அணு உலைகளினால் வரும் பேராபத்தை சென்ற ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் நடந்த சுனாமிக்குப் பிறகு உலகம் கண்டிருக்கிறது. அது மீண்டும் அதைப் பற்றிய விவாதத்தை அரங்கிற்குள் கொண்டு வந்திருக்கிறது. இது நாம் விழித்துக் கொள்ளும் நேரம்.
அணு உலை அமைப்பதினால் சில நன்மைகள் இருக்கின்றன என்றாலும் அது கொண்டு வரும் பேரழிவைக் காண்கிறபோது அது கொண்டு வரும் நன்மையே தேவையில்லை என்று சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு அணு உலையிலிருந்து அளவிட முடியாத ஆற்றல் வெளிவருவதனால் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்யவும், அதனால் நவீன உலகில் எல்லாரும் மின்சக்தியைப் பெற்று மிகவும் சுகமான வாழ்க்கை வாழ முடியும். அது மட்டுமல்ல மிகவும் குறைவான கார்பன்டை ஆச்சைடை வெளியிடுவதால், உலகம் வெப்பமடைவது தாமதப்படுத்தப்படும் போன்ற சில நன்மைகளைச் சுட்டிக் காட்டுகின்றனர்.
பேராபத்துகள்!
ஆனால் எல்லாவற்றைக் காட்டிலும் அணு உலை அமைப்பதனால் வரும் பேராபத்துகள் வருவது தவிர்க்க இயலாது. உடனே சிலர் சொல்லுவது - எதில் ஆபத்து இல்லை - பேருந்தில் விபத்து நடக்கிறது, விமானத்தில் விபத்து நடக்கிறது அதற்காக அதில் செல்லாமல் இருக்கிறோமா? நண்பர்களே, இது போன்ற விபத்துகள் அதில் பயணம் செய்பவர்களோடு போய்விடும். ஆனால் அணு உலை விபத்து என்பது அதையும் தாண்டி - தாண்டி.. உதாரணத்திற்கு, ரஷ்யா, செர்னோபிலில் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற அணு உலை விபத்தின் கோரம் இன்றும் இருக்கிறது - அதனால் கதிர்வீச்சுகள் நிறைந்த நீர், காற்று இன்றும் பல உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.
பாதுகாப்பானதா?
சிலர் சொல்லுகிறார்கள் விஞ்ஞானிகள் சொல்லிவிட்டார்கள் -அல்லது பிரதமர் சொல்லிவிட்டார், அமைச்சர்கள் சொல்லிவிட்டார்கள் - அணு உலை பாதுகாப்பானது என்று - அதுதான் கொட்டை எழுத்துகளில் மிக முக்கியமான செய்தியாக வருகிறது. பிரதமர் அது மட்டுமா சொன்னார், ஊழல் ஒன்றும் நடக்கவில்லை என்றும்தான் சொன்னார். அமைச்சர்கள் நாங்கள் எல்லாம் நாட்டுக்காக எங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்றும்தான் சொல்லுகிறார்கள். அதெல்லாம் உண்மையாகி விடுமா?
அணு உலை கட்டமைப்பு என்பது மிகவும் சிரத்தையோடு, பாதுகாப்பு வளையங்களை அமைப்பதில் சரியான முறையைப் பின்பற்றி அமைக்க வேண்டும். அப்படிப் பின்பற்றி அமைக்கப்பட்ட அணு உலைகள் கூட விபத்து ஏற்படும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம். அது செர்னோபிலாக இருக்கட்டும் அல்லது புகுசிமா, தாய்ச்சி ஆக இருக்கட்டும். எந்த அணு உலையும் நூறு சதவீதம் பாதுகாப்பானது என்று யாரும் சான்றிதழ் கொடுக்க இயலாது. ஜப்பான்காரனாலேயே அந்த அளவுக்கு பாதுகாப்பான ஒன்றை அமைக்க முடியவில்லை. அதென்ன ஜப்பான்காரனாலேயே - அதனால்தானே நாம் அவர்களது பொருட்களையே போட்டி போட்டு வாங்குகிறோம்.
எனவே அதில் இம்மியளவு குறைந்தாலும் - அணு உலை விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். கல்மாடி கட்டிய ஒரு பாலம் விளையாட்டு தொடங்குவதற்கு முன்னரே இடிந்து விழுந்தது நமக்குத் தெரியும். அது மட்டுமல்ல மிகப் பெரிய திட்டங்களை செய்யும் யாராக இருந்தாலும் சில பெர்சென்ட்டுகள் கமிசன் தொடங்கி அப்புறம், பயன்படுத்தும் கம்பியில் சில மில்லி மீட்டர் குறைத்துப் போட்டால் சில கோடிகள் நமக்கு மீளும் என்று திட்டமிடுபவர்களும், இரண்டுக்கு ஒன்று என்று கலவை இருக்க வேண்டுமென்றால் அதை மூணுக்கு ஒண்ணாகப் போட்டால், இன்னும் சில கோடிகள் மிஞ்சும் என்றும் கணக்குப் போடும் நமது ஆட்களை நம்பி நாம் இந்த அணு உலைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினால் நம்மை விட மிகச் சிறந்த அறிவாளிகள் யாரும் இருக்க முடியாது.
கழிவுகளாலும் ஆபத்தா?
அதுமட்டுமல்ல - பேராபத்து அணுஉலை அமைப்பதில் மட்டுமல்ல - அணு சக்தி உருவாக்கத்தில் வெளிவரும் கழிவுகளைப் பாதுகாப்பது என்பதுதான் மிகப் பெரிய விடயாமாக இருக்கிறது. அணு உலை வெடிப்பதோ அல்லது அது வெளிவிடும் கதிர் வீச்சுகளால் ஆபத்து என்பதைப் போல இந்தக் கழிவுகளாலும் ஆபத்து என்பது உண்மை. இந்தக் கழிவுகளை ஏறக்குறைய 10,000 ஆண்டுகள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமாம். இது நம்ம ஊரில் நடக்கிற விசயமா. கழிவுகளை எங்கே கொட்டிப் பாதுகாக்கப் போகிறார்கள்?
தமிழின அழிப்பு!
அதுமட்டுமல்லாமல் இந்த அணு மின்நிலயம் என்பது கூடங்குளத்திற்கான திட்டமும் அல்ல - ஏற்கனவே சில மாநிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்பு தமிழ்நாட்டில் குடிபுகுந்த திட்டம். இங்கே உள்ளவர்கள் உயிர் மட்டும் கிள்ளுக்கீரையா என்ன? ஏற்கனவே கல்பாக்கத்தில் கடந்த சுனாமியின்போது வெளிவராத செய்திகள் இன்னும் உண்டு. ஆக மொத்தம் வட தமிழகம் இப்போது தென் தமிழகம் என்று ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் அதனால் தமிழினத்தையும் அழிப்பதற்கான சதி என்றுதான் இதையும் அணுக வேண்டியிருக்கிறது. அணுகுண்டுகள் மூலமாக ஜப்பானில் ஏறக்குறைய இரண்டு லட்சத்திற்கு மேல் மக்கள் மாண்டு போனார்கள். அதைவிட அதிக இழப்பை அணு உலைகள் கொண்டு வரக்கூடும் என்பதை மனதில் வைத்துக் கொண்டால், இதன் பேராபத்தும் பேரழிவும் நம் மண்டைக்கு எட்டும். அதை விடுத்து அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பிக் கெட்டு அழிய முடியாது.
அப்புறம் எப்படித்தான் நாம் வளர்வது?
இதைப் பற்றிய அழிவைச் சொல்லுவதனால் நாம் வளர்ச்சி அடைவதைத் தடுக்கிறோம் என்றோ அல்லது மின்சக்தி உற்பத்திக்குத் தடையாக? இருக்கிறோம் என்றோ அர்த்தம் அல்ல. வருடம் முழுவதும் சூரியன் ஆட்சி செய்கிற இந்த மண்ணில் அதிலிருந்து மின் உற்பத்தி தயாரிப்பது என்பதை மிகவும் சிரத்தையோடு செய்து விட்டாலே போதும் என்பதே நமது வாதம். இயங்குகின்ற அணு உலைகளை இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் மூடி விடுவோம் என்று ஜெர்மனி முடிவு செய்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி இத்தாலியில் நடைபெற்ற ஒரு பொது வாக்கெடுப்பில் அணு உலைகள் அமைக்கக் கூடாது என்று தொண்ணூறு சதவிகித மக்கள் வாக்களித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார்கள். சூரிய ஒளி மிகவும் குறைவான நாட்களே குறைந்த சில மணி நேரங்களே தனது வீச்சைக் காட்டக் கூடிய நாடுகளே மாற்று வழிக்கான முயற்சியில் இறங்கியிருக்கும்போது நாம் அதற்கான முயற்சியில் இறங்குவதே சரி.
தேவையற்ற இழப்பை அழிவைச் சந்திக்கும் முன்பு நாம் விழித்துக் கொள்ளுவதே இப்போதையத் தேவை. இப்போது நடைபெறும் போராட்டத்தில் எல்லாரும் இணைவதும், அதனால் மாற்று முயற்சிகளுக்காக அனைவரும் குரலெழுப்புவதும் அவசியமாகிறது. நாமும் நமது சந்ததியினரும் அணுக்கதிர் வீச்சுகளால் பாதிக்கப்படாத காற்றைச் சுவாசிக்கவும், நீரைப் பருகவும் உரிமையுண்டு. அந்த உரிமையைத் தடுப்பதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. மக்களுக்காக மக்களால் என்பது உண்மையானால் - மக்கள் பிரதிநிதிகள் கட்டாயம் செவிசாய்த்துத்தான் ஆக வேண்டும்.