முல்லைப் பெரியாறு அணை உடைவதைப் போல காட்டும் தமிழகத்துக்கு எதிரான “டேம் 999′ ஆங்கிலத் திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி திமுக, மதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திமுக எம்பி டி.ஆர்.பாலுவை அழைத்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும், இது குறித்து விசாரணை நடத்துவதாக உறுதிமொழியளித்தனர்.
நேற்று மக்களவை கூடியதும் இந்த விவகாரத்தைக் கிளப்பினார் டி.ஆர்.பாலு. இதையடுத்து திமுக எம்பிக்கள் அனைவரும் எழுந்து நின்று அந்த திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் அவர்கள் சபாநாயகர் மீரா குமாரின் இருக்கையை முற்றுகையிட்டும் கோஷமிட்டனர்.
இதே போல மதிமுக எம்பி கணேசமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் எம்பி லிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி நடராஜன் மற்றும் அதிமுக எம்பிக்களும் எழுந்து நின்று கோஷமிடவே அவை நடவடிக்கைகள் முடங்கின.
இதையடுத்து திமுக எம்பிக்களை சோனியா காந்தியும் பிரதமரும் அழைத்து விவரம் கேட்டனர். அப்போது டேம் 999 பட விவகாரத்தை முழுமையாக பாலு விளக்கினார். முல்லைப் பெரியாறு அணை நீரால் தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுவதையும், இந்தப் படம் வெளியானால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்றும். தமிழகத்துக்கு எதிரான இந்தப் படத்தைத் திரையிடுவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் பாலு கூறினார்.
படம் வெளியாவதைத் தடுக்க பிரதமர் நடவடிக்கை
இதையடுத்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை அழைத்த பிரதமர், தமிழகத்தின் உணர்வுப்பூர்வமான இந்த விவகாரத்தில், இந்தப் படம் வெளியாவதைத் தடுக்க தேவையான நடவடிக்கையை எடுக்க உத்தரவிட்டார்.
அதே போல திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக கோவா சென்றுள்ள மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி, டெல்லி திரும்பியதும் இது தொடர்பான நடவடிக்கையை எடுக்கவும் சோனியாவும் உத்தரவிட்டார்.
அவர் டெல்லி திரும்பியதும், படத்தை தடை செய்வது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.
ராஜ்யசபாவிலும் திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் இந்த விவகாரத்தைக் கிளப்பினர். படத்தை எந்த மாநிலத்திலும் வெளியிடவே கூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.