கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் மெயின்ரோட்டில் மனிதநேய மக்கள் கட்சியின் அலுவலகம் உள்ளது.
உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் அலுவலகமாகவும் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் சோழபுரம் பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தை முடித்துவிட்டு தேர்தல் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் நள்ளிரவில் மர்ம கும்பல் மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்தது. இதில் அலுவலகம் முன்புள்ள கீற்று கொட்டகை தீ பிடித்தது. இதை கண்ட கிராம மக்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர்.
மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதன்பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் தேர்தல் அலுவலகத்தில் இருந்த இலவச ஆம்புலன்ஸ் சேவைக்காக வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகள் சேதமடையவில்லை. இந்த தீ விபத்து குறித்து மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் முகமது பாரூக், திருப்பனந்தாள் போலீசில் புகார் செய்தார்.
தேர்தல் முன்விரோதம் காரணமாக மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.