"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
09 செப்டம்பர் 2011

பத்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்களை விடுவிக்க வேண்டும் MMK ...

0 comments
சிறையில் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்களை, அண்ணா பிறந்தநாளையொட்டி விடுதலை செய்ய வேண்டும்,” என்று, சட்டசபையில் ஜவாஹிருல்லா வலியுறுத்தினார்.

சட்டசபையில், நீதி நிர்வாகம் மற்றும் சட்டத்துறை விவாதத்தில் அவர் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்தநாளையொட்டி, நீண்ட கால கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். முந்தைய தி.மு.க., அரசு, கைதிகளை விடுவிப்பதில் பாரபட்சம் காட்டியது. மதுரையில், லீலாவதி கொலை வழக்கில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காகவே, பத்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை, ஏழு ஆண்டுகளாகக் குறைத்தனர். சிறுபான்மை சமுதாயத்தின் பாதுகாவலன் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி, சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த கைதிகளை விடுவிக்கவில்லை. திருச்சி சிறையில், ஜாகிர் உசேன், அபுதகீர் என்ற கைதிகள், கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வருகின்றனர்.
ஜாதி, மதம் பார்க்காமல், பொதுவாக பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்தவர்களை, விடுதலை செய்ய வேண்டும். விரைவில் அண்ணா பிறந்த நாள் வர உள்ளது. அப்போது, பத்து ஆண்டுகள் சிறை தண்டனை முடித்தவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமமூர்த்தி-மார்க்சிஸ்ட்: வழக்கறிஞர் தொழிலிலுக்கு, இன்று அனைத்து தரப்பைச் சேர்ந்தவர்களும் வருகின்றனர். வறிய நிலையில் இருக்கும் இளைய வழக்கறிஞர்கள், தொழிலில் நிலைக்கவும், நீடிக்கவும் முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, வழக்கறிஞர் தொழில் பதிவு செய்ததில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, மாதம் 3,000 ரூபாய் தமிழக அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். வழக்கறிஞர்கள், குடும்ப நல நிதியை இரண்டு லட்ச ரூபாயில் இருந்து ஐந்து லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று, தொடர்ந்து கேட்டு வருகின்றனர். முந்தைய ஆட்சியில், தேர்தல் நேரத்தில் வழக்கறிஞர்களின் ஓட்டுகளை இழந்துவிடக் கூடாது என்பதற்காக, ஐந்து லட்ச ரூபாய் தருவதாகக் கூறி, வெறும் அரசாணையை மட்டும் கருணாநிதி வெளியிட்டார். ஆனால், நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. வழக்கறிஞர்களின் அந்த கோரிக்கையை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். நீதிபதிகளே, நீதிபதிகளை நியமிக்கும் போக்கு, தற்போது இருந்து வருகிறது. இதில் வெளிப்படைத் தன்மையும், அடிப்படைத் தன்மையும் இல்லை. இதனால், நீதிபதிகள் தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் என்று, பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நீதிபதிகள் தேர்வு முறையில், பார்லிமென்ட் மற்றும் சட்டசபையின் பங்கு இருக்கும் வகையில், தேசிய நீதித்துறை ஆணையத்தை உருவாக்க, மத்திய அரசை முதல்வர் வலியுறுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட் கிளையை, சென்னையில் அமைக்கவும் முதல்வர் முயற்சிக்க வேண்டும். முந்தைய ஆட்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் பழிவாங்கப்பட்டனர். 250 பேர் பொய் வழக்கு போட்டதால், அவர்கள் பாதிக்கப்பட்டனர்.

அமைச்சர் விஸ்வநாதன்: அவர்கள் மீதான நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது.

தண்டனை கைதிகளுக்கு “பேன்ட்’ வழங்க கோரிக்கை : ஜவாஹிருல்லா பேசும்போது,”பள்ளி மாணவர்களுக்கு, “ஆப் பேன்ட்’டுக்கு பதில், “புல் பேன்ட்’ தரப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இதேபோல், தண்டனை கைதிகளுக்கும், “புல் பேன்ட்’ தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

தகவல் : முத்துப்பேட்டை org

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி