லண்டன்: ஐரோப்பாவின், "ஷெங்கன்' நிலப் பரப்பில் அமைந்த நாடுகளுக்கு, ஐரோப்பியர் அல்லாதவர் செல்ல, புதிய விசா முறையை ஐரோப்பிய யூனியன் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐரோப்பாவின் போர்ச்சுகல் முதல், நார்வே வரையிலான, 25 நாடுகள் கொண்ட நிலப் பரப்பு, "ஷெங்கன்' என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்குச் செல்ல, இந்நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வித விசாவும் தேவையில்லை. ஆனால், பிற நாட்டவர் செல்ல, "ஷெங்கன்' விசா வாங்க வேண்டும். இப்போது இந்த விசாவில் புதிய முறையை ஐரோப்பிய யூனியன் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, விரல் ரேகைகள், முகப் பதிவு உள்ளிட்ட, "பயோமெட்ரிக்' முறைகளைப் பயன்படுத்தி விசா வழங்கப்படும். இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் வெளியிட்ட அறிக்கையில், "இதன் மூலம் விசா விண்ணப்பங்கள் தங்கு தடையின்றி விரைவில் வழங்கப்படும். விசா மோசடிகளும் தடுக்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, 13 கோடி, "ஷெங்கன்' விசாக்கள் வழங்கப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.