அப்பாவி ஜெர்ரியைத் துரத்துறதே இந்த டாமுக்கு வேலையாகிப் போச்சு! அடேங்கப்பா, டாம் பூனை நகங்களை என்னமா கூர்தீட்டி வச்சுருக்கு? அதுக்கிட்டே ஜெர்ரி எலி சிக்கிக்கிட்டா அவ்ளோதான்! ஆனா அழகான எலிக்குத்தான் எப்பவும் அதிர்ஷ்டம். பாத்ரூம், கிச்சன், கார்டன் இப்படி ஒரு இடம் விடாம டாம் துரத்துனாலும், ஜெர்ரி சாமர்த்தியமா எஸ்கேப் ஆகிடும். இந்த முறை எப்படித் தப்பிக்கப்போகுதோ?, வைத்த கண்ணை எடுக்காமல் டி.வி.யில் கார்ட்டூன் பார்க்கிற நம் குழந்தைகள் மனசில் இப்படித்தான் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். தட்டிலுள்ள நூடுல்சை அப்படியே வைத்துவிட்டு, முழுக் கவனத்தையும் செலுத்தி, டாம்-ஜெர்ரி அன்ட் கோவின் சேட்டைகளை அவர்கள் பார்க்கிறார்கள்.
குறுக்கீடுகளைப் பொருட்படுத்தாத இந்த நூறு சதவீத கவனம் படிக்கும்போது மட்டும் ஏன் சில மாணவர்களுக்குக் கை கூடுவதில்லை? சென்னை ஷெனாய் நகரிலுள்ள திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவானந்தத்திடம் கவனச் சிதைவு குறித்துக் கேட்டோம். ஆசிரியர் பணியில் 28 வருடங்கள் அனுபவம் கொண்ட இவர், சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது பெற்றவர். இதைவிட பெருமை, இது தமிழறிஞர் மு.வரதராசன் மேடைகளில் பேசியும் எழுதியும் கிடைத்த பணத்தில், நண்பர்களின் துணையுடன் நிறுவிய பள்ளிக்கூடம்.
"குழந்தைகளின் கவனச் சிதைவு பற்றிய கவலை பல பெற்றோர்களுக்கு இருக்கும். குழந்தைகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பாடத்தில் கவனத்தைச் செலுத்த முடியாததற்கு என்ன காரணம்? முதலில், அவர்களுக்குப் பாடத்தின் மீது விருப்பம் இல்லை. கார்ட்டூன் படங்களைப்போல, டி.வி. விளம்பரங்களைப்போல பாடம் குழந்தைகளைக் கவரவில்லை. பாடம் புரியாவிட்டாலும், அதைப் படிக்கும்படி அவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். அதனால் மிகவும் கசப்பான மருந்தைக் குடிப்பதுபோல படிப்பதற்கு அவர்கள் தயார் ஆகிறார்கள். சுவாரஸ்யமான கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி, தெளிவாகப் புரிய வைத்து, பாடத்தின் மீது விருப்பத்தை ஏற்படுத்துவது ஆசிரியர்களின் கடமை. விஷயம் புரிந்துவிட்டால், அது குழந்தைகளுக்கு எளிதானதாகவும் பிடித்தமானதாகவும் ஆகிவிடுகிறது. ஆசிரியர் அற்புதமாகப் பாடம் நடத்தும் வகுப்பறைகளில், கண்டிப்பாக கவனச் சிதைவு ஏற்படாது.
சில மாணவர்கள் ஆரம்ப நாட்களில் மடியில் பாடப் புத்தகத்தை வைத்துக் கொண்டு, வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சாயங்காலம் நாலரை மணிக்கு "பவர் ரேஞ்சர்ஸ்", தங்கச்சிக்கு மட்டும் அப்பா வாங்கித் தந்த ஐஸ்க்ரீம், சமையலறையிலிருந்து வெளிப்படும் கேசரி வாசனை என படிப்பைத் தவிர மீதி அத்தனை விஷயங்களிலும் அவர்களின் கவனம் இருக்கும். ஆனால், தேர்வு நாட்கள் அறிவிக்கப்பட்டுவிட்டால், அதிர டியாகத் தயார் ஆகி கடகடவெனப் படித்து, அபாய கட்டத்தைத் தாண்டி விடுவார்கள். இவர்களைப் பொறுத்தவரை, பாடத்தில் விருப்பமும், திறமையும் இருக்கிறது. ஆனால் கூடவே கொஞ்சம் அலட்சியமும் இருந்து படிப்பதைத் தாமதப்படுத்துகிறது. தேர்வுகளுக்குச் சிக்கிரமே தயாராவதன் அவசியத்தைப் பெற்றோர் இந்தக் குழந்தைகளிடம் பொறுமையாகப் பேசிப் புரிய வைக்க வேண்டும்.
பல குழந்தைகளுக்குத் தங்களைப் படிக்கச் சொல்வதன் காரணமே தெரியாது. "நான் ஏன் படிக்கணும்? வகுப்பில் முதல் ரேங்க் வரணும்னு ஏன் எதிர்பார்க்கிறாங்க? கணிதத்துல குறைவா மார்க் வாங்கினதுக்கு ஏன் அப்பா திட்டுனாரு? நல்லா படிச்சா என்ன கிடைக்கும்?" போன்ற கேள்விகளுக்குப் பல குழந்தைகளிடம் பதில் கிடையாது. படி, படி என எப்போதும் அவர்களை மெக்கானிக்கலாக விரட்டிக்கொண்டேயிருக்கும் பெற்றோர் படிப்பின் நோக்கத்தைக் கூறுவதில்லை.
பத்து வயதுப் பையனுக்கு இன்ஜினீயரிங் காலேஜ், மெடிக்கல் சிட், கேம்பஸ் இன்டர்வியூ போன்ற சமாச்சாரங்கள் புரியுமா என யோசிக்க வேண்டாம். அதிக மதிப்பெண்களுக்கும் உயர்ந்த வேலைகளுக்கும் இருக்கும் தொடர்பை எளிமையாக, அவனது மொழியிலேயே புரியச் செய்யுங்கள். தன் கைகளில் இருப்பது கண்ணாடிக் குடுவை என்று புரிந்துவிட்டால், அதைக் கவனமாகத்தானே கையாளுவான்? அதே நேரம் படிப்பின் அவசியத்தைப் புரிய வைக்கும் முயற்சிகள் பயமுறுத்தலில் முடிந்து விடக்கூடாது. கட்டாயமும் பயமும் நிச்சயம் கவனத்தைச் சிதறடிக்கும்.
தங்கள் பையன் ஒரே இடத்தில் இரண்டு மூன்று மணி நேரம் உட்கார்ந்து, பாடம் படிக்க வேண்டும் என்ற பெற்றோரின் எதிர்பார்ப்பும் தவறுதான். பெரியவர்கள்கூட இவ்வளவு நேரம் ஒரே விஷயத்தில் கவனத்தைக் குவிப்பது சாத்தியமல்ல. கவனச்சிதைவால் கஷ்டப்படும் பையன்களுக்கு ஐந்து நிமிஷம் அவர்கள் படிக்கும் இடத்திலேயே ஓய்வு கொடுத்து, ரிலாக்சேஷன் தரலாம். முழுக் கவனம் செலுத்த முடியாத நேரங்களைப் பெற்றோரே யூகித்து, படிப்புடன் தொடர்புடைய சின்னச் சின்ன வேலைகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
ஒரே வீட்டில் உள்ள குழந்தைகளிடையே கூட கவனம் செலுத்தும் திறன் ஒருவருக்கொருவர் மாறுபடும். அதனால் இருவரையும் பெற்றோர் ஒப்பிட்டு, தாங்களும் குழம்பி, குழந்தைகளையும் குழப்ப வேண்டாம்!".
கவனம் வளர
குழந்தைகள் உட்காருமிடம் படிப்பதைத் தூண்ட வேண்டும்.
அதிகளவில் சத்தமும், ஆள் நடமாட்டமும் கூடாது.
நூலகத்தில் படிக்கும் பழக்கம் கவனச் சிதைவை அகற்றும்.
பாடத்தை சின்னச் சின்ன பாயிண்ட்களாக மாற்றிப் படிக்கலாம்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கம் தேவை
24 செப்டம்பர் 2011
குழந்தைகளின் கவனச் சிதைவு பற்றிய கவலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post a Comment
நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி