நம்பியுள்ளது. எனவே, பள்ளிகளில், ஊழலுக்கு எதிரான பாடத்திட்டம் ஒன்றை சேர்க்க மத்திய கண்காணிப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், மாணவர்கள் மத்தியில் தார்மீகம், ஒருமைப்பாடு மற்றும் நேர்மையை வளர்க்க முடியும்.
ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த இயலும் என்று இது நம்புகிறது. இதுபற்றி, மத்திய கண்காணிப்பு ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பள்ளிகளில் ஊழல் எதிர்ப்பு பாடத்தை நீதி போதனை வகுப்புகளில் சொல்லிக் கொடுக்கும் வகையில் ஒரு பாடத்திட்டமாக வைக்க ஆணையம் விரும்புகிறது. இதன் மூலம், ஊழலால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாதகமான விளைவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லப்படும். இது போன்ற பாடத்திட்டம், வளர்ந்து வரும் பல நாடுகளின் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றியே இங்கும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
எதிரான நிலை இதன் மூலம், சமூகத்தில் நல்ல கோட்பாடுகளையும், ஊழலை சகித்துக் கொள்ள முடியாது என்ற மனநிலையை மக்கள் மனதிலும் உருவாக்க முடியும். இந்த விஷயம் பற்றி மனித வள மேம்பாட்டு துறை அமைச்சக அதிகாரிகளுடன் மத்திய கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, கொள்கை அளவில் ஒப்பந்தமும் செய்யப்பட்டுவிட்டது.
அடுத்த கட்டமாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதுபற்றி கடிதம் எழுத திட்டம் உள்ளது. ஊழலுக்கு எதிரான பாடத்திட்டம், சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் விரைவில் படிப்படியாக அமல்படுத்தப்படும். பின்னர், மற்ற பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஆக்கம் : ABDULHAMEED BIN SULTHAN IBRAHIM DUBAI
+971 55 46 23 13 4