திருச்சி மேற்கு தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பாதுகாப்பு பணியில் துணை ராணுவப்படையினர் உள்பட 3 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வருகிற 20-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவு தெரியும்.
திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
போட்டியிடுபவர்கள் விவரம் வருமாறு:
அதிமுக - மு.பரஞ்சோதி
திமுக - முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு
இந்திய ஜனநாயக கட்சி - முகமது சாதிக்
மக்கள் சக்தி - சுரேஷ்குமார்
இதுதவிர சுயேட்சைகள் 12 பேரும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாஜக, பாமக, இ.கம்யூனிஸ்டு, மா.கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை.
இத்தொகுதியில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 247 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 2 ஆயிரத்து 924 பேர். பெண்கள் 1 லட்சத்து 5 ஆயிரத்து 497 பேர். திருநங்கைகள் 6 பேரும் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 240 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருப்பதால் எல்லா வாக்குச்சாவடிகளிலும் லேப்-டாப் வைக்கப்பட்டு வெப் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.
இத்தொகுதியின் வாக்கு எண்ணிக்கை வருகிற 17-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் 17-ந் தேதி உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் வாக்கு எண்ணிக்கையை வருகிற 20-ந் தேதிக்குத் தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது. எனவே வாக்கு எண்ணிக்கை 20-ந் தேதி நடைபெறும்.
கடந்த தேர்தலில் இத்தொகுதியில் கட்சிகள் பெற்ற ஓட்டு விவரம்:
மொத்த ஓட்டு - 2,05,622
பதிவானவை - 1,54,322
மரியம்பிச்சை (அதிமுக) - 77,492
கே.என்.நேரு (திமுக) - 70,313
இளங்கோவன் (பிஎஸ்பி) - 407
திருமலை (பாஜக) - 2,569
செல்வம் (ஐஜேகே) - 1,487
பாலசுப்பிரமணியன் (லோக் ஜனசக்தி) - 152