தஞ்சாவூரைச் சேர்ந்தவர் உத்திரபதி. இவரது மகன் ராஜா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயிக்கு வேலை சென்றார். அங்கு அவர் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது தனது குடும்பத்தினருக்குப் பணம் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்திரபதியின் பக்கத்து வீட்டுக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் பேசிய நபர், துபாயில் இருந்து ராஜா பேசுவதாக கூறினார். அவர் தனது தந்தைக்கு விமானம் மூலம் விலை உயர்ந்த பல்வேறு பொருட்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், இதற்கான வரி கட்டணமாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை மதுரை விமான நிலையத்துக்கு வரும் கணேசன் என்பவரிடம் கொடுக்குமாறு தனது தந்தையிடம் கூறிவிடும்படியும் சொல்லிவிட்டு, இணைப்பைத் துண்டித்து விட்டார்.
இது பற்றி பக்கத்து வீட்டுக்காரர் உத்திரபதியிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துடன் உத்திரபதி மதுரை விமான நிலையத்திற்குச் சென்றார். அங்கு ஒருவர் தன் பெயர் கணேசன் என்று கூறி உத்திரபதியிடம் ரூ.1 லட்சத்து 80ஆயிரத்தைப் பெற்றுக் கொண்டார். அதன்பின் அவர் உத்தரபதியிடம், "சிறிது நேரம் இங்கேயே இருங்கள், உங்கள் மகன் அனுப்பிய பொருட்களுடன் வருகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றார்.
வெகுநேரமாகியும் அவர் வரவில்லை. அதன்பின்தான், தான் ஏமாற்றப்பட்டதை உத்திரபதி உணர்ந்தார். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து பெருங்குடி காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் விமான நிலையத்துக்கு வெளியில் வைத்து முதியவரை நூதன முறையில் ஏமாற்றிய மர்ம நபரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.