"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
06 டிசம்பர் 2011

இன்னும் எத்தனை டிசம்பர்-6...?

0 comments
இன்னும் எத்தனை வருடங்களுக்கு முச்சந்திகளில் பிரிந்து நின்று கோஷம்போட்டு கலையப் போகிறோம்? நான்கு இமாம்கள், நாற்பது இயக்கங்கள் நானூறு கோஷ்டிகளாக இருந்தாலும் நமக்கெல்லாம் ஒரே கிப்லாதானே! எனில், பாபர் மஸ்ஜித் மீட்டெடுப்பில் நம்மை ஓரணியில் இணைவதைத் தடுக்கும் மனத்தடை எது?


பல்வேறு பிரிவுகளாக இயங்கும் சங்பரிவாரக் கும்பல் திட்டமிட்டு காய்நகர்த்தி பாபர் மஸ்ஜிதை தகர்த்ததில் வெற்றி கண்டனர். அவர்களிடமிருக்கும் ஒற்றுமை நம்மில் இல்லாமல் போனது ஏன்? ஒற்றுமையாக இருந்து இடிக்க முடியுமெனில் அதைக் மீளெழுப்பவும் அதே ஒற்றுமையால் முடியும்தானே? ஒற்றுமைக்கான அழைப்பை நம்மில் யார் விடுக்கப்போகிறோம் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.

பாபர் மஸ்ஜிதை இடித்து ஏறத்தாழ 20 ஆண்டுகளாகிவிட்டன. சுதந்திர இந்தியாவில் அரைநூற்றாண்டுக்கும் மேலான சட்டரீதியிலான வஞ்சனையே பாபர் மஸ்ஜித் வழக்கு! இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை, முதலில் நமக்குள் ஒற்றுமையாக ஓரணியில் இணைவோம். அனைத்து சமுதாய இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் பாபர் மஸ்ஜிதை மீளெளுப்புவதில் ஒத்த கருத்துடைய மாநில, தேசிய கட்சிகளுடன் இணைந்து 2% சங்பரிபார கும்பலை தனிமைப் படுத்தலாமே!

சமுதாய சொந்தங்களே! பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் சக இயக்கங்களைக் குறைசொல்லி தமது இயக்கத்தை வளர்க்க நம்மை பலிகடாவாக்கும் அமைப்புகளின் அழைப்புகளை புறக்கணியுங்கள். பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் அனைத்து இயக்கங்களும் ஒன்று சேராதவரை நம்மால் அதை மீட்டெடுக்க முடியாது. அதுவரை இவர்களின் கோஷங்கள் கடலில் கரைந்த பெருங்காயம் போன்று பயனற்றதே!

சமுதாய தலைவர்களே! கூட்டம் காட்டி கட்சி வளர்த்தது போதும்! நிறுத்துங்கள் உங்கள் வெற்று கோஷங்களை. முச்சந்திகளில் கூடிக்கலைவதால் நம்குரல் ஆட்சியாளர்களின் செவிகளைச் சென்றடையாது. யார் பெரியவன்? யாருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம்? என்ற புரையோடிப்போன ஈகோ எனும் அகம்பாவத்தை அல்லாஹ்வின் பொருத்தம்நாடி ஒதுக்கி வைத்து எங்களை வழிநடத்த உயர்மட்டளவில் ஆலோசித்து முடிவு காணுங்கள்.

இன்ஷா அல்லாஹ் நமது ஒற்றுமையின் வலிமையை ஜனநாயக வழிகளில் காட்டும்போது பாப்ரி மஸ்ஜித் மீள்கட்டமைப்பை நம் ஆயுள் காலத்திலேயே காண்போம்!

இப்படிக்கு,
இந்திய ஜனநாயகத்தை நேசிக்கும்
சாமான்ய முஸ்லிம் சகோதரன்
thanks :adiraixpress.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி