இரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி பொறுக்குகிறாய்? என்ன கேள்வி இது? குளிர் காயத்தான். எப்போது குளிர் காய்வாய்? இவனிடம் பதிலில்லை.
எழுபதுகளிலும் எண்பதுகளிலும்(1970களிலும், 1980களிலும்) வேலை வாய்ப்புத் தேடி இங்கு வளைகுடா நாடுகளுக்கு வந்தவர்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில் சேர்ந்து.அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.
அந்த பணத்துக்காக இதுவரை கேவலமாக நினைத்து ஒதுக்கி வந்த கடைநிலை வேலைகளையும் செய்தார்கள்.இவர்களை மாடலாக கொண்டு 90 களுக்கு மேல் வந்த இவர்களின் அடுத்த தலைமுறை அத்தகைய கடைநிலை வேலைகளில் ஈடுபடுவதை சமூக அந்தஸ்துக்குரிய செயல்களாக பார்த்தனர் இதன் விளைவாக உயர்கல்விக்கான ஆர்வம் குறையத் தொடங்கி. படிக்காத சமூகமாக மாறிப் போயினர்.
90க்கு மேல் வந்தவர்கள் படிப்பின் அவசியத்தை அனுபவப்பூர்வமாக உணர ஆரம்பித்தார்கள் சமூகத்திலும் இந்த காலகட்டத்திற்கு பிறகுதான் நிறைய விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்ப்பட்டது. இவர்கள் தங்களுடைய பிள்ளைகளை இவர்களின் இளமையை விற்று படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு சில விதிவிலக்கானவர்கள் சரியாக படித்து சரியான வேலைகளில் இருந்தாலும் அவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறுபான்மை என்பதையும் மறுக்க முடியாது.
சரி விஷயத்துக்கு வருவோம் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா?
30, 35 வருஷமாக சவூதியில் இருந்து சம்பாதித்து சந்தோஷமாக இருந்தீங்களா என்று இங்குள்ள முதியோர்களிடம் கேள்வியை வைத்துப் பாருங்கள்? இரண்டு குமரிகளைக் கட்டி கொடுத்தேன், பசங்களை 10 வது படிக்க வச்சு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு கூட்டி வந்துட்டேன், வீடு கட்டினேன் என்று கேள்வியைத் திசைத்திருப்பி பதில் சொல்வார்கள். ஆனால் அவர் இழந்த இளமைக்கால வாழ்க்கை, மரங்கள் இல்லாததால் ஆக்ஸிஜன் இல்லாமல் அவர் பெற்றுக் கொண்ட வியாதிகள் இவை பற்றி பேசமாட்டார். தாங்கள் தோற்கவில்லை என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் செய்த சாதனைகள் அதாங்க குமர்களை கட்டிக் கொடுத்தது,பிள்ளைகளை வெளிநாடு கூட்டி வந்தது வீடு கட்டுனது இது போன்ற சாதனைகளை செய்ய 90 மேல் வந்தவர்கள் முழி பிதுங்கி நாக்கு தள்ள சம்பாரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் சாதிக்க தாமதமாவதற்கு காரணம் அனைவரும் அறிந்ததே விலைவாசி உயர்வு. 70 80களில் வந்தவர்கள் சம்பளமும் 800 அல்லது 1000 ரியால் 90 களில் கடைநிலை வேலைகளுக்கு வந்தவர்களுக்கும் அதே 800 அல்லது 1000 தான்.
80 களில் வந்தவர்களுக்கு நாணய மதிப்பில் 1000(அன்றைய இந்திய நாணய மதிப்பு 15000) ரியால் பிரமாதமான சம்பளம் தான் அவர்களால் எதோ மிச்சம் பிடித்து வீடு கட்ட முடிந்தது. 90 களில் வந்தவர்கள் வரவுக்கும் செலவுக்கும் ஊர் பயணம் போறதுக்கும் சரியாக இருக்கிறது.
இதை விட பாவப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.
2010 களுக்கு மேல் வளைகுடா நாடுகளுக்கு 500 ரியால் 800 ரியால் சம்பளத்திற்க்காக படிப்பை பாதியில் விட்டு விட்டு வருபவர்கள் இவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது இன்றைய விலைவாசி என்ன?
ஊரில் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு கடைநிலை வேலை சம்பளம்கூட உயர்கிறது. உதாரணத்திற்கு 2002 ல் நான் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது 2500 ரூபாய் சம்பளம். என் மனைவி அதற்குள் செலவழித்து 300 ரூபாய் மிச்சம் பிடிப்பார். இப்போது அதே ஜவுளிக்கடை வேலைக்கு 8500 ரூபாய் சம்பளம் ஊரிலேயே கிடைக்கிறது. அந்த 8500 ரூபாய் இப்போது குடும்ப செலவுக்கு சரியாக இருக்கும் என்பது வேறு விஷயம்.
ஆனால் ஊரில் விலைவாசி கூடி விட்டது என்பதற்காக வளைகுடா நாடுகளில் சம்பளத்தை கூட்ட மாட்டார்கள் .இங்கே அதே 500 அல்லது 800 ரியால் சம்பளம்தான் 500,800 (இந்திய மதிப்பிற்கு 6000,அல்லது 9600) சம்பளத்திற்கு புதிதாக நிறைய பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது சொல்லுங்கள் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா?
சவூதியில் என்னைச் சுற்றியிருக்கிற நண்பர்கள் ஒரு சிலரின் சம்பள விவரங்களும் அவர்களுடைய வேலைகளும்.
இவர் பங்களாதேஷ் தொழிலாளி 500 ரியால் சம்பளம். வேலை இந்த மாடியின் எட்டு தளங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். சவூதி மணல் காற்றின் தூசியைப் பற்றி இங்கு வேலை செய்பவர்களுக்கு தெரியும்.
இவர் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஃபாஸ்ட்ஃபுட் சான்ட்வீச் கடையில் வேலை. சவூதி வெயிலில் அதுவும் நெருப்புக்குள் வேலை. சம்பளம் 800 (இ.9200)ரியால்.
இவர்கள் தழிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள். மண்டைய பிளக்கிற அரபு நாட்டு வெயிலில் ரோடு போடும் வேலை.
சம்பளம் 1000(இ.11500) ரியால். ஒரு நாள் இந்த வெயிலில் இவர்கள் தார் போடும்போது அருகில் நின்று பாருங்கள் அலுவலகத்தில் ஏசி காற்று காரணமாக வியர்வை வராமல் வியாதி வர வாய்ப்பு இருப்பவர்கள் மொத்த வியர்வைகளையும் வெளியாகி ஆரோக்கியம் பெற வாய்ப்பு கிடைக்கும்.
இவர் கேரளாவை சேர்ந்த தொழிலாளி அடுப்பு சூட்டில் வேலை.சரியான கூட்டம் வருகின்ற கடை பம்பரமாக சுழல்வார்கள்.சம்பளம் 1200
(ருபாய்.13800)
இறுதியாக
இப்போதும் 10th, 12th படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இதுபோன்ற கடைநிலை வேலைகளுக்கு தயவுசெய்து வராதீர்கள். உங்களையும் நீங்கள் சார்ந்திருக்கிற சமூகத்தையும் அழிவிற்கு இழுத்து செல்கிறீர்கள். அப்படி வருவதாக இருந்தால் சரியான முறையில் படித்து அதற்கேற்ற வேலைக்கு வாருங்கள். இப்படி வருபவர்கள் குடும்பத்தையும் அழைத்து வரலாம். கடைநிலை வேலை செய்யும் லேபர்களுக்கு குடும்பத்தை அழைத்துவர விசா அனுமதி கிடையாது என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.
ஆக்கம் : .அப்துல் மாலிக் (புதுத்தெரு)