"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
13 டிசம்பர் 2011

ரூபாய்க்கு மதிப்பு போயே! போச்சு!

0 comments
ரூபாய்க்கு மதிப்பு போச்சு...


இதுவரை இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையானச் சரிந்துள்ளது. இதனால், சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு?

ட்ட காலிலே படும்என்று சொன்னது எவ்வளவு பெரிய உண்மை!

விலைவாசி உயர்வால் மூச்சுத் திணறிப் போயிருக்கும் சாதாரண மக்களுக்கு மேலும் ஒரு சோதனை. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. ஒரு டாலரின் மதிப்பு 46அல்லது 47ரூபாயாக இருந்தது போக, இப்போது (25.11.2011நிலவரப்படி) 52.25ஆக சரிந்துவிட்டது.

இதனால் பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரிய வியாபாரிகள் தவிர, சாதாரண மக்களுக்கும் நிறைய பாதிப்புண்டு. அநேகமாக, எல்லா நாடுகளும் அமெரிக்க டாலரை, ஏறக்குறைய ஒரு பொது நாணயமாகவே கருதுகின்றன. நாம் எல்லோருமே நம் அன்றாடத் தேவைகளுக்கு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருள்களை நம்பி இருக்கிறோம். உதாரணத்துக்கு கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருள்கள், மருந்து வகைகள், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் ஆகியவற்றை இறக்குமதி செய்கிறோம். இவற்றுக்கு நாம் டாலரில்தான் பணம் செலுத்த வேண்டியுள்ளது. ஒரு டாலருக்கான பொருளை 46ரூபாய் கொடுத்து வாங்குவதற்குப் பதில், இப்போது 52ரூபாய் கொடுத்து வாங்கவேண்டி உள்ளது அல்லவா?

இது தவிர, இந்தச் சரிவால் மருந்துகளின் விலையும் அதிகரிக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கும், சில மூலப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது. இந்த இறக்குமதியினால் உற்பத்திச் செலவு அதிகரிப்பதால், மருந்துகளின் விலை மேலும் அதிகரிக்கும்.

பெட்ரோலைப்பற்றி சொல்லவே வேண்டாம். அதன் விலை ஏறினால், போக்குவரத்து செலவு மட்டும் அல்லாமல், பல்வேறு பொருள்களின் விலையும் ஏறும்.

சரிவுக்கு காரணம் என்ன?

அமெரிக்கா, 2008ம் ஆண்டு சந்தித்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னமும் மீட்சி அடையவில்லை. அந்த நாட்டுப் பொருளாதாரத்தை தூக்கிப்பிடித்திட, பல்லாயிரம் கோடி டாலர்களை புத்துயிரூட்டும் திட்டங்கள் மூலம் அமெரிக்க அரசு செலவிட்டது. அதன்பிறகும், அங்கே வேலையில்லாத் திண்டாட்டம் குறையவில்லை.

இதனால், கொதித்துப்போன மக்கள், பங்குச் சந்தை, சர்வதேச நிதி நிறுவனங்கள் செயல்படும் வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம் என்ற போராட்டத்தில் குதித்தார்கள். போராட்டம் தெருவுக்கே வந்துவிட்டது.

பல ஐரோப்பிய நாடுகளிலும், நிதி நெருக்கடி கடுமையாக உள்ளது. கிரீஸ் அரசு கடனில் மூழ்கி தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. ஐ.எம்.எஃப். மற்றும் உலக வங்கி அதனை தாங்கிப் பிடித்துக்கொண்டு இருக்கின்றன. அதேபோல், ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி உள்ளிட்ட பல நாட்டு அரசுகள் கடன் சுமையை தாங்க முடியாமல் தவிக்கின்றன. அந்த நாடுகளின் பொது நாணயமான யூரோ மதிப்பிழந்துவிட்டது. அதன் விளைவு, உலகெங்கும் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையையும், யூரோவையும் புறம் தள்ளிவிட்டு, டாலரில் முதலீடு செய்கிறார்கள். எனவே, டாலருக்கு சர்வதேச அளவில் மதிப்பு அதிகரித்துவிட்டது. இந்தியா இதற்கு விதி விலக்கு அல்ல; ரூபாயின் மதிப்பு சரிய இது ஒரு முக்கிய காரணம்.

மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடிஎன்பதுபோல இந்திய பங்குச் சந்தையில், ஏற்கெனவே முதலீடு செய்திருந்த அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors - FII) தமது முதலீடுகளைத் திரும்பப் பெறத் தொடங்கினார்கள். இதனால், டாலர்கள் வெளியே சென்றன.

இந்திய பங்குச் சந்தை இன்னும் எழுச்சி அடையாததால், புதிய அந்நிய நிறுவன முதலீடுகள் வரத் தொடங்கவில்லை. இதனால், இந்தியாவுக்கு டாலர்கள் வருவதும் குறைந்துவிட்டது.

நமது இறக்குமதிகளுக்கு டாலரில் பணம் செலுத்த வேண்டி உள்ளது. இதனால், டாலருக்கு கிராக்கி ஏற்பட்டு, ரூபாய் மதிப்பு மேலும் குறைகிறது.

ரூபாயின் சரிவு தொடருமா என்றால், தொடரும் என்றுதான் தோன்றுகிறது. அடுத்த ஆண்டில், டாலருக்கு 55ரூபாய் அளவுக்கு ரூபாயின் மதிப்பு குறையக் கூடும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

யாருக்கு லாபம்?

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறையும்போது, பொதுவாக, லாபம் அடைகிறவர்கள் ஏற்றுமதியாளர்கள்தான். ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு டாலர் மதிப்புள்ள பொருளுக்கு ரூ.46அல்லது ரூ.47க்கு பதில் ரூ.52கிடைத்தால் லாபம்தானே? ஆனால், இதிலும் இடியாப்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல் சிக்கல், வெளிநாட்டிலிருந்து ஆர்டர் கொடுப்பவர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது என்பதை கருத்தில்கொண்டு, பொருள்களின் விலையை குறைக்கும்படி கேட்கிறார்கள். அப்படிக் குறைக்க நேர்ந்தால் லாபம் குறையும். இது தகவல் தொழில்நுட்பத் துறைக்கும் பொருந்தும்.

திருப்பூர் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்பவர்களில் பலர் ரூபாயின் மதிப்பு இந்த அளவு சரியும் என்பதை எதிர்பார்க்கவில்லை. ஏற்றுமதி மூலம் வர உள்ள டாலருக்கு ரூ.48என்ற கணக்கில் அந்நியச் செலாவணி சந்தையில் முன் கூட்டியே ஒப்பந்தம்(Forward cover) செய்து கொண்டார்கள். இதனால், இந்த ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அளவு லாபம் கிடைக்காமல் போகலாம்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வசிக்கும் தங்கள் குடும்பத்திற்குப் பணம் அனுப்புகையில், வழக்கமான டாலர் தொகை மட்டுமே அனுப்பினாலும், இங்குள்ள குடும்பத்தினருக்கு கூடுதல் ரூபாய் கிடைக்கும் என்பது ஒரு நல்ல செய்தி.

இதற்கு தீர்வே இல்லையா?

இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி தன் வசம் உள்ள கையிருப்பிலிருந்து, தேவையான அளவு டாலரை சந்தையில் (விற்பனை மூலம்) பாய்ச்சினால், உள்நாட்டில் டாலருக்கான தேவை குறையும்; ரூபாயின் மதிப்பு உயரும். சொல்லப்போனால், கடந்த காலங்களில் ரிசர்வ் வங்கி இந்த மாதிரியான நடவடிக்கையை அவ்வப்போது மேற்கொண்டு வந்துள்ளது. ஆனால், ஏனோ அண்மைக் காலங்களில் ரிசர்வ் வங்கி, இந்தத் திசையில் களம் இறங்கவில்லை. இதனால், இந்திய வர்த்தக உலகம் ஏமாற்றம் அடைந்துள்ளது.

"ஐரோப்பிய நாடுகளில் தற்சமயம் நிலவும் கொந்தளிப்பான பொருளாதாரச் சூழல் இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன், ரூபாய் மதிப்பு பழைய நிலைக்கு வரும்" என்கிறார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி. சுப்பராவ். அவர் மேலும் கூறுகையில், ரிசர்வ் வங்கி ரூபாய் வீழ்ச்சியை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அவசியம் நேரிடும்போது, அது களம் இறங்கும் என்கிறார். அது எப்போது நிகழுமோ தெரியவில்லை. அதுவரை மக்கள் அவதிப்பட வேண்டியதுதான் போலும்!

ஆக்கம் : அஷ்ரப்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி