"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
03 செப்டம்பர் 2011

இஸ்லாத்தில் ஆடைகள்...?

0 comments

இஸ்லாத்தில் ஆடை அணிவதற்கும் பல வழிமுறைகள் கூறப்பட்டிருக்கின்றன, அவைகளை நாமும் பேணி நடப்பதினால் நாம் அணியும் ஆடையும் கூலிபெற்றுத்தரும் நன்மையாக கருதப்படும், அவைகள் பின்வருமாறு:

1. அன்னிய மதத்தவர்கள் தங்களின் மதத்தை அடையாளம் காட்டுவதற்காக அணியும் ஆடைகளை அணியக்கூடாது.

யார் இன்னொரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அவரைச்சேர்ந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம் :அபூதாவூத்: 4031)

2. ஆண், பெண் அணியும் ஆடையைப் போன்றோ, பெண் ஆண், அணியும் ஆடையைப் போன்றோ அணியக்கூடாது.

பெண் அணியும் ஆடையைப்போன்று அணியக்கூடிய ஆணையும், ஆண் அணியும் ஆடையைப்போன்று அணியக்கூடிய பெண்ணையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். (ஆதாரம் : அபூதாவூத்.)

3. பெருமைக்காக ஆடை அணியக்கூடாது

யார் (இவ்வுலகில்) பெருமைக்காக ஆடை அணிகின்றாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையில் இழிவான ஆடையை அணிவிப்பான். பின்பு அதில் நெருப்பு பிடித்துவிடும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். (ஆதாரம் : அபூதாவூத்)

4. ஆண்கள் கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணியக்கூடாது.

கரண்டைக்கு கீழே இறங்கும் ஆடையின் பகுதி நரகத்தில் வேதனை செய்யப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)

இன்னும் ஒரு அறிவிப்பில் :-நாளை மறுமையில் அல்லாஹ் மூன்று பேரோடு பேசவும்மாட்டான், இன்னும் அவர்களை பார்க்கவும் மாட்டான். அவர்களை (பாவத்திலிருந்து) தூய்மை படுத்தவும்மாட்டான். அவர்களுக்கு பெரும் வேதனையுமுண்டு என்று மூன்று தடவை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அப்போது) அபூதர் (ரலி) அவர்கள் (அப்படி) நஷ்டவாளியும் கைசேதமுமுள்ளவர்கள் யார் என வினவினார்கள்? கரண்டைக்கு கீழ் ஆடை அணிபவனும், கொடுத்ததை சொல்லிக்காட்டுபவனும், பொய்ச்சத்தியம் பண்ணி தன் பொருளை விற்பவனும் என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

5. உருவமுள்ள ஆடையை அணியக்கூடாது. இதில் ஆண்களும் பெண்களும் சமமே.

ஆயிஷா (ரலி) அவர்கள் உருவமுள்ள தலையணையை வாங்கியிருந்தார்கள், நபியவர்கள் வீட்டுக்குள் வந்தபோது அதைக்கண்டு வீட்டுக்குள் நுழையாமல் கதவடியிலேயே நின்று விட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் நபியவர்களின் முகத்திலே வெறுப்பைத் தெரிந்து கொண்டபின் நான் அல்லாஹ்விடத்திலும் அவனின் தூதரிடத்திலும் பாவமன்னிப்புத்தேடுகிறேன். நான் என்ன குற்றம் செய்தேன் என்று கேட்டேன். இந்த உருவத்தை தீட்டியவர்கள் நாளை மறுமையிலே வேதனை செய்யப்படுவார்கள், இன்னும் நீங்கள் படைத்ததற்கு உயிரூட்டுங்கள் என்றும் அவர்களுக்கு சொல்லப்படும், என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள் . (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

6. மேனி தெரியுமளவுக்கு மெல்லிய, அல்லது சிறிய உடையை அணியக்கூடாது.

7. வெள்ளை ஆடை அணிவது மிகவும் நல்லது.

வெள்ளை ஆடையை அணியுங்கள் அது மிகவும் தூய்மையும் நல்லதுமாயிருக்கும். உங்களின் மைய்யித்தை அதிலேயே கஃபனுமிடுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். . (ஆதாரம் : அபூதாவூத், நஸாயி , திர்மிதி)

8. பெண்கள் தங்களின் மேலாடையை எப்படி வைத்துக்கொள்வது என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். ஒரு சாண் இறக்கி உடுக்கவேண்டுமென்று நபியவர்கள் விடையளித்தார்கள். அப்போது கால்பாதம் தெரிகின்றதே! என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கேட்க ஒரு முழமளவிற்கு நீட்டி உடுத்துக்கொள்ளட்டும். அதைவிடவும் அதிகப்படுத்தக்கூடாது என்றார்கள் நபியவர்கள். (ஆதாரம் : திர்மிதி)

9. இறுக்கமான, மற்றவர்களின் உள்ளத்தில் தவறான சிந்தனைகளை உருவாக்கும், இன்னும் உறுப்புக்களின் அமைப்பை வெளிப்படுத்தக்கூடியது போன்ற ஆடைகளை அணியக்கூடாது விஷேஷமாக பெண்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

10. செருப்பு, இன்னும் ஆடைகளை அணியும் போது வலது பக்கத்திலிருந்து ஆரம்பிப்பது சுன்னத்தாகும்.

11. நஜீஸான (அசுத்தமான) தோலினால் செய்யப்பட்ட செருப்பை அணியக்கூடாது.


ஆக்கம் : ஹனி நூரா

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி