கூடுவிட்டுக் கூடுப்பாய;
கூடை மட்டும்
தூக்கிக் கொண்டு;
கனமில்லாக் கடவுச்சீட்டைக்
கரம்பிடித்ததால்;
கனமானது மனம்;
கண்கள் குளமானதுத் தினம்!
அழுதுவடியும் அம்மாவும்;
அழுவதற்கேத்
தெம்பில்லா இல்லாளும்;
கூடி நிற்கும் உறவுகளும்;
வாசலில் நிற்கும்;
என் புன்னகைத் தோற்கும்!
மொழியில்லா மவுனமும்
விழிகளைக் கடக்க- சோகம்
தொண்டையை அடைக்க;
எட்டிப்பார்ப்பேன் மகிழுந்தின்
ஜன்னல்களை இறக்கியப்படி!
மெல்ல நகரும் வாகனமும்;
மென்று எனைக் கொல்ல;
அழுகை எனை வெல்ல;
மகிழுந்தின்;
கறுப்புக் கண்ணாடியை
வெறுப்பாய் நான் பார்க்க;
என் வீட்டு முகப்பு;
முழுவதாய் மறைய!
நசிந்துப்போன என் ஊர்
கடைத்தெருவும்;
அழகாய் ஜொலிக்க;
நண்பர்கள் கூட்டமொன்று;
கரம் அசைத்து – என்
மனதைப் பிழிய;
பொறுத்ததுப் போதும்
என் பொங்கி அழ!
எனக்கு மட்டும் எதற்கு என
என்னையே நொந்துக்கொள்ள;
எனைப்போலவே ஆங்காங்கே
அழுதுக்கொண்டுக் கண்களைப்
பிசைந்துக்கொண்டு ஒர் கூட்டம்!
விமான நிலையத்தில்!
சிரித்துக்கொண்டே;
சில்லறையைச் சேர்த்தக்
கூட்டமொன்று உறவுகளை
அணைத்தப்படி வருகைப் புரிய;
மெல்லப் பூரிப்பேன்;
இவர்கள் அழ இன்னும்
மாதம் இருக்கென்று!