"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
20 செப்டம்பர் 2011

என்ன மாதிரியான இமேஜ்...

0 comments
அம்மாக்கள் மீது பிள்ளைகளுக்கு என்ன மாதிரியான இமேஜ் இருக்கிறது என்பது முழுமையாக வெளிப்படும் காலகட்டம் இது. பின்னே... இத்தனை நாட்களும். "பிள்ளை பாவம்... பரீட்சைக்குப் படிச்சே டயர்டாகிடுச்சு" என்று கரிசனத்தைக் கொட்டி, தலை வருடிய அதே அம்மாக்கள், இந்த விடுமுறை காலத்தில் தங்களின் வாலுப் பிள்ளைகள் அடிக்கும் லூட்டிகளை தாள முடியாமல் "தாட் பூட்" என்று கத்த, "இந்த அம்மாவுக்கு எதுக்கெடுத்தாலும் கத்துறதுதான் வேலையே" என்று பிள்ளைகள் எரிச்சல்பட.. என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்தானே!>

ஆனால், இதே விடுமுறையை அம்மாக்களுக்கு நிம்மதியையும், பிள்ளைகளுக்கு கொண்டாட்டத்தையும் தருகிற காலமாக மாற்றிக் கொள்ள முடியும். அந்த சாமர்த்தியம் உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

உங்கள் குழந்தை கே.ஜி.யிலோ முதல் வகுப்பிலோ படிக்கிற சிறு குழந்தை எனில், இந்த விடுமுறையை அதனுடன் அதிகப் பிணைப்பை ஏற்படுத்துகிற ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தையோடு சேர்ந்து விளையாடுவது, சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவது, தானாகவே ஷூ, சாக்ஸ் போட சொல்லித் தருவது, சாப்பிட பயிற்சி தருவது, எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கப் பழக்குவது... என்று நல்ல பழக்கங்களை சொல்லித் தரும்போதே உங்கள் அன்பையும் வெளிப்படுத்திவிட முடியும். இந்த எல்லா விஷயங்களையுமே பொறுமையாகவும் அன்பாகவும் கற்றுத் தந்தால், குழந்தை சமர்த்தாகக் கற்றுக் கொள்ளும்.

அடுத்ததாக, சம்மர் கிளாஸ் போகிற அளவுக்குப் பெரிய பிள்ளைகள் இருக்கிற அம்மாக்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். பிள்ளைகளை சம்மர் கிளாஸ் அனுப்பத் தீர்மானித்திருந்தால், கீழ்க்கண்ட விஷயங்களில் கவனம் தேவை.

சம்மர் கிளாஸ் என்று யார் என்ன நடத்தினாலும் அனுப்பி விடாதீர்கள். அது என்ன மாதிரியான கிளாஸ், அனுபவசாலிகள்தான் நடத்துகிறார்கள்‘.... நன்றாகக் கற்றுத் தருவார்களா... என்றெல்லாம் தீர விசாரித்த பின்பே அனுப்ப வேண்டும். உங்கள் பணமும் பிள்ளையின் நேரமும் வீணாகக் கூடாது என்பதற்காக மட்டும் நான் இதைச் சொல்லவில்லை. சரியான மாஸ்டராக இல்லாவிட்டால், குழந்தைக்கு அந்தக் குறிப்பிட்ட துறையின் மீது இருக்கும். ஆர்வமேகூட வடிந்துவிடக்கூடும். அதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்!

குழந்தை ரொம்பவும் விரும்புகிற கிளாஸ்க்குத்தான் அனுப்புகிறீர்களா என்பது அடுத்த கேள்வி. "சும்மா போய் வரைய கத்துக்கிட்டு என்ன செய்யப் போற? கம்ப்யூட்டர்ல ஏதாவது கத்துக்கோ. அதான்... ஃப்யூச்சருக்கு நல்லது" என்றெல்லாம் உங்களின் ஆசைகளை பிள்ளைகளின் மேல் திணிப்பது நல்லதல்ல. வரைதலில் ஆர்வம் இருக்கிற பிள்ளையை ஓவிய வகுப்புக்கு அனுப்பினால், அந்தத் துறையில் அதன் திறமை மெருகேறி பளிச்சிடும். மாறாக, கம்ப்யூட்டர் வகுப்புக்கு அனுப்பினால், "கடனே..." என்று போய் வருமே தவிர, மனம் ஒன்றிப் படிக்காது.

இதில் உங்களுக்கு எத்தனை விதமான நஷ்டங்கள் தெரியுமா? முதலாவது உங்களின் பணம் வீணாகும். "எவ்ளோ காசைக் கொட்டி அனுப்பினேன். இப்பிடி வேஸ்ட் பண்ணிட்டானே" என்கிற கோபம் வரும். இது உங்கள் தரப்பில் ஏற்படுகிற நஷ்டம். இதுவாவது பரவாயில்லை. பிள்ளைக்கு ஏற்படுகிற நஷ்டங்கள் மிக அதிகம்.

முதலாவது, பிள்ளையின் சக்தியும் நேரமும் வீணாகும். அடுத்தது, "நாம ஆசைப்பட்டதை இந்த அம்மா அனுமதிக்கலையே; நான் மட்டும் அந்த கிளாஸ் போயிருந்தேன்னா, சூப்பரா அந்த ஃபீல்டுல சாதிச்சிருப்பேன்..." என்று வளர்ந்த பிறகும் கூட நினைவில் இருக்கும் அளவுக்கு ஒரு வடுவாக அதன் மனதில் பதிந்து விடும். எனவே, கவனம் தேவை.

சில பிள்ளைகள் இருப்பார்கள்.. உண்மையில், அவர்களுக்கு அந்தக் குறிப்பிட்ட துறையில் பெரிய ஆர்வமெல்லாம் இருக்காது. அது உங்களுக்கும் தெரியும். ஆனால் நட்பு வட்டம் குறிப்பிட்ட கிளாஸ் போகிறது என்பதற்காக தாங்களும் போக வேண்டும் என்று நினைப்பார்கள். பெற்றவராக அதை நீங்கள் அனுமதிக்க முடியாதுதான். ஆனால், உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்து விடக் கூடாது. "நாம என்ன சொன்னாலும் இந்த அம்மா மறுப்பாங்க" என்றுதான் அவர்களுக்குத் தோன்றும். "இந்த கிளாஸ் நிஜமாவே உனக்கு ஆர்வமான கிளாஸ்தானானு யோசிச்சுப் பார் என்று பொறுப்பை அவர்கள் தலையில் சுமத்துங்கள். தானாக வழிக்கு வருவார்கள். அப்படியும் பிடிவாதமாக இருந்தால், வேறு வழியில்லை, பணம் போனால் போகிறது என்று சமாதானப்படுத்திக் கொண்டு, "நீ திரும்பத் திரும்ப கேக்கறதாலதான் அனுப்புறேன்" என்று சொல்லி அவர்கள் விரும்புகிற வகுப்புக்கு அனுப்பி வையுங்கள்.

அதன் பிறகு, நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம். "நீ ஒழுங்கா கத்துக்க மாட்ட.. எனக்குத் தெரியும்.. பணத்தை வீணாக்குற..." என்றெல்லாம் அவர்களை திட்டாதீர்கள். ஒருவேளை, நிஜமாகவே குழந்தை அதை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளலாமே! உங்களுக்கென்ன தெரியும்?

ஆனால் நீங்கள் நினைத்தது போல கிளாஸின் முடிவில், குழந்தை சொதப்பியிருந்தால், அப்போது உபயோகியுங்கள் உங்கள் அஸ்திரத்தை... அதுவும் அன்பான குரலில்தான்! "பார்த்தியா... அம்மா அப்பவே சொன்னேன்ல... உன் நல்லதுக்குத்தான்டா அம்மா சொல்வேன். சரி விடு... இனிமே அம்மா ஏதாவது சொன்னா கொஞ்சம் யோசிச்சுப் பாரு" என்று சொல்லுங்களேன்! குழந்தை அதன் பிறகு நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கும்!

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி