அரசு பஸ்களில், பயணம் செய்யும் பயணிகளுக்கு வடை, பொங்கல், பிரியாணி இலவசமாக வழங்கப்படவுள்ளன' என, ஆந்திரா மாநில போக்குவரத்துக் கழக அதிகாரி, ரெட்டியப்பா கூறினார்.
வேலூர் அடுத்த, ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு, ஆந்திரா மாநில போக்குவரத்துக் கழக திட்ட அதிகாரி, ரெட்டியப்பா நேற்று தரிசனம் செய்ய வந்தார். அப்போது, ரெட்டியப்பா கூறியது:
ஆந்திரா மாநில அரசு போக்குவரத்துக் கழகம், தனியார் பஸ்களின்
போட்டியை சமாளிக்க, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அய்யப்ப பக்தர்களுக்கு சிறப்பு பேக்கேஜ், திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முன்கூட்டியே ரிசர்வ் செய்யும் திட்டம், தொலை தூரம் உள்ள ஊர்களுக்கு, தனியார் பஸ்களை விட, ஒரு மணி நேரம் முன்கூட்டியே செல்லும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
சித்தூர், திருப்பதி, மதனபள்ளி, குப்பம், வேலூர், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து, ஐதராபாத் செல்லும் பஸ்கள் அனைத்திலும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆந்திரா அரசு பஸ்களில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. மேலும், 20 சதவீதம் வருவாய் உயர்ந்துள்ளது.
இதையடுத்து, தொலை தூரம் செல்லும் பயணிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த, காலையில் பொங்கல், வடை, இட்லி, மதியம் வெஜிடபிள் பிரியாணி, சிக்கன், மட்டன் பிரியாணியுடன் மீன் வருவல் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
பயணிகள் டிக்கெட் புக் செய்யும் போதே, தங்களுக்கு வேண்டிய உணவு வகைகள் குறித்து, மெனு கார்டில் குறித்து கொடுத்து விட வேண்டும். பின்னர் பஸ்சில் ஏறிய உடனேயே, பயணிகள் குறிப்பிட்டபடி உணவுகள் வழங்கப்படும். இத்துடன், தண்ணீர் பாட்டிலும் சேர்த்து வழங்கப்படும்.
ஆந்திரா மாநிலம் முழுவதும், இத்திட்டம் இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்யப்படும். அதே சமயம், இத்திட்டத்திற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. இவ்வாறு, ரெட்டியப்பா கூறினார்.