அஸ்ஸலாமு அலைக்கும்..
நாம் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியான,நிம்மதியான குடும்ப வாழ்வை அமைத்து கொள்ளவே விரும்புவோம்.
ஆனால் நமது குடும்பங்களின் நிலை என்ன..?திருமணம் என்பது வாழ்க்கையில் திருப்பு முனையாக இருக்க வேண்டும், அது வெறுப்பு முனையாக ஆகி விட கூடாது.
அது ஒரு நம்பிக்கை முனையாக இருக்க வேண்டும்.
திருமணத்தின் மூலம் ஒருவர் தனது ஈமானின் ஒரு பகுதியை பெற்றுக்கொள்கிறார்.எஞ்சியதை அவர் இறையச்சத்தின் மூலம் பெற்றுக் கொள்ளட்டும்,என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
திருமணம் என்பது கணவன்,மனைவி இருவருக்குமிடையே செய்யப்படுகின்ற உறுதியான ஒப்பந்தம் (உடன்படிக்கை)ஆகும்.அதனை நிறைவேற்றுவதில் மிக்க கவனம் செலுத்த வேண்டும்.ஆகவே எச்சரிக்கை உணர்வுடனும்,பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
ஆனால்..., இன்றைய சமுதாயத்தில் நடப்பது என்ன..?
சிறு,சிறு காரணங்களுக்கெல்லாம்,தலாக்,தலாக்,தலாக்..என்று கூறி கொள்கின்றனர்.
அதை நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள்..
இன்று பலர் திருமணத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ளவில்லை.அதை புரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை.
இதில் நான்கு விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
- ஒழுக்கத்தை,கற்பை பாதுகாப்பதற்காக..,(கற்பு இருவருக்கும் பொதுவானது)
- சந்ததிகளை பெருக்குவதற்காக.,
- மன நிம்மதியுடன் அமைதியாக வாழ்வதற்காக.,
- சமூகப் பாதுகாப்பிற்காக..,
திருமணத்தில் நல்ல துணையை தேர்ந்தெடுப்பது குறித்து நபி (ஸல்)அவர்கள் நமக்கு கூறியுள்ளார்கள்.ஒரு பெண் நான்கு விஷயங்களுக்காக திருமணம் செய்யப்படுகின்றார்.
அவளுடைய அழகுக்காக,செல்வத்திற்காக,குலச்சிறப்பிற்காக,மார்க்கப்பற்றிர்காக..,
நீங்கள் மார்க்கப்பற்றுள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
ஆனால் இன்று செல்வத்திற்காக மட்டுமே திருமணம் செய்யபடுகின்றது.
அதே போல் மணமகனை தேர்வு செய்வதிலும்
துபை மாப்பிள்ளை,அமெரிக்க
மாப்பிள்ளை,லண்டன் மாப்பிள்ளை,என்றே பார்கிறார்களே தவிர நல்லொழுக்கமுள்ள மணமகனை யாரும் தேர்ந்தெடுப்பது இல்லை.
எனவே திருமணத்தின் நோக்கங்களை புரிந்து மணமகன்,மணமகள்,தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி பெண்ணின் சம்மதத்தை புரிந்து,அறிந்து,நபி (ஸல்) அவர்கள் கூறியபடி நடந்தால் இன்று இந்த தலாக்குகள் அதிகரித்து இருக்காது.
கணவன்,மனைவி இருவரும் எந்த விஷயமாக இருந்தாலும் ஒற்றுமையுடன்
செயல் பட வேண்டும்.ஆதிக்கம் செலுத்த கூடாது.
சர்வாதிகாரம் போல் நடந்துக் கொள்ள கூடாது.
(அது கணவனாக இருந்தாலும் சரி,மனைவியாக இருந்தாலும் சரியே).
உனக்கு என்ன தெரியும் என்று கணவனும்.எனக்கு எல்லாம் தெரியும் என்று மனைவியும் இருக்கக் கூடாது.
கணவன்,மனைவி இருவரையும் குர் ஆனில் (இணைகள்) என்று குறிப்பிடப் படுகிறது.
இருவரது உணர்வுகளும்,தேவைகளும் ஒரே மாதிரியானது.
இல்லறம் என்பது பொற்காலம் அல்ல.அது நல்லறம்.
நல்ல படியாக வழி நடத்தி சென்றால் அதில் எல்லா விதமான நன்மைகளும் கிடைக்கும்.
நீயா,நானா என்ற ஈகோ இருக்கக் கூடாது.
ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும்.
நீங்கள் அவர்களுக்கு ஆடை,அவர்கள் உங்களுக்கு ஆடை என திருக் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
ஆடை உடலுக்கு அழகு தருகிறது.
மானத்தை பாதுகாக்கிறது.
இருவரது மானத்தையும்,கவுருவத்தையும் பாதுகாக்க வேண்டும்.
குறைகளை வெளியில் சொல்லித்திரியக் கூடாது.
ஒரு விஷயத்தை கணவனும்,மனைவியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொது,சிறு,சிறு பிரச்சனைகள்,சண்டை சச்சரவுகள்,வந்தால் வெளியில் தெரிவது இல்லை.
ஆனால் இந்த தலாக் என்ற சொல்ல முற்படும் போது அந்த கணவனைப் பற்றி மனைவி வீட்டாரும்,மனைவியை பற்றி கணவன் வீட்டாரும் பல அவதூறுகளையும்,செய்யாத,சொல்லாத நடக்காத,விஷயங்களை கூறி விடுகின்றனர்.அவர்கள் மட்டுமல்ல வெளியில் உள்ளவர்களும் கூறுகின்றனர்.
இதை கேட்கும் போது அந்த கணவனும்,மனைவியும் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்பது இருவருக்கும்,அல்லாஹ் க்கும் தான் தெரியும்.
இதை புரிது கொண்டு மனதில் வைத்து ஒற்றுமையுடன் வாழ முற்படுவோம்.
ஆகவே அன்புள்ளம் கொண்ட சகோதர,சகோதரிகளே இந்த தலாக் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து ஒற்றுமையுடன் வாழ முயற்சிப்போம்.
எந்த பிரச்சனையாக இருந்தாலும் இருவரும் தனிமையில் உட்கார்ந்து பேசி,மனதில் உள்ளதை வெளிப்படையாக தெரிந்து,புரிந்து கொண்டாலே எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவு வந்து விடும்.கணவன் வெளிநாட்டில் இருந்தாலும்,யார் பக்கம் தவறு இருந்தாலும் தயங்காமல் மன்னிப்பு கேட்டுக் கொண்டால் (இன்ஷா அல்லாஹ் )மனது இலகுவாகி விடும்.
இந்த தலாக் சொல்லப்படுவது அல்லாஹ், ரசூல்(ஸல்) அவர்கள் சொன்ன படி நடக்கிறதா.?அதுவும் இல்லை.
அவசர அவசரமாக சங்கத்தில் லெட்டரை கொடுத்து விட்டு உடனே மறுமணத்திற்கு தயாராகி விடுகிறார்கள்.
எனவே பிரச்சனைகளை பேசி தீர்ப்பதை விட்டு,விட்டு அந்த பிரச்சனைகளையே லெட்டர் மூலம் தெரியப்படுத்தியும்,அந்தரங்க விஷயங்களை எல்லாம் தெளிவு படுத்தி விடுகிறார்கள்.
அந்த விஷயங்கள் காப்பாற்றபடுகிறதா என்றால் இல்லை.
ஒவ்வொருவரும் அதை பேசிப் பேசியே நோகடித்து விடுவார்கள்.
குடும்பத்தில் ஒரு பிரச்னை வந்தால் தாயின் பக்கம்,சாயிந்து விடக் கூடாது.
தாரத்தின் பக்கமும் சாயிந்து விட கூடாது.
இருவரும் அடித்து கொண்டு எக்கேடா கெட்டு போங்கள் என்று இருந்து விடவும் கூடாது.
நீதியின் பக்கமும்,நியாயத்தின் பக்கமும் இருக்க வேண்டும்.
நீங்கள் நீதி செலுத்துங்கள்..! அது உங்களுக்கோ,உங்களது உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே..! என்று திருக் குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
ஒரு தனி மனிதனின் மாற்றமே ஒரு சமுதாயத்தின் மாற்றமாகும்.
ஒவ்வொரு
தனி மனிதனும் சிந்தித்து செயல் பாடுவோமேயானால் இந்த சமுதாயத்தில் நடக்கும்,நடக்கின்ற தவறுகளை புரிந்து கொள்வோம்.
தலாக் விஷயத்தில் அவசர,அவசரமாக செயல்பட்டு ,இறைவன் தந்த இந்த அற்புதமான வாழ்வை புறக்கணித்து விட்டு இருப்போமேயானால் இம்மையிலும்,மறுமையிலும் மிக கடுமையான சோதனைக்கு நாம் ஆளாவோம் என்பதில் ஐயமில்லை.
நாம் இஸ்லாம் கூறும் இனிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.அப்போது தான் நமது குடும்பங்கள் அமைதி நிறைத்த மகிழ்ச்சி நிலவுகின்ற இனிய குடும்பங்களாக மாறும்..(இன்ஷா அல்லாஹ்.)
இறைவன் அருள்புரிவானாக ஆமீன்..!