"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
30 அக்டோபர் 2011

எதிர்காலமே படிப்பு தான் ..!

0 comments


தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கும். நாம் சொல்ல வருவது எப்படியும் படித்து வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற துடிப்புடன் இருப்பவர்களுக்கு. இவர்கள் தங்கள் எதிர்காலமே படிப்பு தான் என்பதாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள்.

வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும்போதே பலர் அதை ஒரளவு கிரகித்துக் கொள்வார்கள். வீட்டில் ஒரு முறை அதை ரிவைஸ் செய்யும்போது பாடம் எளிதாகி விடும். இப்படி வீட்டில் மாணவர்கள் படிக்க ஒதுக்கும் நேரத்தைப் பொறுத்துத்தான் அவர்கள் படிப்பில் எந்த அளவுக்கு மேம்பட முடியும் என்பதை தீர்மானிக்க முடியும்.

படிப்புக்குத் தக்கபடி தான் வாழ்க்கை என்றாலும் அதை வகுப்புக்குத் தக்கபடி, படிக்க வேண்டிய பாடங்களின் அளவுக்குத் தக்கபடி படிக்க முயற்சிப்பது தான் புத்திசாலித்தனம்.

நம் ஒரு நாள் பொழுதான 24 மணி நேரத்தில் 6 மணி நேரத்தை தூக்கம் எடுத்துக் கொள்கிறது. மீதி 18 மணி நேரத்தில் 8 மணி நேரத்தை பள்ளி எடுத்துக் கொள்கிறது. மீதமிருக்கும் 10 மணியில் 3 மணிநேரத்தை குளியல், சாப்பாடு, விளையாட்டு, பொழுது போக்கு போன்ற நிகழ்வுகள் எடுத்துக் கொள்கிறது.

இப்போது 7 மணி நேரம் மட்டுமே மீதம் இருக்கிறது. இந்த 7 மணி நேரத்தை மாணவர்கள் நினைத்தால் பயனுள்ள படிப்புநேரமாக அதை எடுத்துக் கொள்ள முடியும்.

முதலில் தொடர்ச்சியாக 2 மணி நேரம் படிக்க வேண்டும். பிறகு அரை மணி நேரம் ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பிறகு 2 மணி நேரம் தொடர் படிப்பு. அடுத்த அரை மணி நேரம் ஏதேனும் விளையாட்டு. இப்படி இரண்டு இடைவெளிகளில் மொத்தம் 5 மணி நேரம் போய்விட, அடுத்த 2 மணி நேரத்தையும் முழு மூச்சாக படிப்பதற்கு பயன் படுத்திக்கொண்டால் கல்வி உங்கள் கைவசமாகி விடும்.

இப்படி தொடர்ச்சியாக நேரம் ஒதுக்கி படிக்கும் நேரத்தை சரிவர அமைத்துக் கொண்டு விட்டீர்களாயின் படிப்பில் நாளடைவில் உங்களுக்கே ஆர்வம் தொற்றிக் கொள்ளும். எப்போது ஆர்வம் வந்து விடுகிறதோ அப்போதே நீங்கள் படிப்பில் முன்னேற்றம் காணும் மாணவன் என்ற பட்டியலுக்குள் வந்து விடுவீர்கள்.

இப்படி படிப்பவர்கள் பாடங்களை புரிந்து கொண்டு படிக்கவேண்டும். மனப்பாடம் செய்கிற படிப்பு சமயத்தில் காலைவாரி விட்டு விடும். புரிந்து கொண்டு படிக்கவேண்டுமானால் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும் போதே எந்த விதமான சந்தேகம் ஏற்பட்டாலும் அதை நிவிர்த்தி செய்து கொண்டு படிக்கத்தொடங்க வேண்டும். இப்படிச் செய்யும் போது பாடம் எளிதாகி விடும். இந்த கிரகித்துப் படிக்கும் படிப்பு மனதில் சுலபமாகத் தங்கி விடும்.

படிப்பதோடு நிறுத்தி விடாமல் படித்ததை அப்போதே எழுதிப்பார்த்து விடுவது நல்லது. இப்படிச்செய்யும் போது தேர்வுக்கு முன்னரே எழுதிப் பழகுகிற அனுபவம் கிடைக்கும். இது தேர்வை எளிதாக்கிவிடும். ஒரு மணி நேரம் இடையில் கிடைத்தாலும் படிக்கவோ எழுதிப் பார்க்கவோ அதை பயன்படுத்தும்போது தான் உங்களுக்கு நீங்களே பட்டை தீட்டிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

கடவுள் நமக்கு அருளிய மிகப்பெரிய ஈவு, ஒரு நாள் பொழுதான 24 மணி நேரம். கடின உழைப்பாளிகள் இந்த 24 மணி நேரத்தில் 30 மணிக்குரிய வேலைகளை முடித்து விடுகிறார்கள் அந்த அளவுக்கு நேரம் உணர்ந்து சாதிக்கும் நோக்கில் வெளிப்படு கிறார்கள். இவர்கள் யார் என்று பார்த்தோமானால் படிக்கிற நாட்களில் இவர்கள் நேரம் வகுத்துக்கொண்டு படித்து முன்னேறியவர்களாகவே இருப்பார்கள்.

பரீட்சை நேரத்தில் விடிய விடிய படித்துக் கொள்கிறோம். அதற்குள் இப்போது என்னய்யா அவசரம் என்று உங்களில் சிலர் கேட்கக்கூடும். இந்த மொத்தப் படிப்பு தேவையில்லாமல் டென்ஷனைத் தானே ஏற்றி வைக்கிறது? ராத்திரி விழித்திருந்து படித்து விட்டு, காலையில் பரீட்சை ஹாலில் கண்ணைக் கட்டிக் கொண்டு வருவதையும் சமாளித்து எழுதும் பரீட்சைகளில் அப்படி என்ன பெரிதாக மதிப்பெண்களை எதிர்பார்த்து விட முடியும்?

படிப்பில் சாதித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் படிப்பவர்கள் மட்டுமாவது இந்த தினம் 7 மணி நேர படிப்பு வளையத்திற்குள் தங்களை செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். இந்த 7 மணி நேர கல்வி உழைப்பு நாளை உங்களை நல்லதொரு வேலையில் அமர்த்தும். அப்போது வேலையிலும் நீங்கள் உங்கள் உழைப்பால் நிமிர்ந்து நிற்பதோடு, திட்டமிட்ட படிப்புக்கான வெற்றி இது தான் என்பதையும் அப்போது நிரூபிப்பீர்கள்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி