"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
12 அக்டோபர் 2011

வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி

0 comments

தமிழ்நாட்டில் 40 தபால் நிலையங்களில் அறிமுகம்

வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி

தமிழ்நாடு தலைமை தபால் துறை அதிகாரி சாந்தி நாயர் தகவல்

சென்னை, அக்.௨
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தபால் நிலையம் வழியாக பணம் பெறும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 40 தபால் நிலையங்களில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்று தமிழ்நாடு வட்ட தலைமை தபால் துறைத் தலைவர் சாந்தி நாயர் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தை தபால் நிலையம் மூலம் கொடுப்பதற்காக சர்வதேச பணப் பரிவர்த்தனை சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக அமெரிக்காவில் உள்ள மணி கிராம் பேமண்ட் சிஸ்ட்ம் என்ற நிறுவனத்துடன் இந்திய தபால் துறை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மணி கிராம் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தை டெல்லியில் மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை மந்திரி கபில்சிபல் 29ந் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த முன்னோடித் திட்டம், தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 40 தபால் நிலையங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம், படிப்படியாக அனைத்து தபால் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணத்தைப் பெறும் முறை…

ஒருவர் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்ப வேண்டுமானால், வெளிநாடுகளில் எந்த நாட்டில் இருக்கிறாரோ அந்த நாட்டு பணத்தையோ அல்லது அமெரிக்க டாலரையோ இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினர் முகவரிக்கு அனுப்புவார். அப்போது அவரிடம் 8 இலக்க எண் ஒன்று தரப்படும். அவர் அந்த எண்ணை, இந்தியாவில் பணம் பெற இருக்கும் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். பணம் பெறுபவர் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திற்கு சென்று பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அந்த நேரம் தபால் நிலையத்தில் ஒரு படிவம் கொடுத்து நிரப்பச் சொல்வார்கள். அதை நிரப்பிக் கொடுத்ததும், ஒரு ரசீது தருவார்கள். அதில் கையெழுத்துப் போட்டுவிட்டு பணத்தை வாங்கிச் செல்லலாம்.

வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தனது குடும்ப பராமரிப்பு அல்லது வெளிநாட்டு சுற்றுலா தேவைக்காக மட்டும் இந்த திட்டத்தின் மூலம் பணத்தை அனுப்ப முடியும். இந்தியாவில் சொத்துகளை வாங்குவதற்கோ, முதலீடு செய்வதற்காகவோ, நன்கொடை கொடுப்பதற்காகவோ இந்த திட்டத்தின் மூலம் பணத்தை அனுப்ப முடியாது.
190 நாடுகளில் இருந்து அனுப்பலாம்

வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு அதிகபட்சமாக 2500 டாலர் (ரூ.1,22,500) வரை அனுப்பலாம். மாதத்திற்கு ஒரு தடவை வீதம் ஓராண்டில் 12 தடவைகள் மட்டுமே பணம் அனுப்ப முடியும். இந்திய ரூபாய் கணக்கின்படி, ரூ.50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொகை காசோலையாகத்தான் கொடுக்கப்படும்.
மொத்தம் 190 வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பலாம். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் இந்தியாவிற்கு பணம் அனுப்பும்போது ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக பெறப்படும். உதாரணத்திற்கு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு ஆயிரம் டாலர் (ரூ.49,000) அனுப்பினால், அதில் 13 டாலர் கமிஷனாக எடுத்துக் கொண்டு மீதமுள்ள 987 டாலர் மட்டும் தரப்படும்.

சென்னை மண்டலத்தில் 10 தபால் நிலையங்களிலும், திருச்சி மண்டலத்தில் 14 தபால் நிலையங்களிலும், மதுரை மண்டலத்தில் 10 தபால் நிலையங்களிலும், கோவை மண்டலத்தில் 6 தபால் நிலையங்களிலும் ஆக மொத்தம் 40 தபால் நிலையங்களில் இந்தப் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை மண்டலத்தில், சென்னை அண்ணா சாலை, புதுச்சேரி, வேலூர், தாம்பரம், தி.நகர், திருவண்ணாமலை, பரங்கிமலை, விழுப்புரம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஜெனரல் தபால் நிலையத்திலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

திருச்சி மண்டலத்தில், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், திருவாரூர், நாகப்பட்டினம், விருத்தாசலம், சீர்காழி, மன்னார்குடி ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், மதுரை மண்டலத்தில், காரைக்குடி, நாகர்கோவில், மதுரை, தக்கலை, ராமநாதபுரம், பரமக்குடி, பாளையங்கோட்டை, சிவகங்கை, தேவகோட்டை, கோவில்பட்டி ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், கோவை மண்டலத்தில், உதகமண்டலம், கோவை, திருப்பத்தூர், சேலம், குடியாத்தம் ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களிலும், கோவை ஜெனரல் தபால் நிலையத்திலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி