"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
27 நவம்பர் 2011

உதவித்தொகையுடன் படிக்கலாம்!

0 comments

நல்ல ஊதியத்தில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நிச்சயம் வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பதற்கு கல்வி உதவித்தொகையும் கிடைக்கும் என்கிறார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா தென்மண்டலத் தலைவர் பி.ரவி.

கம்பெனி செக்ரட்டரி படிப்பு குறித்து புதிய தலைமுறை கல்விக்கு அவர் அளித்த பேட்டி:

கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பு எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது?

இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா கல்வி நிலையம், இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டதாகும். மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இது செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் தில்லியில் உள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் தில்லியில் மண்டல அலுவலகங்களும், 69 கிளை அலுவலகங்களும் உள்ளன.

ரூ. 5 கோடியும் அதற்கு மேலும் மூலதனம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் கட்டாயம் ஒரு கம்பெனி செக்ரட்டரியை நியமிக்க வேண்டும் என்பது இந்திய கம்பெனி சட்ட விதி. அதுபோல பங்குச் சந்தையில் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்துள்ள அனைத்து நிறுவனங்களும் கண்டிப்பாக கம்பெனி செக்ரட்டரியை நியமிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு வேறு படிப்பு படித்தவர்களை நியமிக்கக் கூடாது. இந்தப் பதவியில் அமர கண்டிப்பாக ஏ.சி.எஸ். என்று அழைக்கப்படும் அசோசியேட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பு படித்திருக்க வேண்டும்.

இந்தப் படிப்பு படித்தவர்கள் ஒரு நிறுவனத்தில் என்ன பணியில் அமர்வார்கள்?

சி.எஸ். கோர்ஸ் முடித்து கம்பெனியில் கம்பெனி செக்ரட்டரி பதவியில் அமரும் ஒருவர் படிப்படியாக, நிர்வாக இயக்குனர், கம்பெனியின் தலைவர் பதவியில் அமர முடியும். இதுதவிர கம்பெனி ஆரம்பித்தல், கம்பெனிகள் பல்வேறு துறைகளில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்தல், கம்பெனி நீதிமன்றங்களில் ஆஜராக்குதல் போன்ற பல்வேறு பணிகளை செய்தலில் ஒரு கம்பெனி செக்ரட்டரியின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது.

சி.எஸ். படிப்பில் சேர அடிப்படை கல்வித் தகுதி என்ன?

பிளஸ் டூ படித்திருந்தாலே போதுமானது. பிளஸ் டூ வகுப்பில் எந்தப் பிரிவு எடுத்துப் படித்த மாணவர்களும் இதில் சேரலாம்.

சி.எஸ். படிப்பை பொருத்தவரை ஆரம்ப நிலை (ஃபவுண்டேஷன் புரோகிராம்), நிர்வாக நிலை (எக்ஸிகியூடிவ் புரோகிராம்), தொழில்முறை நிலை (புரபஷனல் புரோகிராம்) என்ற மூன்று படிகள் (stages) உண்டு. இதில் பிளஸ் டூ படித்து முடித்து வரும் மாணவர்கள் கண்டிப்பாக ஃபவுண்டேஷன் புரோகிராமில் படித்து முடித்த பிறகுதான் நிர்வாக நிலையில் சேர முடியும். இதுவே ஒரு மாணவர் இளநிலைப் பட்டப் படிப்பு முடித்திருக்கும் பட்சத்தில் அவர் நேரடியாக நிர்வாக நிலையில் படிப்பைத் தொடரலாம். நிர்வாக நிலையில் தேர்ச்சிப் பெற்றால்தான் தொழில்முறை நிலையில் சேர முடியும்.

இளநிலை பட்டப் படிப்பில் வணிகப்பிரிவும், முதுநிலைப் பட்டப் படிப்பில் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பிரிவும் எடுத்து தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு நிர்வாக நிலைப்பிரிவில் 3 தாள்கள் விலக்கு அளிக்கப்படுகிறது.

பொதுவாக நிர்வாக நிலைப்பிரிவில் தேர்வு எழுதும் மாணவர்கள் 6 தாள்களை எதிர்கொள்ள வேண்டும் ரூ.5கோடிக்கு குறைவாக முதலீடு செய்து நடத்தப்படும் நிறுவனத்தில் நிர்வாக நிலையில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பணியில் சேர்ந்துகொள்ளலாம்.

இந்தப் படிப்பில் சேர பயிற்சிக் கட்டணம் எவ்வளவு?

ஆரம்ப நிலைப் படிப்புக்கான காலம் மொத்தம் எட்டு மாதங்கள். இந்தப் படிப்பில் சேர பயிற்சிக் கட்டணமாக ரூ.3,600வசூலிக்கப்படுகிறது. நிர்வாக நிலைப் படிப்பு மற்றும் தொழில்முறை நிலைப் படிப்புகளுக்கான காலம் தலா 9மாதங்கள். இதில் நிர்வாக நிலைப்பிரிவில் சேரும் மாணவர்கள் வணிகவியல் பட்டதாரிகளாக இருக்கும்பட்சத்தில் ரூ.7,000 கட்டணம். மற்ற மாணவர்களுக்கு ரூ.7,750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொழில்முறை நிலை படிப்புக்கு ரூ.7,500 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இந்தப் படிப்புக்கு ஸ்காலர்ஷிப் அளிக்கப்படுகிறதா?

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு குறைவாகவும், பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணத்திலிருந்து அனைத்துக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, ஆரம்ப நிலைப் படிப்புக்கு சேர்த்துக்கொள்ளப்படுவர். அதேபோல் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ வகுப்பில் 75 சதவீதமும், இளநிலை பட்டப் படிப்பில்

60 சதவீதம் எடுத்து தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு நிர்வாக நிலைப் படிப்பில் சேர முழுக் கட்டணமும் விலக்கு அளிக்கப்படுகிறது. ஸ்டூடண்ட் எஜூக்கேஷன் ஃபண்ட் டிரஸ்ட் மூலம் இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

இந்தப் படிப்பில் சேர அட்மிஷன் எப்போது?

வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் சேரும் மாணவர்கள் அந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு எழுதலாம். செப்டம்பர்30ஆம் தேதிக்குள் சேரும் மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறும் அடிப்படைத் தேர்வை எழுதலாம். பிப்ரவரி 28க்குள் எக்ஸிகியூடிவ் கோர்ஸில் சேருபவர்கள் அதே ஆண்டு டிசம்பரில் 2 பிரிவுகளும்,மே31்குள் சேருபவர்கள் அதே ஆண்டு டிசம்பரில் ஒரு பிரிவு மட்டும் தேர்வு எழுதலாம். ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் எக்ஸிகியூடிவ் கோர்ஸில் சேரும் மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் 2 பிரிவுகளும், நவம்பர் 30க்குள் சேரும் மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜூனில் ஒரு பிரிவு தேர்வையும் எழுத முடியும்.

இந்தப் படிப்பில் சேருவதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது. ஆனால், குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியாகியிருக்கவேண்டும். இந்தியா முழுவதும் இந்தப் படிப்பில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் சேருகிறார்கள். ஆனால், இதில் முழுவதும் தேர்ச்சி பெறும் மாணவர்கள் வெறும் இரண்டாயிரம் மட்டுமே.

இந்தப் படிப்பு முடித்த பிறகு ஏதேனும் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறதா?

புரபஷனல் தேர்வை முடித்த மாணவர்கள், 16 மாத மேலாண்மை பயிற்சிக்கு (மேனேஜ்மெண்ட் டிரெயினிங்)செல்ல வேண்டும். அதற்குப் பிறகு இன்ஸ்டிட்யூட்டில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு அசோசியேட் கம்பெனி செக்ரட்டரி கோர்ஸ் முடித்ததற்கான சான்றிதழ் கிடைக்கும்.

பிராந்திய மொழியில் இந்தப் படிப்பை மேற்கொள்ள முடியுமா?

கம்பெனி செக்ரட்டரி படிப்பைப் பொருத்தவரை மாணவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் தேர்வு எழுதியாகவேண்டும்.

இந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு எப்படி?

சென்னை மண்டலத்தைப் பொருத்தவரை மொத்தம் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கு கொள்கின்றன. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாயிலிருந்து7 லட்ச ரூபாய் வரை ஊதியத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 7 லட்சம் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், 30 ஆயிரம் கம்பெனி செக்ரட்டரி மட்டுமே பணியாற்றுகிறார்கள். அப்படியானால், இந்தப் பணிக்கான நபர்களின் தேவையை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல், 2015ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 5,000 நிறுவனங்கள் கிராமப்புறத் திட்டத்தின் கீழ் திறக்கப்பட உள்ளன. ஒவ்வொரு நிறுவனத்திலும் கண்டிப்பாக ஒரு கம்பெனி செக்ரட்டரி நியமிக்கப்படவேண்டியிருப்பதால், இந்தப் படிப்புக்கான தேவை இன்று இருப்பதைவிட எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக இருக்கும்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி