"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
17 ஜனவரி 2012

மரணிக்க போரவர்கள் தானே !!!

0 comments

சாவப்போறவங்க தானே? என்று ஓடியாடி குடும்பத்திற்காக வேலை செய்து திரிந்த உடல் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியதும் வயோதிகத்தால் மேனி சுருங்கி இன்றோ, நாளையோ வரக்கூடிய மரணத்தை எதிர்பார்த்த வண்ணம் செய்வதறியாது சுயநினைவில் பெரும் பகுதியை இழந்து விழித்துக்கொண்டிருக்கும் வீட்டின் வயோதிகர்களுக்கு உரிய மருத்துவம் செய்யவும், (அவர்கள் மீது முதலீடு செய்யவிரும்புவதில்லை. காரணம் இங்கு முதலீடு செய்தால் அவர்கள் மரணித்து விட்டால் அது திரும்பி வராதல்லவா?) அதாவது அவர்களுக்கு தேவையானவற்றில் அவர்கள் ஈன்றெடுத்த பிள்ளைகளே போதிய பணங்காசுகளும், போதிய‌ வசதி வாய்ப்புகள் பெற்றிருந்தும் செலவு செய்ய தயங்கி வருவது நம் ஊரில் நாளுக்கு நாள் அங்கொன்றும், இங்கொன்றுமாக அதிகரித்துவருவது வேதனையளிக்கிறது.



அவர்கள் பெற்ற பிள்ளைகள் தங்களின் பட்டப்படிப்பாலும், தனித்திறமை, அனுபவத்தாலும் குடும்பத்துடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளிலும் மற்றும் அரபுநாடுகளில் பிள்ளைகுட்டிகளுடன் சந்தோசத்துடன் குதூகலமாக இருந்து விட்டு போகட்டும். இதற்கு தடையேதும் இல்லை. பணங்காசு உதவிகள் செய்து அவர்களை விட்டு தூரமாக இருந்தாலும் நல்ல முறையில் எவ்வித குறையுமின்றி கவனிக்கும் வரை இது ஒரு நல்ல முன்னேற்றம் தான் மாற்றுக்கருத்தேதும் இல்லை.

காலச்சூழ்நிலையால் பெற்ற தாய்,தந்தையரை அருகில் இருந்து கவனித்து அவர்களுக்கு வேண்டிய‌ பணிவிடைகள் செய்ய‌ முடியாம‌ல் போனாலும் ப‌ர‌வாயில்லை. அவ‌ர்க‌ளுக்கு மருத்துவம் போன்ற அத்தியாவசிய‌ தேவைகளுக்கு செல‌வு செய்வ‌த‌ற்கு அவ‌ர்க‌ளை வைத்து ப‌ராம‌ரிப்ப‌வ‌ர்க‌ளுக்கு வேண்டியதை அவர்கள் கேட்காமலேயே கொடுக்க‌ வேண்டும‌ல்ல‌வா? அது யாராக‌ இருந்தாலும் ச‌ரி.

பெற்றவர்களுக்கு ஈன்றெடுத்த பிள்ளைகளே ஏதேனும் ஒரு வழியில் வேதனை செய்து துன்புறுத்தினாலும் பிள்ளைகளுக்கு ஏதேனும் துன்பம் வரும் பொழுது முதலில் உள்ளம் உருகி கண்ணீர் வடிவது அவர்களின் கண்களிலிருந்து தான் இருக்கும் உன் கண்ணீருக்கு முன்.



பெத்த‌ வாப்பா, உம்மாவுக்கு பயன்படாமல் பொத்திப்பாதுகாத்த‌ ப‌ணங்காசு என்றோ உன‌க்கு வ‌ர‌ இருக்கும் வ‌யோக‌த்திற்கும் ப‌ய‌ன்ப‌டாம‌ல் வ‌ர‌த‌ட்சிணைப்பொறுக்கிக‌ளுக்கோ அல்ல‌து ஏதேனும் ஒரு ந‌ஷ்ட‌த்தில் தான் கொண்டு போய் சேர்க்கும்.

வ‌யிற்றில் எட்டி உதைத்து பிரசவ நேரத்தில் பெரும் வேதனையைத்தருவார்கள் என்று கருதி எந்தத்தாயும், தகப்பனும் க‌ருவ‌றையிலேயே த‌ன் குழ‌ந்தையை கொல்ல‌ விரும்ப‌மாட்டார்கள். உன்னால் வ‌ரும் வேத‌னைக‌ளை இன்ப‌முட‌ம் ஏற்று பெற்றெடுத்து ந‌ன்கு பராம‌ரித்து, வ‌ள‌ர்த்து உன்னை ஆளாக்கி இறைவனிடம் கெஞ்சிக்கேட்டு உன்னை கொண்டு வ‌ந்து அவ‌ர்க‌ள் இந்த‌ நல்ல‌ நிலைக்கு சேர்த்த‌த‌ற்கு நீ கொடுக்கும் கைமாறு தான் இதோ?



உலகில் ஒரு ந‌ர‌க‌மாக‌ ம‌னித‌நேய‌ர்க‌ளால் சித்த‌ரிக்க‌ப்ப‌டும் முதியோர் இல்ல‌ங்க‌ளில் வேண்டா வெறுப்பாய் நீ அவ‌ர்க‌ளை விட்டுச்சென்றாலும் மாதாமாத‌ம் அவ‌ர்க‌ளை வைத்து ப‌ராம‌ரிப்ப‌த‌ற்காக‌ முதியோர் இல்ல‌ங்க‌ளுக்கு ஒரு தொகை கொடுக்க‌ வேண்டும‌ல்ல‌வா?

கடுகளவேனும் மனித‌ நேய‌ம் இல்லாம‌ல் எல்லாம் செத்துப்போன‌ ஒருவ‌ரை ம‌னித‌மிருக‌ம் என்று சொல்லாம‌ல் மனித‌ருள் மாணிக்க‌ம் என்றா அழைக்க‌ முடியும்?

"உசுரா ஈக்கிம் போது கொஞ்ச‌மும் ம‌திப்ப‌தில்லை அவ‌ர்க‌ள் விரும்பும் க‌வனிப்பும், அரவணைப்பும் த‌ருவ‌தில்லை. ம‌வுத்தா போன‌துக்க‌ப்புற‌ம் உக்காந்துகிட்டு என் க‌ண்ணான‌ வாப்பா, என் க‌ண்ணான‌ உம்மா, சீதேவி நாச்சியா, தங்கமானவோ, நல்லவோ, வல்லவோ" என்றெல்லாம் சொல்லி ஒப்பாரி வைத்து அழுவ‌தில் கொஞ்ச‌மும் அர்த்த‌மும் இல்லை அத‌ற்கு அவ‌சிய‌மும் இல்லை.



நாகரீக உலகில் பார்ப்ப‌த‌ற்கு அவ‌ர்க‌ள் அழுக்கான‌வ‌ர்க‌ளாக, அசிங்கமானவர்களாக‌ தெரிய‌லாம் ஆனால் உள்ள‌த்தில் ஒளிந்திருக்கும் பாச‌த்திலும், நேசத்திலும் அவ‌ர்க‌ள் எவ‌ரெஸ்ட் சிக‌ர‌த்தின் உச்சியை மூடி மறைத்திருக்கும் அந்த‌ வெண்ப‌னியை விட‌ வெண்மையான‌வ‌ர்க‌ள், மென்மையான‌வ‌ர்க‌ள். உள‌மார அவர்களை புரிந்து கொள்வோம்.



பெற்ற‌வ‌ர்க‌ள் மேல் என்ன‌ தான் குற்ற‌ம், குறை காண‌ப்ப‌ட்டாலும் பெற்ற‌ க‌ட‌னுக்காக‌ கால‌மெல்லாம் அவ‌ர்க‌ளை போற்றிப்ப‌ணிவிடை செய்ய‌ நாம் க‌ட‌மைப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாவோம். அவர்க‌ளின் து'ஆ தான் ந‌ம் வாழ்க்கைச்ச‌க்க‌ர‌ம் சிக்குண்டு முடங்காமல் செம்மையாய் ந‌க‌ர‌ போட‌ப்ப‌டும் கிரீஸ்(ம‌ச‌கு) போன்ற‌தாகும்.

ம‌ன‌தில் தோன்றிய‌தை இங்கு எழுதிவிட்டேன். ஏதேனும் த‌வ‌று இருப்பின் ம‌ன்னிக்க‌ வேண்டுகிறேன்.



மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

THANKS : adiraixpress

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி