"என்னா காக்கா ரொம்ப நாளாச்சு? வெளிநாடு கிலிநாடு போய்ட்டியலோன்னு நெனைச்சேன்" - காதர்
"நான் எங்க போவப்போறேன்.இங்கதான் அப்புடி இப்புடி சுத்திக்கிட்டு ஈப்பேன்" - ஊர்சுத்தி
"அப்ப வல்பமான செய்தியலுவோ ஈக்கிம்னு நெனைக்கிறேன்"
"ஆமா காதரு. ஏதோ மனசுல பட்டத சொல்லுறோம். அதக்கேட்டுட்டு நம்ம புள்ளையலுவோ இண்டர்நெட்ல எழுதுறாங்க. ஆனால் ஒன்னும் ப்ரோஜனம் (பயன்) ஈக்க மாட்டேங்குதுடா. அதான் வருத்தமா ஈக்கிது"
"அதப்பத்தி எல்லாம் கவலப்படாதிய காக்கா. நம்ம மனசுல ஈக்கிறத அப்புடியே சொல்லிடுறது நல்லது. பொது விசயத்துல உங்களமாதிரி ஆளுங்க அப்பப்ப எதாச்சும் சொல்லுறதுனாலதான் எங்கள மாதிரி ஆளுங்களுக்கு பொது புத்தி வளருது"
"சரிடா காதரு!அல்-அமீன் பள்ளியாச விசயம் என்னாச்சு?. நம்ம சேர்மன் தம்பி பதவிக்கு வந்ததும் கூடிய சீக்கிரம் இந்தப் பிரச்சினையை தீர்ப்பேன்னு வாக்கு குடுத்தாரே!"
"காக்கா, நானும் இதுவிசயமா உங்கள்ட கேட்கனும்னு நினைச்சாக்கா நீங்க என்னடான்டா என்னட்ட போயி கேட்கிறிய. இது நாயமா காக்கா?"
"டேய் காதரு. இந்த விசயத்துல இதுவரை என்னா நடந்தவைகளை வெள்ளை அறிக்கையா வெளியிடனும். இதுல சட்ட சிக்கல் ஈக்கிதுன்னு அவற்றையும் சட்டப்படி அதை எப்படி சுமூகமா தீர்ப்பது? மாற்று ஏற்பாடு எதாச்சும் ஈக்கிதா? இதுமாதிரி பல நுணுக்கமான விவகாரங்கள் ஈக்கிது! நம்ம இஷ்டத்துக்குச் சொல்லிடக்கூடாதுல்ல!"
"சரிதான் காக்கா. இப்பத்தான் எல்லா முஹல்லாஹ்வும் ஒன்னாயிட்டம்ல. ஒருநாளைக்கு ஒன்னா உட்கார்ந்து ஆலிம்சா, சேர்மன்,பள்ளியாச கமிட்டி எல்லாரும் சேர்ந்து ஒரு மசூரா செஞ்சிட்டா பெரச்சினை முடிஞ்சிடும். நம் ஊரில் அக்கரையுள்ள பெரிய மனுசங்க, ஆலிம்சாக்கள் எல்லாம் வயசாகிடுச்சு. ஹயாத் மவுத்து எல்லாருக்கும் ஈக்கிது.அதுக்குள்ள ஒரு நல்ல முடிவெடுத்து வச்சிட்டா,வருங்கால சந்ததிகள் சண்டை-சச்சரவு இல்லாம ஈக்கிம்.
"அட! காதராடா இப்புடி பேசுறான்? மாஷா அல்லாஹ் நல்லா வாய்பக்குவம் வந்துடுச்சுடா! அப்பறம், பஞ்சாயத்து சேர்மன் பதவி ஏத்து 100 நாள் ஆயிடுச்சு. எதாச்சும் மாத்தம் கீத்தம் தெரியிதா?. ஊர்ல, பொம்புலயலுவோ என்னா பேசிக்கிறாஹலாம்?"
"காக்கா சும்மா சொல்லக்கூடாது. குப்பை கூளங்கள் குறைச்சிருக்குது. சுகாதார விசயத்துல இன்ஷா அல்லாஹ் முன்னேத்தம் ஈக்கிம்னு நினைக்கிறேன். பார்ப்பம். இதுக்கு நம்ம மக்களும் ஒத்துழைக்கணும். அவ்வளுவோ பாட்டுக்கு நாங்க இப்படித்தாக் குப்பையக் கொட்டுவோம்னு பொருப்பில்லாமல் ஈந்தா ரொம்ப கஷ்டந்தான்."
"சரியா சொன்னடா! வர்ர மார்ச் மாசம் 31 ஆம் தேதிக்குள்ள வீட்டுவரி,தொழில் வரி மற்றும் உரிமம் (லைசன்ஸ்) கட்டணங்களை பேரூராட்சிக்கு செலுத்தி நம் சேர்மன் தம்பி சொன்ன வாக்குறுதிகள நிறைவேத்துரதுக்கு எல்லோரும் ஒத்துழைக்கனும்.ஒருத்தருக்கொருத்தர் ஒத்துலச்சாத்தான் நம்ம பேரூராட்சிய முன்மாதிரி பேரூராட்சிகளில் ஒன்னா மாத்திடலாம்டா.
சின்னசின்ன பேரூராட்சியெல்லாம் ஜனாதிபதி விருது, மத்திய அரசு விருது எல்லாம் பெறுது.நாமும் அதுக்கான திட்டங்களைப் போட்டு செயல்படுத்தனும். அன்னக்கி புதுமனைத்தெரு வீட்டில் கள்ளன் வந்த விசயம் கேள்விப்பட்டேனே. ஒனக்குத் தெரியுமா?"
"யாங்காக்கா தெரியாது. சொந்தக்கார ஊட்டுல தாயபுள்ளயலுவலுக்கு பசியார வச்சாகன்னு போயிட்டு வந்தேன். அப்ப கேள்விப்பட்டது. ஊட்டைப் பூட்டிட்டு மதுராஸ்ல இருக்காஹலாம். ரெண்டு-மூணு நாளு நோட்டம் பார்த்து மனுச நடமாட்டம் இல்லேன்னு தெரிஞ்சதும்.களவானிப்பயலுவோ சுவர் ஏறிக்குதிச்சு கொல்லைப் பக்கமா எல்லா ஜன்னலையும் கழட்டி உள்ளபோயிட்டானுங்க."
"என்னடா இது! ஜன்னலக் கழட்டி உள்ள போற அளவுக்கா துனிச்சல்? அக்கம் பக்கத்துல யாரும் கவனிக்கலயா?. வெளியூருக்குப் போறவங்க அக்கம் பக்கம் சொல்லிட்டுப் போறதெல்லாம் இல்லையா? இப்பவ்லாம் யாரும் எங்க போறம் வர்ரோம்னெல்லாம் சொல்லிக்கிறதில்லை. எல்லாம் கமுக்கமாக ஈக்கிறோம். கள்ளனும் கமுக்கமா காரியத்தை முடிச்சிருக்கான்."
"சொல்ல மறந்துட்டேன் காக்கா, வீட்டுக்காரர் புத்திசாலித்தனமான வேலைய செஞ்சிருக்கார். பாதுகாப்பு கேமராவ செட் பண்ணியிருந்ததால அதுல எல்லா களவானிப்பயலுவ மூஞ்சியும் பதிவாயிட்டுச்சு. மொத்தம் ஏழு பேராம்! நாலு பேரூ மாட்டிக்கிட்டானுங்க. மத்தவங்களும் கூடிய சீக்கிரம் மாட்டிடுவானுங்க.
"சூப்பர்டா! எல்லார்ட்டையும் இந்த வசதி இல்லேன்னாலும் லட்சக்கணக்குல செலவளிச்சு வீடு கட்டுறோம்.அப்டியே இதையும் செஞ்சிட வேண்டியதுதான். கேமராவுல களவானிங்க மூஞ்சி நல்லா பதிவாகியிருக்காம். நம்ம புள்ளைங்க அதக்கேட்டு வாங்கி இண்டர்நெட்டுல "திருடர்கள் ஜாக்கிரதை"ன்னு போட்டவப் போட்டா மத்த மத்த திருடனுவலும் திருந்துவானுங்க!.
ஆமாம் காக்கா! இவனுவல இப்புடித்தான் நாறடிச்சு மானத்த வாங்கனும். குளிர் காலம்ங்கறதால எட்டு-ஒம்போது மணிக்கு எல்லோரும் படுத்துடுறாங்க. சும்மாவே மார்கழி-தை மாசத்துல பனி பெய்து எல்லோரையும் போட்டு அசத்திடுது. முன்னாடி எல்லாம் கொருக்கா (கூர்க்கா) சுத்திக்கிட்டு வருவான். இப்ப அவனுங்களும் வர்ராங்களான்னு தெரியலே"
"காதரு. நம்ம செக்கடி மோட்டுல ஈக்கிற கூப்பன் கடைல நடந்த விசயம் தெரியுமா?கூப்பன் அரிசில இட்லி நல்லா வரும்னு ரேசனுக்கு அரிசி வாங்கப் போனப்ப கூப்பன் கார்ட மறந்துட்டு வந்துட்டாங்களோ காணாக்கிட்டாங்களோ தெரியலே.ஊட்டுக்கு வந்து பார்த்தப்போ காணோம். திரும்பபோய் கேட்டதுக்கு, தெரியலையே! யாரும் எடுத்திருந்தால் சாமான் வாங்க வந்தா பிடிச்சிடுவோம். அப்புடி புடிச்சா உங்களுக்கு தெரிவிக்கிறோம்னு சொல்லி அனுப்பிட்டாங்க!."
"அப்புறம்! கூப்புட்டாங்களா?"
"எங்க கூப்புட்டாங்க.இந்தா அந்தான்னு ஏதேதோ சொல்லி கடைசில போலிஸ் கம்ப்ளைண்ட் கொடுங்கன்ன்னு சொல்லி, ஒரு மாசத்த ஓட்டிட்டு, அப்புறம், உங்க கூப்பன கேன்சல் பண்ணச்சொல்லி எழுதிக்கொடுத்திருக்கு" என்று சொல்லியிருக்கிறார் அங்கிருந்த ஊழியர்.
"என்னா காக்கா சொல்றிய? யாராச்சும் கூப்பனப்போயி வேண்டாம்னு எழுதிக் கொடுப்பாங்களா?"
"அடே காதரு! கூப்பனுக்குச் சொந்தக்காரவங்க எழுதிக்கொடுக்கலேடா. யாரோ எழுதிக் கொடுத்திருக்காங்க!!! வாணாம்னு யாரும் யாருடைய கூப்பனையும் எப்புடி எழுதிக்கொடுக்க முடியும்னு தெரியலே? இத்துனைக்கிம் கூப்பன்ல போட்டோ, அட்ரஸ் எல்லாம் ஈக்கிது"
"நம்ம ஊருக்கு நடுவுல ஈக்கிற கூப்பன் கடையிலேயே இந்தக் கதின்னா, வேற வேற எடத்துல ஈக்கிறவங்களுக்கெல்லாம் என்னா நிலையோ? காக்கா தெரியாமத்தான் கேட்கிறேன்.புதுசா கூப்பன் கார்டு வாங்குறத்துக்கு என்னன்ன சட்டதிட்டம் ஈக்கிது.அதமாதிரி வாணாம்னு சொல்லுறதுக்கும் நடைமுறைகள் இல்லாமையா ஈக்கிம்? அப்ளிகேசன் போட்டிருப்பாங்க, அதுல கையெழுத்து ஈக்கிம், காரணமும் ஈக்கிம். அதை எல்லாம் அந்த அலுவலர் விசாரிக்காம எப்படி ஏத்துக்கிட்டாங்கன்னு தெரியல. இதையெல்லாம் முறைப்படுத்தனும்.
"காதரு! இப்ப வந்திருக்கிற ஊழியர் எப்புடி மாற்று கூப்பன் வாங்குறதுன்னு வழிகாட்டி உதவியிருக்கிறார். அதுமாதிரி பட்டுக்கோட்டை அலுவல ஊழியைகளும் நல்லா உதவியிருக்காங்க. இருந்தாலும் அனாவசிய அலைச்சல்தானே"
"ஆமாம் மையத்தாங்கரை குழிவெட்ட நம்மூருல ஆளு கிடைக்கலையாம். அதனால வடநாட்டுலேர்ந்து ஆளு கூட்டிட்டு வந்திருக்காங்களே. மொழிப்பிரச்சினை எதுவும் ஈக்காதுல காக்கா?"
"எல்லாம் போகப்போக சரியாயிடும்பா.நம்மூருகாரவங்க மத்த மத்த மொழியக் கத்துக்கிறாஹலோ இல்லையோ, கொஞ்ச நாளிலேயே நம்ம ஊரு செந்தமிழ பேசக் கத்துக்கிட்டு ஒன்னாயிடுவாங்க பாரேன்!
நல்லா கேட்டிய காக்கா! யோசிக்க வேண்டிய விசயம்!உங்களோட மனசு உட்டு பேசுனா, இப்புடி யோசிக்க வச்சிடுறிய. அப்புறம் விருந்துன்ன ஒடன யாஹ்வம் வந்திச்சு. நாளைக்கு குடிபோற ஊட்டுக்கு பகல் சாப்புட போவும்போது மிஸ்டு கால் பண்ணிடுங்க. தக்வா பள்ளில லொஹர் தொழுதுட்டு சைக்கிள்ள ஒன்னா போயிடலாம்.
சரி..சரி அதெல்லாம் மறக்க மாட்டேன். மொபைல்ல ஏற்கனவே அலாரம் செட் பண்ணி வச்சுட்டேன்.
இப்படிக்கு, www.ஊர்சுத்தி.com