"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
25 ஜூலை 2011

அடைகாக்கும் ஆசைகள்

0 comments
அடுத்தமுறை நான்
அதிரைக்குச் செல்லுகயில்
அனுபவிக்கச் சில
அவசியம் வாய்க்க வேண்டும்

புத்தம்புது மழையால்
பூமி நனைந்திருக்க வேண்டும்
பின்னிரவில் விட்ட மழை
மண்ணில் மிச்சம் வேண்டும்

உம்மா மட்டும் விழித்திருக்க
ஊரே உறக்கத்தில் வேண்டும்
உற்றார் உறவினர் வருமுன்
உம்மா மடி வாய்க்க வேண்டும்

பொய்த்துப்போன கம்பன் கனா
மெய்ப்பட்டு வர வேண்டும்
மெய்ப்படும் நாள்வரை
பொய்யாகவாவ தொரு ரயில் வேண்டும்

கடற்கரைக் கருங்கற்சாலையில்
காலார நடக்க வேண்டும்
கம்சு சட்டையும் கைலியும்
கடற்காற்றில் கலைய வேண்டும்

புதுப்புது மினுக்கமில்லா
புர்காவின் கருப்பு வேண்டும்
வாரத்தில் ஒரு நாளாவது
வெண்ணிறத் துப்பட்டி வேண்டும்

கைப்பந்து கால்பந்தென
மைதானங்கள் செழிக்க வேண்டும்
மட்டைப் பந்துக்கும்
மையத்தில் இடம் வேண்டும்

விளையாடும் இடங்களிலும்
நோன்புக் கஞ்சி வரிசையிலும்
முகச்சாயலையோ சேட்டையையோ வைத்து
இன்னார் பிள்ளையென்று அடையாளம் காண வேண்டும்

பள்ளிகளில் ஐம்பொழுதும்
பல வரிசைகள் அமைய வேண்டும்
நேராகவும் நெருக்கமாகவும்
நின்று ஆமீன் சொல்ல வேண்டும்

ஜும்-ஆ தொழுதபின்பு
சொந்தபந்தம் தழுவ வேண்டும்
பலகாலம் பரிச்சயம் மறந்த
பலரையும் பார்க்க வேண்டும்

இயக்க குணம் புறக்கனித்து
இஸ்லாமியர் இணைய வேண்டும்
இறையில்லங்களை நிர்வகிக்கும்
இதயங்கள் இணைய வேண்டும்

தவ்ஹீதின் விரலசைவை
ஜமாத் பள்ளி சகிக்க வேண்டும்
ஜமாத்தாரின் தொப்பிகளை
தவ்ஹீது ரசிக்க வேண்டும்

மரண அறிவிப் பென்று
காதுகளில் விழ நேர்ந்தால்
ஜனாஸா தொழுகையொன்று
அதிரையில் தொழ வேண்டும்

சாயங்கால வெயிலில் சற்று
செந்நிறம் கூட வேண்டும்
சமகால நண்பர்களோடு
சிரித்துக்கொண்டு நடக்க வேண்டும்

கல்யாண விழாவொன்று
கட்டாயம் கிடைக்க வேண்டும்
கச்சல் கட்டாத இளசுகள்
கலரி பரத்த வேண்டும்

பெண்களின் விருந்தை
முன்னிருந்து நடத்த வேண்டும்
பேசி வைத்தப் பெண் விழியை
தேடியலைந்த நெனப்பு வேண்டும்

ஓதிக் கொடுக்கும் சப்தம்
காது வழி கேட்க வேண்டும்
உஸ்தாது கைபிடித்து
சலாம் ஒன்று சொல்ல வேண்டும்

நவீன வசதிகளில்
நாளுக்கு நாள் மாறினாலும்
நிச்சயம் நிலைக்க வேண்டும்
நம்மூரின் நற் பாரம்பரியம்!

நன்றி: அதிரை நிருபர்
பதிப்பு :- சபீர்
Sabeer Abu-Sharuhk

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி