
சவூதி: விடுவிக்கப்படும் கைதிகளைக் கண்காணிக்க மின்னணு சங்கிலி,
சமூக அமைதிக்கு மிரட்டலாக உள்ள கைதிகளை விடுவிக்க நேரும் போது, அவர்களைக் கண்காணிக்க மின்னணு தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று சவூதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சவூதி உள்துறையின் மின்னணு கண்காணிப்பக செயல் இயக்குநர் மாஜித் அல் சயீத் இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்படும் கைதிகளின் கால்களில் மின்னணு பட்டை ஒன்று பொருத்தப்படும் என்றும் அதன் செயற்பாடு காவல்துறை கட்டுப்பாட்டகத்தின் பொறுப்பில் இருக்கும் என்றும் கம்பியில்லா அலைவரிசை மூலமும் ஜிபிஎஸ் தொழிற்நுட்பம் மூலமும் இக்கட்டுப்பாடு சாத்தியப்படுத்தப்படும் என்றும் மாஜித் அல் சயீத் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் சிறைகளில் நெரிசலைக் குறைக்கவும் முடியும் என்றார் அவர்.
மனிதாபிமான அடிப்படையில், நோயுற்ற அல்லது இறப்பைத் தழுவிய உறவினர்களை கைதிகள் காண அனுமதிக்கப்படும் போது இத்திட்டம் மிகுந்த பலனளிக்கும் என்றும் இத்திட்டமானது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது என்றும் மாஜித் மேலும் கூறினார்.