அஸ்ஸலாமு அலைக்கும்
நான் ஒரு தனியார் நிறுவனத்தில் மாதச் சம்பளத்திற்கு பணி புரிபவன். என் சம்பளத்தில் நிர்வாகமே பி.எஃப் , கூட்டுறவு பண்டக சாலை மற்றும் குரூப் இன்சூரன்ஸ் போன்றவற்றிற்கென பிடித்தம் செய்து கொள்கிறது. இவற்றில் வட்டியின் பங்கு உள்ளது. ஆனால் தவிர்க்க முடியவில்லை.
மேலும் நிர்வாகத்தின் மூலமாக கடன் பெற்று ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி இருக்கிறேன். இதிலும் திருப்பி செலுத்தும்போது வட்டி உள்ளது.
மேலும் எனது சொந்தப் பணத்தைக் கொண்டு ஒரு வருடத்திற்கு முன்பாக ஒரு மனை வாங்கி இருக்கிறேன். வாங்கும்போது பணப் பற்றாக்குறையால் நகைகளை அடமானமாக வங்கியில் வைத்து கடன் வாங்கி சமாளித்தேன். இங்கும் வட்டி வந்து விடுகிறது.
வருமான வரி சலுகை பெறுவதற்காக இரண்டு இன்சூரன்ஸ்கள் போட்டிருந்தேன். அவை நம் பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து அதன் மூலம் வரும் லாபம் அல்லது நஷ்டம் அவற்றைக் கணக்கில் கொண்டு பின்னர் திரும்பக் கிடைக்கும் வகையிலான இன்சூரன்ஸ்கள். ஆனாலும் அவற்றில் நஷ்டத்தை மட்டுமே காட்டுகிறார்கள் என்பதோடு இவையும் வட்டி சம்பந்தப்படுபவை என்பதால் இந்த வருடம் அவற்றையும் நிறுத்தி விட்டேன்.
என் சம்பளத்தை நிர்வாகம் வங்கியின் மூலமே வழங்குகிறது. என் சேவிங்ஸ் பேங்க் கணக்கில் இருக்கும் தொகைக்கான வட்டியையும் வங்கி அவ்வப்போது வழங்குகிறது. ஆனாலும் வங்கியினுடனான வரவு செலவை தவிர்க்க முடிவதில்லை. வங்கியில் சேமித்தால் வங்கி நம் பணத்திற்கு வட்டி தருகிறது. அதோடு நம் பணத்தை பிறருக்கு வட்டிக்கு விட்டு வட்டியை வளர்த்துகிறது.
அதனால் வேறு ஏதாவது ஒரு வகையில் சேமிக்கலாம் என்று ஏலச்சீட்டுக் கட்டலாம் என்றால் அதில் தள்ளு தொகை என வருவது வட்டிக்கு சமமானது என்கிறார்கள். அதில் ஒன்று நாம் நஷ்டப்படும்போது வட்டி கட்டுகிறோம் அல்லது நாம் லாபமடையும்போது வட்டி வாங்குகிறோம் என்கிறார்கள்.
இப்பொழுது நாளுக்கு நாள் ஏறி வரும் கட்டுமான செலவுகளை மனத்தில் கொண்டு, சொந்தமாய் ஒரு வீடு வேண்டும் என்ற நோக்கில் நான் வாங்கி இருந்த மனையில் இன்ஷா அல்லாஹ் ஒரு வீடு கட்ட எண்ணி உள்ளேன். ஆனால் அதற்காகும் முழுத் தொகையும் என்னிடம் இல்லை. அதனால் வங்கியில் கடன் வாங்கி கட்டத் தீர்மானித்துள்ளேன். இதன் மூலம் இன்ஷா அல்லாஹ் வீட்டையும் க்ட்டி விடலாம் அதே சமயம் தேவை இல்லாமல் நான் கட்டி வரும் வருமான வரியில் சலுகையும் பெறலாம். வேறு வழி ஏதும் எனக்கு தெரியவில்லை.
இப்படி வட்டியை வாழ்க்கையில் தவிர்க்க நினைத்தாலும் வேறு வழி இல்லாத நிலையில் இருக்கிறேன்.
ஆகவே வேறு வழியோ அல்லது விளக்கமோ விஷயம் தெரிந்த அறிஞர்களிடமிருந்து தேவை. அது எனக்கு மட்டுமல்ல என் போன்ற பலருக்கும் உபயோகமாக இருக்கும்.
அன்புடன் ,
நூர்தீன்
you can get diminishy musharaka on Amana (Srilanka)