பரிசுப் பொருட்களை அழகாக பேக்கிங் செய்யணுமா? கடித உறைகளை ஒட்டணுமா? படங்களை சுவரில் ஒட்டணுமா? இல்லை, குழந்தைகளின் கிழிந்துபோன நோட்டுப் புத்தகத்தை ஒட்டணுமா? எல்லாவற்றுக்கும் நாம் தேடும் ஒரே ஒரு பொருள் செல்லோ டேப்! அதுமட்டுமல்ல, டெக்ஸ்டைல்ஸ், தோல் பொருட்கள், ஹார்டுவேர் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்த செல்லோ டேப் மிக முக்கியமான பொருளாகப் பயன்படுகிறது. அவ்வளவு தேவை மிகுந்த பொருளான செல்லோ டேப் தயாரிப்பது குறித்துதான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகிறோம்...
சந்தை வாய்ப்பு!
ஸ்டேஷனரி கடைகள், ஃபேன்ஸி ஸ்டோர்கள் என சில்லறை கடைகளிலும் பெரிய பெரிய தொழிற்சாலைகளிலும் இந்த செல்லோ டேப்புகளை விற்பனை செய்ய முடியும். செல்லோ டேப் பிஸினஸ் ஒவ்வொரு ஆண்டும் 15% வளர்ச்சி காண்கிறது. தொழிற்துறை வளர்ச்சி காரணமாக இத்தொழிலுக்கு உருவாகி இருக்கும் சந்தை வாய்ப்பும் அதிகம். எனவே, புதிதாக இத்தொழிலில் இறங்குகிறவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.
முதலீடு!
குறைந்தபட்சம் 8 லட்சம் ரூபாய் முதல், கோடிக் கணக்கில் இதில் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 2.70 லட்சம் மீட்டர் செல்லோ டேப் தயாரிக்க சுமார் 18 லட்சம் முதலீடு தேவை.
மூலப் பொருள்!
ஃபோர்ம் டேப் கிரேடு ஃபிலிம், அடிசிவ். இந்த இரண்டும்தான் முக்கிய மூலப் பொருட்கள். போட்டோ ஃபிலிம் போல இருக்கிறது இந்த ஃபோர்ம் டேப் கிரேடு ஃபிலிம். அப்படியே ரோல் ரோலாகக் கிடைக்கிறது. இந்த மூலப் பொருள் போபால் மற்றும் சென்னையிலும் கிடைக்கிறது. மேலும், அடிசிவ் என்பது பசை. முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் இதை அப்படியே விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.
கட்டடம்!
இயந்திரங்களைப் பொறுத்து வதற்கு, தயார் செய்த செல்லோ டேப்களை ஸ்டோர் செய்து வைப்பதற்கு என 1,500 முதல் 4,000 சதுரடி வரை இடம் தேவைப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ எடுத்து இந்த பிஸினஸைத் தொடங்கலாம்.
இயந்திரம்!
கோட்டிங் இயந்திரம், ஸ்லைட்டிங் (Slitting) மற்றும் ஸ்லைசிங் (sliving) இயந்திரம். இந்த மூன்றும்தான் முக்கிய இயந்திரங்கள். இவை இருந்தாலே செல்லோ டேப் தயாரிப்பு யூனிட்டை தொடங்கிவிடலாம். மேலும், கூடுதலாக கலர் பிரின்டிங் இயந்திரம் செல்லோ டேப்பில் எழுத்துக்கள் அச்சிட பயன்படுகிறது. கோட்டிங், ஸ்லைட்டிங் மற்றும் ஸ்லைசிங் இயந்திரம் இவை மூன்றும் எட்டு லட்ச ரூபாய்க்குள் வாங்கிவிட முடியும். அதற்கு அதிகமான விலையிலும் இயந்திரங்கள் கிடைக்கின்றன. இயந்திரங்கள் அனைத்தும் சென்னை மற்றும் புதுச்சேரியில் கிடைக்கிறது.
தயாரிப்பு முறை!
மூலப் பொருட்களான அடிசிவ் எனப்படும் பசையை டேப் கிரேடு ஃபிலிம் ரோலில் கோட்டிங் இயந்திரத்தின் மூலம் கோட்டிங் செய்ய வேண்டும். இந்த பசை ஈரப்பதத்துடன் இருப்பதால் அதனை பாய்லரில் 140 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் சூடுபடுத்தினால், செல்லோ டேப்பாக வந்துவிடுகிறது. காட்டன், நைலான், பிளாஸ்டிக் என பல வகையிலும் இந்த செல்லோ டேப்பைத் தயாரிக்கலாம். செல்லோ டேப் தயாரான பிறகு இதனை ஸ்லைசிங் இயந்திரத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுகளில் 5, 12, 15 மில்லி மீட்டர் என்கிற அளவுகளில் 'கட்’ செய்து கொடுத்துவிடலாம்.
மேலும், செல்லோ டேப்பில் ஏதேனும் வாசகம் பிரின்ட் செய்ய வேண்டும் எனில் கலர் பிரின்டிங் இயந்திரத்தின் மூலம் பிரின்ட் செய்து கொள்ள முடியும். 12,000 மீட்டர் டேப் கிரேடு ஃபிலிம்மில் 20,000 மீட்டர் செல்லோ டேப் தயாரிக்கலாம்.
வேலையாட்கள்!
திறமையான வேலை யாட்கள்-3, சாதாரண வேலையாட்கள்-5, மேனேஜர்-1, சூப்பர்வைஸர்-1, விற்பனை யாளர்- 2, மற்றவர்கள்-2 என மொத்தம் 14 நபர்கள் தேவைப்படுவார்கள்.
பிளஸ்!
பேக்கிங் செய்வது அனைத்து விதமான தொழில் களுக்கும் இன்றியமையாத விஷயம். எனவே, இதற்கான தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். தவிர, அதிக அளவிலான தயாரிப்பாளர்கள் கிடையாது என்பது கூடுதல் பலன்.
மைனஸ்!
மூலப் பொருட்களின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். தவிர, வாங்கும்போது ஒரு விலை, வாங்கிய பிறகு வேறொரு விலை என அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. இதற்கு தகுந்தாற்போல் விலையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
பலருக்கும் தெரியவராத தொழில் இது. போட்டிகள் அதிகம் இல்லாத தொழில் என்பது கூடுதல் சிறப்பு. ஆரம்பத்திலேயே
இத்தொழிலில் இறங்கினால், நிச்சயம் ஜெயிக்கலாம்