முல்லைப் பெரியாறு அணை கட்டி 116 ஆண்டுகள் ஆகி விட்டதால் பழைய அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்றும் புதிய அணை கட்டா விட்டால் முல்லைப் பெரியாறு அணை உடைந்து சுமார் 35 லட்சம் மக்கள் உயிரை விடுவார்கள் என்ற உண்மைக்கு ஒவ்வாத வாதத்தை வைத்து இரு மாநில மக்களிடையே இருந்த நல்லுறவைச் சீர் கெட்டுப் போகச் செய்துள்ளது கேரள காங்கிரஸ் அரசும் ஏனைய அரசியல் கட்சிகளும்.
திரைத்துறையினருக்கு சமூக பொறுப்பில்லை என்பதையும் அவர்களுக்கு வணிக நோக்கமே பிரதானம் என்பதையும் 98% திரைப்படங்களிலிருந்து அறியலாம். அவ்வாறு திரையிடப்பட்ட ஒரு கற்பனை படத்திற்குக் கேரள வக்காலத்து வாங்குவதும், நிதியுதவி செய்வதும் கேரள அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதத்தைக் காட்டுகிறது.
முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என்றும் அணை உடைந்து விடும் என்பதெல்லாம் ஊடகங்கள் செய்து வரும் பூதாகரப் பிரச்சாரம் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசின் தலைமை வழக்கறிஞரே தெரிவித்துள்ளார். கேரள அரசியல் கட்சிகள் செய்து வரும் இந்த வன்ம பிரச்சாரத்திற்கு ஒரே காரணம் அரசியல். இதை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த திமுகவே தெரிவித்துள்ளது.
பிரவம் தொகுதியில் நடைபெற உள்ள இடைத் தேர்தல் காரணமாகவே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள கட்சிகள் அரசியல் செய்து வருவதாக தாம்பரத்தில் உண்ணாவிரதம் இருந்த திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் டி.எம்.ஜேக்கப்பின் மறைவை அடுத்து அங்கு நடைபெற உள்ள இடைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே கேரள அரசியல் கட்சிகள் இரு மாநில மக்களின் நல்லுறவைக் கெடுக்கும் வன்மப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.
தற்போது கேரள அரசில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 71 . எதிர்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டணிகளின் பலம் 68 .பிரவம் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றும் நிலையில் எதிர்க் கட்சிகளின் கூட்டணி பலம் 69 ஆகி விடும். காலம் போன போக்கில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இன்னும் ஒரு சிலர் காலியானால் உம்மன் சாண்டி வீட்டுக்குப் போய் அச்சுதானந்தன் அரியணை ஏறி விடுவார். இதன் காரணமாக பிரவம் தொகுதியில் எப்பாடுபட்டாவது வென்று விட வேண்டும் என்று இரு கூட்டணிக் கட்சிகளும் மல்லுக் கட்டுகின்றன.
கேரள அரசியல் கட்சிகள் நடத்தும் விளையாட்டு புரியாமல் கேரள மாநிலத்தில் வேலைக்குச் செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த பெண்களை மானபங்கப் படுத்துவதும், தமிழர்களின் வீடுகளுக்குத் தீ வைப்பதும் தமிழர்களை அடித்துத் துன்புறுத்தும் வேலைகளைக் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலரும் அதே போன்று கேரள மாநிலத்தவர்கள் வைத்துள்ள வணிக நிறுவனங்களை அடித்து உடைக்கும் வேலைகளில் சில தமிழர்களும் இறங்கி இருப்பது வேதனை. கேரள மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப் படுவது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பயனில்லை. கேரள காவல்துறை வேடிக்கை பார்க்கும் நிலையில் மத்திய உள்துறையைக் கையில் வைத்து இருப்பது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் என்பது இன்னும் கொடுமை.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நரேந்திர மோடியைக் குற்றம் சொல்ல என்ன யோக்யதை இருக்கிறது. முதல்வர் பதவிக்காகவும் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் சிறுபான்மை முஸ்லீம்களைக் கொன்றுக் குவித்து ஓட்டு வேட்டையாடிய நரேந்திர மோடிக்கும் தன் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்காக இரு மாநில மக்களின் மனதில் விஷ விதையைத் தூவியுள்ள உம்மன் சாண்டிக்கும் என்ன வித்தியாசம்.
மக்களிடம் மதவெறியைத்தூண்டி ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தைச் சிதைத்த மோடிக்கும், மொழிவெறியைத்தூண்டிவிட்டு இருமாநில மக்களின் நல்லுறவையும் இயல்புவாழ்க்கையையும் சிதைத்துள்ள கேரள உம்மன்சாண்டி கூட்டத்துக்கும் அதிக வித்தியாசமில்லை. இதனை மக்கள் புரிந்து கொள்ளும்வரை, இதுபோன்ற அரசியல் விளையாட்டுகளில் பலியாகிக் கொண்டிருப்பது அப்பாவி மக்கள்தான்!