சவூதியின் அல்பாஹா நகரில் சாலை விபத்தொன்றில் இறந்த சவூதி இளைஞன் ஒருவனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவனுடைய பெற்றோர் முன்வந்துள்ளனர்.
அல்பாஹா நகரின் மன்னர் ஃபஹத் மருத்துவமனையின் உறுப்பு தானப் பிரிவு பொறுப்பாளரிடம் சவூதி உறுப்பு தான மையம் (SOTC) வைத்த கோரிக்கை படி, அந்தப் பொறுப்பாளர் இறந்த இளைஞனின் பெற்றோரை அணுகி "இறைவனுக்காக, இறந்த மகனின் உறுப்புகளை தானம் வழங்குங்கள்" என்று கேட்டுக்கொண்டார். இது பற்றி கருத்து தெரிவித்த இறந்த இளைஞனின் சகோதரர், "இறைவனுக்காக, இம்மாபெரும் கொடைக்கு எங்கள் பெற்றோர் ஒப்புக்கொண்டார்கள்" என்று கூறினார்.
அல்பாஹா மருத்துவத்துறை பொறுப்பாளர் மாஜித் ஆல் ஷாத்தி கூறுகையில், "சவூதி உறுப்பு தான மையத்தின் மருத்துவக் குழு கடந்த சனியன்று உலங்கு வானூர்தியில் அல்பாஹா வந்தடைந்தது. 10 நுட்ப வல்லுநர்களும், அறுவை சிகிட்சை மருத்துவர்களையும் கொண்ட அந்தக் குழு தேவையான உறுப்புகளை தானம் பெற்றுச் சென்றது. இவையாவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் இளவரசர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் வழிகாட்டுதல் படி நடைபெற்றது" என்றார்.
சவூதி உறுப்பு தான மையம் (SOTC) இயக்குநர், அந்தக் குடும்பத்தினருக்கான தனது பிரார்த்தனைகளைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், இளவரசர் சல்மான், அல்பாஹா மாகாண சுகாதாரத்துறை இயக்குநர் அப்துல்ஹமீது அல்காம்தி ஆகியோருக்கு நன்றிகளையும் அவர் தெரிவித்தார்.