நமது ஊரைசேர்ந்த 25 நாட்டுப் படகு மீனவர்கள் கடலில் மாயமாகியுள்ளனர். அவர்கள் புயலில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தானே புயல் காரணமாக தமிழக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கடந்த 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கப்பட்டிருந்தனக்.
இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆனால், எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற அதிராம்பட்டினம் மீனவர்கள் 25 பேர் மாயமாகியுள்ளனர்.
அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லியப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திகேயன், ரங்கராஜன், பழனியாண்டி, நாகராஜன், முருகன் ஆகியோர்களுக்கு சொந்தமான நாட்டுப் படகுகளில் 25 மீனவர்கள் கடந்த 27ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் மறுநாள் கரைக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை.
இதுபற்றி கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், அவர்களை மீட்குமாறு கடற்படையினருக்கு வேண்டுகோள் விடுத்தது.