இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் . படித்து முடிக்கும் முன்பே சிறந்த நிறுவனத்தில் வேலை வேண்டும் என்று எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வாங்கித்தரும் படிக்கட்டு, கேம்பஸ் இன்டர்வியூ. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி காரணாமாக, IIT, NIT போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களைத் தாண்டி முக்கியத்துவம் வாய்ந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் பொறியியல் கல்லூரிகளிலும் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்ய முன்னணி நிறுவனங்கள் விரும்புகின்றன.
ஆண்டு ஊதியம்:
சென்னை IIT யில் டிசம்பர் முதல் தேதியில் இருந்து கேம்பஸ் இன்டர்வியூ தொடங்க இருக்கிறது. கடந்த ஆண்டில் சென்னை IIT யில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு ஆண்டுக்கு சராசரி 7.4 லட்சம் அளவுக்கு ஊதியம் கிடைத்தது. இந்த ஆண்டில் IIT மாணவர்களுக்கு அதிக பட்சமாக ஆண்டு ஊதியம் ரூ. 44.1 லட்சத்திலிருந்து (90 ஆயிரம் டாலர்) 61.15 லட்சம் (1.23 லட்சம் டாலர்) வரை ஊதியம் கிடைக்கும் என்கிறார்கள். இதே போல, நிகர்நிலைப் பலகலைக்கழகங்களிலும் முக்கிய கல்வி நிறுவனங்களிலும் கேம்பஸ் இன்டர்வியூக்களை நடத்துவதற்கான பணிகளை பெரிய I.T. நிறுவனங்கள் தொடங்கிவிட்டன.
I.T. அல்லது Computer Science படித்த மாணவர்களை மட்டுமல்லாமல், வேறு பொறியியல் படிப்பு மாணவர்களையும் தேர்வு செய்கின்றன பல I.T. நிறுவனங்கள். இளநிலைப் பட்டப் படிப்பில் மாணவர்கள் குறைந்தது 70 அல்லது 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று பல நிறுவனங்கள் எதிர்ப்பார்க்கின்றன. 80 சதவீதத்திற்கு மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றுள்ள மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு வைக்காமலேயே நேர்முகத்தேர்வு நடத்தி, தேர்வு செய்யும் நிறுவனங்களும் இருக்கின்றன. மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதிகளை நிர்ணயம் செய்வதில் நிறுவனங்களிடையே வேறுபாடு உள்ளது. ஒரு பாடத்தில் Arrears உள்ள மாணவர்களை கூட கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொள்ள அனுமதிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன.
திறமைக்கே முக்கியத்துவம்:
மாணவர்களின் Project, குழுவாக இணைந்து பணியாற்றும் தன்மை, தலைமைப் பண்பு, புதிய யோசனைகளை சொல்லும் ஆற்றல்.. இப்படி பல்வேறு விஷயங்களையும் கருத்தில் கொண்டே I.T. நிறுவனங்கள் மாணவர்களை வேலைக்கு எடுக்கின்றன. பொறியியல் கல்லூரிகளின் தரத்தைப் பார்த்தே, அந்தக் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வ்யூ மூலம் மாணவர்களைச் சேர்ப்பது என்பதுதான் பிரபல நிறுவனங்களின் வாடிக்கையாக உள்ளது. இரண்டாம் நிலைக் கல்லூரியில் படிக்கும் சிறந்த மாணவர்களை Off-Campus Interview மூலம் அந்த கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்கின்றன. கடந்த ஆண்டை போலவேதான், இந்த ஆண்டும் கேம்பஸ் இன்டர்வியூ முக்கிய கல்வி நிறுவனங்களில் கலை கட்ட தொடங்கிவிட்டது!!