"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
12 ஆகஸ்ட் 2011

ஊழலை மறைக்க உயிர்ப்பலியா ?

0 comments
ஒவ்வொரு ஊழல் குற்றச் சாட்டுகளாக கிளம்பி, பூதாகரமாக மத்திய அரசை உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரித்து குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவு சந்தேகத்தை எழுப்புகிறது.

நாடாளுமன்றத்தில், பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சியைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பாஜகவை வேறு ஒரு சிக்கலில் தள்ளி, திசைத் திருப்புவதற்காகவே, அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் பரிந்துரை வெளியிட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழும்புகிறது. அப்சல் குருவின் கருணை மனு மீது எடுக்கப் படும் முடிவு, நாட்டில் முஸ்லீம்களை போராட்டத்தில் தள்ளும். பாஜக அதற்கு நேர் எதிர் நிலைபாட்டை எடுக்கும். அப்போது ஊழல் குற்றச் சாட்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும் என்ற உள்நோக்கத்தோடு இந்த முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளதோ என்று தோன்றுகிறது.
ராஜீவ் காந்தியின் கொலை மற்றும் அதன் பின்னர் நடந்த விசாரணை, அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் படுகொலையை ஒட்டி நடந்த விசாரணையை நினைவுபடுத்துகிறது.

14 ஏப்ரல் 1865ல் லிங்கன் கொலை செய்யப் படுகிறார். அதன் பின்னர் நடந்த கைதுகளும், விசாரணைகளும் அப்போது இருந்த மக்கள் மனநிலையை பிரதிபலிக்கின்றன. கொலைக்கு காரணமானவராக அறியப்பட்ட ஜான் வில்கின்ஸ் பூத் என்பவரோடு தொடர்பு வைத்திருந்தவர்கள் அனைவரும் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப் பட்டவர்களுக்கு சாதாரணமாக நடக்கும் நீதிமன்ற விசாரணைக்கு பதிலாக ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அந்த ராணுவ நீதிமன்றத்தின் 9 உறுப்பினர்களும், அமெரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டவர்கள். ஏழே வாரங்களில் விசாரணை முடிந்து குற்றம் சாட்டப் பட்ட எட்டு பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப் பட்டது. அந்த வழக்கில் தண்டிக்கப் பட்ட மேரி சூரத் என்ற ஒரு பெண்ணை தூக்கிலிட வேண்டாம் என்று அந்த வழக்கில் தீர்ப்பு எழுதிய நீதிபதிகளில் ஐந்து பேர், அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியும், அவர் தூக்கிலிடப்பட்டார். சாதாரண நீதிமன்ற நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்காமல் அவசர கோலத்தில் அந்த விசாரணை நடத்தி முடிக்கப் பட்டு, தூக்கிலிடப் பட்டனர்.

ஏறக்குறைய அதே முறையில் தான், ராஜீவ் காந்தி கொலைவழக்கின் விசாரணையும் நடைபெற்றது. தடா சட்டம் என்ற ஒரு கொடுங்கோல் சட்டத்தின் கீழ் இவ்வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் கைது செய்யப் பட்டு, 60 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப் பட்டார்கள். இந்த சமயத்தில், இவ்வழக்கில் கைது செய்யப் பட்டவர்கள் அனுபவித்த சித்திரவதை சொல்லில் அடங்காது.

இன்று தூக்கு மேடையை எதிர்நோக்கி இருக்கும் பேரறிவாளன் வார்த்தைகளிலேயே கேட்போம்.

“தரைத்தளத்துக்கு அழைத்து வரப்பட்டு ஜட்டியோடு நிற்க வைக்கப் பட்டேன். அப்போது சுந்தரராஜன் என்ற இன்ஸ்பெக்டரும் மற்றும் பெயர் தெரியாத இரண்டு பேரும் வந்து என்னை கையால் அடித்தனர். ஒருவர் என் கால் விரல்களை ஷுக்காலால் நசுக்கினார். சுந்தரராஜன் என் விதைப்பையில் உதைத்தார். வலி தாங்க முடியாமல் கீழே விழுந்து கதறினேன்.

அடுத்த நாள் மல்லிகை கட்டிடத்தின் மேல் மாடியில் சித்திரவதைக் கூடம் என்று அழைக்கப் பட்ட இடத்துக்கு, கொண்டு செல்லப் பட்டேன். அங்கே மாதவன், ரமேஷ், செல்லதுரை என்ற இன்ஸ்பெக்டர்களும், சிவாஜி என்ற டிஎஸ்பியும் இருந்தனர். இவர்கள் சித்திரவதைக்கு பெயர் போனவர்கள். எனக்கு உணவும் தண்ணீரும் கூட மறுக்கப் பட்டன. சிறுநீர் கழிக்கக் கூட அனுமதிக்கப் படவில்லை.

இன்ஸ்பெக்டர்கள் மாதவனும் ரமேஷும் என்னை நாற்காலியில் அமர்வது போன்ற பொசிஷனில் கையை தலைக்கு மேல் உயர்த்தி நிற்க வைத்தார்கள். பிவிசி பைப்பில் சிமென்டை நிரப்பி என் உடல் முழுவதும் அடித்தனர். இன்ஸ்பெக்டர் செல்லதுரை அவதூறான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே என்னை அடித்தார்.“

இது போல, அறிவின் சித்திரவதை அனுபவங்கள் தொடர்கின்றன. இப்படிப் பட்ட சித்திரவதையை ஒரு நபர் தொடர்ந்து 60 நாட்களுக்கு அனுபவித்தால் எந்தக் குற்றத்தை ஒப்புக் கொள்ள மாட்டார் ?

இது போல தொடர்ந்து 60 நாட்கள் சித்திரவதை செய்யப் பட்டு, ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. தடா சட்டம் புதிதாக அறிமுகப் படுத்தப் பட்டது என்பதால், காவல்துறை முன்பு கொடுக்கும் வாக்குமூலங்கள் செல்லும் என்பது அறியாமலேயே, அந்த வாக்குமூலங்களில் கையெழுத்திட்டுள்ளனர். சித்திரவதை செய்யப் பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது என்பதை 11.02.1992 மற்றும் 26.08.1992 ஆகிய நாட்களில் அளித்த மன மூலம் அறிவு தெளிவாக குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார்.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணையில் தீர்ப்பு எழுதிய நீதிபதிய வாத்வா, “சித்திரவதையோ, அல்லது மிரட்டியோ வாக்குமூலம் பெறப்பட்டது என்பதற்கான எந்த புகாரையும் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை என்பதால், இந்த வாக்குமூலத்தில் சந்தேகப் பட எதுவுமில்லை” என்கிறார்.
இந்த வழக்குக்கு தடா சட்டம் பொருந்தாது என்று வழக்கின் இறுதி விசாரணையில் தீர்ப்பு எழுதிய நீதிபதிகள் ஒப்புக் கொண்டாலும், தடா சட்டத்தின் கீழ் நடந்த கீழ் நீதிமன்ற விசாரணையையும், தடா சட்டத்தின் கீழ் காவல்துறையில் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களையும் அப்படியே ஏற்றுக் கொண்டது, வினோதத்திலும் வினோதம்.

மேலும் 1865ல் அமெரிக்காவில் ஆப்ரகாம் லிங்கன் கொலை வழக்கு விசாரணை நடந்தது போலவே, இந்த வழக்கு விசாரணையும், ரகசியமாக, பொதுமக்கள் அனுமதிக்கப் படாமல், நடத்தப் பட்டது.

தடா சட்டம் இந்த வழக்குக்கு பொருந்தாது என்று முடிவெடுத்த உச்ச நீதிமன்றம், சாதாரண சட்டத்தின் படி, கீழ் நீதிமன்றத்துக்குப் பிறகு, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ள அல்லவா அனுமதித்திருக்க வேண்டும் ? ஆனால், தடா சட்ட விதிமுறைகளின் படி, கீழ் நீதிமன்றத்துக்குப் பிறகு, நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து இறுதித் தீர்ப்பு வழங்கப் பட்டதால், உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு மறுக்கப் பட்டது.

இப்படி இந்த வழக்கை ஆராய்ந்தால், ஆரம்பம் முதல், தொடர்ந்து பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன. இப்படி குளறுபடிகளோடு நடத்தப் பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில் மூன்று உயிர்களை தூக்கிலிடுவது என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?

சிங்களக் கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களைக் கூட காப்பாற்ற மறுக்கும் மத்திய அரசு தொடர்ந்து கடைபிடித்து வரும் தமிழின விரோதப் போக்கின் வடிவமாகவே, குடியரசுத் தலைவரின் இந்த முடிவை பார்க்க வேண்டியிருக்கிறது.

ராஜீவ் காந்தி என்ற ஒரு நபர் கொலை செய்யப் பட்டதற்காக மூவர் தூக்கிலிடப் பட வேண்டும் என்றால், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை கொன்று அழித்த சிங்களக் காடையர்களுக்கு ஆயுதமும் பணமும், பயிற்சியும் கொடுத்து உதவிய மன்மோகன் சிங்குக்கும், சோனியாவுக்கும் என்ன தண்டனை கொடுப்பது ?

தமிழினம் என்றாலே மாற்றாந்தாய் மனப்பான்மையேடு அணுகும் மத்திய அரசின் இந்தப் போக்கை ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பது அனைவரது கடமை.

மூவரின் உயிரைக் காப்பாற்ற நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒரு புறம் இருந்தாலும், உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்கள், இந்த அநீதிக்கு எதிராக தங்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்வது அவசியம்.

பதிப்பு : சவுக்கு

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி