கரூரில், இரண்டரை நிமிடத்தில், 200 நாடுகளின் தேசியக்கொடி பெயர் மற்றும் ஒன்றரை நிமிடத்தில், 99 வகையான பூக்களின் பெயர்களைச் சொல்லி, நான்கு வயது பள்ளிச் சிறுமி, "இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்'டில் இடம்பெற்று சாதனை புரிந்தார்.
கரூரைச் சேர்ந்த சக்திவேல்-செல்வி தம்பதியரின் மகள் இனியா,4. இவர், கரூர் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில், எல்.கே.ஜி., படித்து வருகிறார். சிறுமி இனியாவுக்கு அதிகளவில் ஞாபக சக்தி இருந்ததை, அவரது பெற்றோர் அறிந்தனர்.இதையடுத்து, முதல் கட்டமாக தனித்திறனை வெளிப்படுத்த, சிறுமி இனியாவுக்கு, பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகள் மற்றும் பூக்களின் பெயர்களை கற்றுக்கொடுத்தனர். சில நாட்களில் தேசியக்கொடிகள் மற்றும் பூக்களின் பெயர்களை, சிறுமி இனியா தானாகவே சொல்ல ஆரம்பித்தார்.
இதையடுத்து, 200 நாடுகளின் தேசியக்கொடியைப் பார்த்து, நாட்டின் பெயரை சொல்லுதல் மற்றும் கபிலர் பாட்டில் உள்ள, 99 தமிழ்ப் பூக்களின் பெயர்களை பார்க்காமல் சொல்லுதல் ஆகிய சாதனை நிகழ்ச்சி, நேற்று கரூர் ஆர்த்தி ஹோட்டல் அழகம்மை மகாலில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், 200 நாடுகளில் தேசியக்கொடியைப் பார்த்து, நாடுகளின் பெயரை இரண்டு நிமிடம் 34 செகண்டிலும், 99 பூக்களின் பெயர்களை பார்க்காமல், ஒரு நிமிடம் இரண்டு செகண்டிலும் சிறுமி இனியா சொல்லி முடித்தார். இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனையாளரும், நிர்வாகியுமான வெங்கடாச்சாரி, சாதனை சிறுமி இனியாவுக்கு, "இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சான்று வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில், கரூர் டெக்ஸ் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் உமாபதி, ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி தாளாளர் அசோக் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
Best regards,
ASHRAF