இறைவனின் திருப்பெயரால்...
அன்புள்ளவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்..
தமுமுக நம் சமுதயத்திற்கு கிடைத்த பெரும் பொக்கிஷம். அரசிடமிருந்து பெறவேண்டிய நம்முடைய உரிமைகளை தமுமுகவினர் போரடிப் பெற்றுத் தந்துள்ளனர். இன்னும் பெற போராடிக் கொண்டுள்ளனர். இன்னும் எத்தனையோ சேவைகளை செய்தவண்ணம் இருக்கின்றனர். இத்தகைய சமுதாய நலன் அமைப்புகளில் உள்ளவர்கள் சங்கத்தின் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாதா? ஏன் இன்னும் கோணல் பார்வை, குருடன் போக்கு?
சங்கங்களின் முந்தைய செயல்பாடுகள் கல்யாண வரி வசூலிப்பதிலும் மற்றும் மண முறிவு (தலாக்) ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாகவும் மட்டுமே இருந்துள்ளது. சங்கம் என்பது பலதரப்பட்ட மாற்றுக் கருத்துடையவர்களின் கூட்டமைப்பே. பலதரப்பட்டவர்கள் மாற்றுக் கருத்துள்ளவர்கள் இதில் அங்கத்தினராக இருக்கலாம். ஆனால் அதன் செயல்பாடுகள் அனைவருக்கும் சமமாகவும் / நீதனமகவும் ஒளிவு மறைவின்றி இருக்கவேண்டும். சில நேரங்களில் சமுதாய நலன் கருதி முடிவுகள் எடுக்க நேரிடும்பொழுது சிலரிடமிருந்து கசப்பான எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அதை சமுதயத்திற்காகப் பொருந்திக் கொண்டுதான் ஆகவேண்டும். பாதிக்கப்பட்டோம் என்று யாரும் கருதினால் மேல்முறையீடு செய்வதுதான் சாலச்சிறந்தது. பொதுவாக அமைப்புகள் / சங்கங்கள் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. எல்லாவற்றையும் எதிர் கொண்டுதான் ஆகவேண்டும். உணர்ச்சிவசப்படத் தேவை இல்லை.
சிலசமயம் தமுமுகவின் ( மேலும் சில இயக்கங்களின்) செயல்பாடுகளில் நமக்கு மாற்றுக் கருத்துகள் இருந்த போதிலும் அதை புறம் தள்ளிவிட்டு அல்லாஹ்விற்காகவும் நம் சமுதாயத்திற்காகவும் உழைக்கக் கூடிய அந்த மக்களுக்கு முடிந்தவரை ஒத்துழைப்பையும் துஆவையும் செய்து கொண்டுதான் இருக்கின்றோம்.
புதிதாக அமைந்த சங்க நிர்வாகிகளின் நிர்வாகத் திறன் பாராட்டத் தகுந்தவையாக உள்ளது. சில விசயங்களில் உடனுக்குடன் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்காக முடிந்தவரை ஒத்துழைக்க வேண்டும். இதற்கு மெருகூட்டும் வண்ணம் அமீரக வாழ் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் அமைப்பு நடத்திய ஒருங்கிணைந்த நிகழ்வும் மேலும் அதிரை அனைத்து முஹல்லாக்களின் ஒருங்கிணைந்த பொதுக் கூட்டமும் மனதிற்கு புது தெம்பை தந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
சங்கங்கள் தன்னை கல்யாண வரி மற்றும் தலாக் போன்ற பஞ்சாயத்தில் மட்டும் நின்று விடாமல் நம் சமுதாயத்தில் நிலவும் சமூக ஒழுங்கீனங்ககளை சீர்படுத்தவும் முயற்சி செய்யவேண்டும்.
உலமாக்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றோம் என்று கூறும் சங்கங்கள் பொருளாதரத்தில் நலிவடைந்த உலமாக்களுக்கு / பள்ளிகளை பராமரிக்கும் முஅத்தின் / நம் பிள்ளைகளுக்கு ஓதிக் கொடுக்கும் உஸ்தாதுகளுக்கு, நமதூர் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்றவாறு ஊதிய உயர்வு அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
வேட்பாளர்களிடத்தில் உறுதிமொழி வாங்கியது போல், சங்கத்திற்கு கல்யாண வரி வசூலிக்கும் முன் பெண் வீட்டில் "மாப்பிள்ளை வீட்டிற்கு கைக் கூலி கொடுத்து இருக்கிறீர்களா" என்று வினவ வேண்டும். அப்படி கைக் கூலி வரதட்சணை வாங்கி இருந்தால் அந்த கல்யாணத்திற்கு பதிவு புத்தகத்தை அனுப்ப மாட்டோம் என்று (பெயரளவிலாவது) முதல் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு முஹல்லாவிலும் படிக்கும் மாணவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு அந்தந்த முஹல்லாவில் அடிப்படை மார்க்க அறிவு போதிக்கப் படுகிறதா என்று ஆராய வேண்டும்.
பாதியில் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தம் (பொருளாதார அல்லது அறிவுரீதியாக கற்க கடினப்படும்) செய்யும் மாணவர்களை இனம் கண்டு அதற்கு ஏற்றவாறு உதவி செய்ய ஆலோசனை வழங்க வேண்டும்.
துரதிஷ்டவசமாக நம் ஊர் மக்கள் ஏனோ இன்னும் இட ஒதுக்கீட்டை அனுபவிக்காமல், அரசு தரும் உரிமைகளைப் பெற முயற்சி செய்யாமல் கடவுச்சீட்டை மட்டுமே நம்பி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டு இருக்கின்றோம் என்பதும் நம் சமுதாயம் இன்னும் விசா வியாபாரிகளின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது என்பதும்தான் கசப்பான உண்மை.
மேலும் சில / பல கொள்கைகளால் பிரிந்து கிடக்கும் நம் சமுதாய இயக்கச் சகோதர்கள் வீண் விதண்டவாதமும் கொள்கை சண்டைகளை முச்சந்திக்கு முச்சந்தி செய்வதையும் விட்டுவிட்டு பயனுள்ள வழியில் வருங்கால சந்ததியினருக்கு, நாம் வரி செலுத்தும் அரசிடமிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய சிறுபான்மை அல்லது பொது இட ஒதுக்கீட்டு முறையில் கல்வி, வேலைவாய்ப்புகள் பெற முயற்சி செய்தல் வேண்டும். முதியோர் உதவித் தொகை, ஏழை விதவைகளுக்கான உதவித் தொகை, உலமாக்கள் ஊதியம் போன்ற என்னென்ன உரிமைகளைப் பெறமுடியுமோ அனைத்தையும் பெற சங்கங்களோடு சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இதற்காக ஒவ்வொரு முஹல்லா சங்கத்தில் உள்ள கட்டிடத்தில் தனி அலுவலகமே செயல்பட வேண்டும்.
இதுவரை நம் சமுதாயத்திற்கான பொது பெண் மருத்துவரை பெற முயற்ச்சி செய்யவில்லை. நன்கு படிக்கும் நடுத்தர அல்லது ஏழை மாணவிகளை இன்று முதல் தேர்ந்தெடுங்கள். இன்ஷா அல்லாஹ் அதற்கு தேவைப்படும் பொருளாதாரம் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள் செய்ய வெளிநாடுகளில் உள்ள நாங்கள், அதிரைச் சொந்தங்கள் மற்றும் நட்பு வட்டங்களில் சொல்லி ஆதரவு திரட்டி உதவி செய்கின்றோம். இன்ஷா அல்லாஹ்.
மேலும் நமக்காக நம் சமுதாயத்திற்கான சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள் (Lawyers), ஊடகவியலாளர்கள் (Journalists), இந்திய மேலாண்மை அதிகாரிகள் (IAS, IPS) படிக்க ஆர்வமுடைய மாணவர்கள் தேவை. இன்ஷா அல்லாஹ் இதற்காகவும் அமைப்புகளும் சங்கங்களும் ஒருங்கிணைந்தால் அனைத்துத் தரப்பிலும் உதவி செய்ய ஒத்த கருத்துடைய நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இன்ஷா அல்லாஹ் ஒன்றுகூடி வளம் பெறுவோம்!
வல்லோனின் வான் துணையில்!
தங்களின்
மு.அ. ஹாலித், சிட்னி
THANKS :AAMF