"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
16 மார்ச் 2012

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு மட்டுமே.! தீர்வைத் தருமா?

0 comments

மத்திய அரசுப் பணியிலும் கல்வியிலும் பிற்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டில் நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள், கிருத்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள் ஆகியோருக்கு உள் ஒதுக்கீடாக 4.5 % வழங்கப்போவதாக மத்தியில் ஆளும் காங்.தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

வடக்கே 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற இருப்பதை வைத்து காங். கட்சி தனது நீண்ட நெடுநாளைய சித்து விளையாட்டை மீண்டும் விளையாடி வருகிறது. குறிப்பாக உ.பி.யில் வாழும் 19% முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்துதான் இந்த அறிவிப்பை செய்துள்ளனர். விடுதலையடைந்த 63 ஆண்டுகளில் அதிகப்படியாக ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தவர்கள் காங்.கட்சியினர்தான். இவ்வளவு காலம் ஆட்சியில் இருந்தும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து ஆதரவு தந்துவந்த முஸ்லிம் சமூகத்தை இன்னமும் எத்தனை காலத்திற்குத்தான் இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை?

முஸ்லிம் சமுதாயம் எந்தவிதத்திலும் ஏற்றம் பெற்றுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர் காங். கட்சியினர்? நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்களும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா அவர்களும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக இந்த அரசிற்கு செய்த பரிந்துரைகளில் பகுதி அளவிற்கு நிறைவேற்றினால் கூட போதும் முஸ்லிம் சமுதாயத்தின் சிக்கல்கள் சிலவற்றிற்கு நிச்சயம் தீர்வு கிடைத்திருக்கும்.

முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், அதிகாரம் ஆகிய துறைகளில் நிலவும் பின்னடைவுகளை தீர்ப்பதற்கான முஸ்லிம்களின் கோரிக்கை ஒருவிதமாகவும் அரசின் அறிவிப்புகள் வேறு விதமாகவும் உள்ளது. இல்லாத ஊருக்கு பாதை காட்டுகின்ற வேலையை அரசு செய்கிறது. மத்தியில் காங். கட்சிக்கு மாற்று இல்லாததால் வேறு வழியில்லாமல் சிறுபான்மைச் சமூகம் தேர்தலில் தொடர்ந்து ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இடஒதுக்கீடு போன்ற ஒருசில நலத்திட்டங்களால் மட்டுமே முஸ்லிம் சமுதாயம் முன்னேறிவிடுமா என்பதை மத்தியில் இட ஒதுக்கீடு வேண்டும் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஓயாமல் ஒலித்து வரும் முஸ்லிம் அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தாத ஜமாஅத் அமைப்புகளோ சமூக இயக்கங்களோ கிடையாது என்ற அளவிற்கு வலியுறுத்தி, வற்புறுத்தி வாங்கப்பெற்ற 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் இன்றைய நிலை என்ன? என்பதை அலசி ஆராய்ந்து பார்க்கும் செயல்திட்டம் எந்த அமைப்பிடமும் இல்லை!

தமிழகத்தில் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் ஒட்டு மொத்த வெளிப்பாடு முஸ்லிம்களுக்கு தீமையே தவிர நன்மை கிடையாது. ஆண்டிற்கு 30-40 இடங்கள் மருத்துவப் படிப்பில் அதிகமாக இடம் கிடைக்கிறது. அது மட்டுமே 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டால் விளைந்த ஒற்றைப் பயன். ஆனால், மருத்துவ மேற்படிப்பில் இந்த இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது. பொறியியலில் இடஒதுக்கீடே தேவையில்லை! காரணம் அரசு ஒதுக்கீட்டு இடங்களே இந்த ஆண்டு 45 ஆயிரம் இடங்கள் சீண்டுவதற்கு ஆள் இல்லாமல் கிடக்கின்றன. இது உயர் கல்வியில் உள்ள நிலை.

வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நேர்மைஅனைத்து நாளிதழ்களிலும் அன்றாடம் நாறுகிறது. தமிழகத்திலேயே ஊழலுக்கு பெயர் பெற்ற நமது வக்ஃபு வாரியத்தையெல்லாம் விஞ்சிவிடும் போல் இருக்கிறது. பணம் வாங்கிக் கொண்டு தகுதியற்றவர்களையும் பதிவு மூப்புத் தகுதியில் வராதவர்களையும் பணியமர்த்தி ஊழலின் ஊற்றுக் கண்ணாக இன்றைய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூனி குறுகிக் கிடக்கிறது. உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும், வழக்குகளால் சிக்கித் தவிக்கிறது தமிழகத் தேர்வாணையம்.

இந்த ஊழல் சுனாமியில் முஸ்லிம்களின் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சிக்கி சின்னாபின்னமாகி விட்டது என்றே சொல்லலாம். எந்தெந்த துறைக்கு எத்துனை இடங்கள் காலியாக உள்ளன. எவற்றுக்கெல்லாம் தேர்வுகள் நடக்கின்றன. எந்தெந்த சமூகத்திற்கு எத்துனை இடங்கள் அதில் இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? இதுபோன்ற பெருவாரியான கேள்விகளுக்கு விடைகாண முடியாத நிலையில்தான் தேர்வாணையம் இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, சில முக்கிய பொறுப்புகளுக்கு தகுதியான முஸ்லிம் பட்டதாரிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கால்நடை மருத்துவர்கள் 850 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஏறக்குறைய 30 இடங்கள் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால் 4 முஸ்லிம்கள் மட்டுமே கால்நடை மருத்துவம் படித்தவர்களாக இருந்துள்ளனர்.
கால்நடை மருத்துவம் என்பது மருத்துவமும் தொழிலும் இணைந்த பாரம்பர்யமான படிப்பு அரசுப் பணிக்குத் தொடக்கமே ஏறக்குறைய 20-30 ஆயிரம் ரூபாய் ஊதியமாகக் கிடைக்கும் பணி. ஆனால் இந்தப் படிப்பு குறித்து முஸ்லிம்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் தேவைப்படும் அளவிற்கு பட்டதாரிகள் இல்லாததால் பற்றாக்குறை நிலவுகிறது. ஆகையினால் இட ஒதுக்கீடு மட்டுமே முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற சிக்கலை தீர்ப்பதற்கான சரியான தீர்வு அல்ல.

மத்தியில் இட ஒதுக்கீடு கேட்டு அல்லது தமிழகத்தில் உள்ள 3.5 விழுக்காட்டை அதிகப்படுத்திட வேண்டி நடத்தப்படுகின்ற மாநாடுகள் போராட்டங்களுக்கு பதிலாக இஸ்லாமிய அமைப்புகள் தங்களுக்கு கொடிபிடிக்கும் தொண்டர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கும் பள்ளிக் கூடங்களை உருவாக்கினாலே போதும். முஸ்லிம் சமூகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும். மேலும் தரமான கல்வியை இஸ்லாமிய அடிப்படையில் கொடுப்பது என்ற முடிவை அமைப்புகளின் தலைவர்கள் எடுத்தாலே போதும். முஸ்லிம் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கேட்டு அம்மாவிடமும் அய்யாவிடமும் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. முஸ்லிம் சமூகம் அடுத்து வரும் காலங்களில் அனைவரையும் மிஞ்சும் தகுதியோடு பொதுப் பட்டியல் முழுக்க ஆக்கிரமிப்பு செய்யும் சமூகமாக மாறிவிடும்.

இவ்வளவு குளறுபடிக்குப் பிறகும் இட ஒதுக்கீடு கோரிக்கை என்பது ஒரு வகையில் தங்களது அரசியல் இயலாமையை மறைப்பதற்குதான் அமைப்புகளால் முன்வைக்கப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது?

(நன்றி: சமூகநீதி)
- CMN சலீம்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி