அதேபோல் வகுப்பில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் முறையிலும் வித்தியாசங்கள் இருக்கும். ஆக ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் பாணியும், நம் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பாணியும் ஒத்துப் போகாத குழந்தைகள் பாடத்தில் சுவாரஸ்யம் இழக்கிறார்கள். இதனால் வகுப்பில் கவனம் போகிறது. விளைவு படிப்பதென்றாலே அவர்கள் உற்சாகம் இழந்து விடுகிறார்கள். மார்க்கும் அடிபடுகிறது.
குழந்தை அதிக மார்க்குகள் பெற முடியாத போது, "ஹும்! நீ இன்னும் நல்லா படிச்சிருக்கணும்... என்பது போல் காரணங்கள் சொல்வோம். ஆனால், உண்மையான காரணங்கள் என்னவென்றால் ஒவ்வொரு குழந்தை கற்றுக் கொள்ளும் பாணியிலும் பலங்களும் உள்ளன! பலவீனங்களும் உள்ளன! இது தெரிந்தால் தான் நம்மால் நம் குழந்தைகள் பெற முடியாத மதிப்பெண்களுக்குக் காரணம் சொல்ல முடியும்.
இன்றைய கல்வி சூழ்நிலையில் மதிப்பெண்கள் பெறுவதே குறிக்கோளாகி விடுவதால், குழந்தைகள் பாடங்களை எப்படியாவது மனப்பாடம் செய்வது என்றாகி விடுகிறது. இப்படி படித்து அவர்கள் தேறினாலும் பாடத்திலிருக்கும் அடிப்படைகளை அவர்கள் கற்கத் தவறிவிடுகிறார்கள்.
இதனால் சில குழந்தைகள் பிற்காலத்தில் என்ஜினீயர்களாகவோ, மருத்துவர்களாகவோ ஆனாலும் கூட, ஒரு வெற்றிகரமான என்ஜினீயர்களாகவோ, மருத்துவர்களாகவோ ஆக முடிவதில்லை!
குழந்தைகளின் கற்கும் முறையில் இருக்கும் நிறைகுறைகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அவர்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக அமைத்து தருவது பெற்றோர்களின் கடமையாகும்.