"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
10 அக்டோபர் 2011

நன்மையை நாடுதல்

0 comments

நபி (ஸல்) அவர்கள், “மார்க்கமென்றால் நன்மையை நாடுதல் என்றார்கள். அப்போது“யாருக்கு? என நாம் கேட்டோம். அதற்கு, “அல்லாஹ்வுக்கும் அவனுடைய வேதத்துக்கும், அவனுடைய தூதருக்கும்,முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், ஏனைய முஸ்லிம்களுக்கும் என்று பதிலுரைத்தார்கள்.

நபிமொழி இடம்பெற்றுள்ள நூற்கள்

ஸஹீஹ் முஸ்லிம் 55 இலும், ஸுனன் அபீதாவூத் 4944 இலும், ஸுனன் நஸாஈ 4126 இலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹதீஸின் அறிவிப்பாளர்

மேற்கூறப்பட்ட நபிமொழியை அறிவிக்கின்ற நபித் தோழர் தமீமுத் தாரி (ரலி) அவர்கள். அவரது முழுப் பெயர் தமீம் பின் அவ்ஸ் அத்-தாரி என்பதாகும். ஆரம்பத்தில் கிறிஸ்தவராக இருந்த இவர் ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு இஸ்லாத்தைத் தழுவி மதீனாவில் வசித்து வந்தார். இறையில்லத்தில் முதன்முதலாக விளக்கேற்றியவர் இவராவார். இவர் இஸ்லாத்தைத் தழுவ முன் பலஸ்தீனப் பிரதேசத்தில் கிறிஸ்தவ மதகுருவாக இருந்தார். புகாரி எனும் ஹதீஸ் கிரந்தத்தில் இந்த நபித் தோழர் அறிவிக்கின்ற ஹதீஸ்கள் எதுவும் இடம்பெறவில்லை. முஸ்லிம் எனும் கிரந்தத்தில் மேற்கண்ட ஹதீஸ் மாத்திரம் இடம்பெற்றுள்ளது. மொத்தமாக 18 ஹதீஸ்களை அறிவித்த இந்த நபித் தோழர்,உஸ்மான் (ரலி) அவர்களுடைய கொலைக்குப் பின்னர் சிரியா பிரதேசத்துக்குச் சென்று வாழ்ந்து வந்தார்கள். கடைசியாக ஹிஜ்ரி 40 இல் பலஸ்தீனத்தில் மரணித்தார்கள்.

ஹதீஸ் தரும் படிப்பினைகள்

மேற்கூறப்பட்ட நபிமொழியில் தீன் என்ற அறபுப் பதம் இஸ்லாமிய மார்க்கத்தைக் குறிக்கின்றது. நன்மையை நாடுதல் என்பது இஸ்லாத்தின் தூண் போன்றதாகும்.

நஸீஹத் என்ற அறபுப் பதம் நன்மையை நாடுதல் என்ற கருத்தைத் தரும். அது இஸ்லாம், ஈமான்,இஹ்ஸான் ஆகிய மூன்று அடிப்படைகளையும் உள்ளடக்கிக் கொள்கிறது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் இம்மூன்றையும் சேர்த்து தீன் என்ற சொல்லைப் பிரயோகித்துள்ளார்கள்.

நஸீஹத் என்பது பல வகைப்படுகின்றது. அவற்றில் முக்கியமான 5 வகைகளை மாத்திரம் நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட நபிமொழியில் பட்டியலிட்டிருக்கின்றார்கள். அவற்றை ஒவ்வொன்றாக நோக்குவோம்.

1 அல்லாஹ்வுக்கு நன்மையை நாடுதல்

அல்லாஹ்வுக்கு நன்மையை நாடுதலென்பது ஒரு அடியான் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதைக் குறிக்கின்றது. அது கீழ்வருவனவற்றை உள்ளடக்குகின்றது.

¨ அல்லாஹ்வை விசுவாசம் கொள்ளுதல்

¨ அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்துதல். இதில் தௌஹீதின் வகைகளான உளூஹிய்யா,

ருபூபிய்யா, அல்-அஸ்மா வஸ்-ஸிபாத் ஆகிய மூன்றும் அடங்கும்.

¨அல்லாஹ்வுக்குரிய பெயர்கள், பண்புகள் போன்றவற்றைப் படைப்பினங்களுக்கு

ஒப்பிடாமலும், அவற்றை மறுக்காமலும், அவற்றுக்கு உதாரணம் கற்பிக்காமலும்

அவற்றைத் திரிபு படுத்தாமலும் ஏற்றுக் கொள்ளல்.

¨ அனைத்துக் குறைகளை விட்டும் அவனைத் தூய்மைப்படுத்தல்.

¨உளத் தூய்மையுடன் அவனை வணங்குவதோடு அவனது ஏவல்களை எடுத்தும் விலக்கல்களைத் தவிர்ந்தும் நடந்து கொள்ளல்

குறிப்பு அடியார்கள் அல்லாஹ்வுக்கு நன்மையை நாடுதல் என்று சொல்லும்போது, அல்லாஹ் தனது அடியார்களிடம் தேவையுள்ளவன் என்று ஒரு சந்தேகம் எழுகிறது. ஆனால், அல்லாஹ் எந்தத் தேவையுமற்றவன். அடியார்கள் அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவர நிறைவேற்றினால் ஈருலகிலும் அவர்களே நன்மையடைவர். இதனால் அல்லாஹ்வுக்கு எந்த நன்மையோ தீமையோ ஏற்படுவதில்லை.

2 அல்லாஹ் அருளிய அனைத்து வேதங்களையும் நம்பிக்கை கொள்வதையும், அல்-குர்ஆன் அவனால் அருளப்பட்ட இறுதி வேதமாகும் என நம்புவதையும் இது குறிக்கின்றது. இது பின்வருவனவற்றை உள்ளடக்கிக் கொள்கிறது:

¨ அல்லாஹ் அனைத்து நபிமார்களுக்கும் வேதங்களை அருளியிருக்கிறான் என நம்புதல். அல்லாஹ் கூறுகிறான்,

لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ

¨ அவற்றில் பெயர் குறிக்கப்பட்டு வந்த வேதங்களை அவற்றின் பெயர்களோடு நம்புதல். அவை:


à இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட ஏடுகள்

à மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட ஏடுகள்

à தௌறாத்

à ஸபூர்

à இஞ்சீல்

à அல்-குர்ஆன்

நிச்சயமாக நாம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம். அன்றியும் மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக அவர்களுடன் நீதத்தின் துலாக் கோலையும் இறக்கினோம் [அல்-ஹதீத்: 25].

¨ அல்-குர்ஆன், அல்லாஹ் யதார்த்தமாகப் பேசிய வார்த்தை. அதனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் செவிமடுத்து, அல்லாஹ்வின் ஏவலின் பிரகாரம் நபி (ஸல்) அவர்களுக்கு ஒப்புவித்தார்கள் என நம்புதல்.

¨ அல்-குர்ஆன், முஃதஸிலாக்கள் சொல்வது போல அல்லாஹ்வின் படைப்பல்ல. மேலும், அது ஜிப்ரீல் (அலை) அவர்களது உள்ளத்திலோ நபி (ஸல்) அவர்களது உள்ளத்திலோ தோன்றிய உதிப்புக்களல்ல. மாறாக, அது அல்லாஹ்வுடைய வார்த்தையாகும்.

¨ அல்லாஹ்வின் வேதமான அல்-குர்ஆனை அதிகமாக ஓதுவதன் மூலமும் அதனை மனனமிடுவதன் மூலமும் அதனை விளங்கி அதன் வழி நடப்பதன் மூலமும் ஒரு மனிதன் அல்-குர்ஆனுக்கு நன்மையை நாட வேண்டும்.

3 ரஸூல் (ஸல்) அவர்களுக்கு நன்மையை நாடுதல்

இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை இது குறிக்கிறது. அவை:

¨ முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறுதி நபி என நம்புதல்.

¨ அவர் கொண்டு வந்த தூதுத்துவத்தை உண்மைப் படுத்துதல்.

¨ அவருக்கு அருளப்பட்ட அல்-குர்ஆன் மற்றும் அவரது பொன் மொழிகள் அனைத்தும் உண்மையென நம்புதல்.

¨ நபி (ஸல்) அவர்களை நேசித்து அவருக்கு வழிப்படுதல்.

¨ நபி (ஸல்) அவர்களின் மரணத்துக்குப் பின்னால் வாழக்கூடிய நாம் அன்னாருடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்து அவருடைய நற்குணங்களையும் ஒழுக்கங்களையும் கடைப்பிடித்தல்.

¨ அவருடைய வழிமுறையை எடுத்து நடப்பதோடு, அவற்றை ஏனையோருக்கும் பரப்ப முயற்சித்தல்.

¨ எதிரிகள் அவர் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளித்து உண்மையைத் தெளிவுபடுத்துதல்.

4 முஸ்லிம் தலைவர்களுக்கு நன்மையை நாடுதல்

முஸ்லிம் தலைவர்கள் எனும்போது ஆட்சித் தலைவரும், அவரது பிரதிநிதிகளும்,அறிஞர்களும், சீர்திருத்தவாதிகளும் அடங்குவர். மார்க்கத்துக்கு முரணில்லாமல் நடக்கும்வரை ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுவது ஒவ்வொரு பிரஜையின் மீதும் கடமையாகும். அவர்கள் இஸ்லாமிய அமைப்புடன் அல்-குர்ஆனையும் ஸுன்னாவையும் நடைமுறைப்படுத்தி ஆட்சி செய்யும்வரை அவர்களுக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருக்க வேண்டும்.

ஆட்சியாளர்கள் வழி தவறிச் செல்லும்போது அப்பிரதேசங்களிலுள்ள அறிஞர்களும் சீர்திருத்தவாதிகளும் இரகசியமாகவும் நிதானமாகவும் அவர்களது தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைப்பதையோ இறை நிராகரிப்பையோ தூண்டாதவரை ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சிகளில் ஈடுபடுவது முழுமையாகத் தடை செய்யப்பட்டதாகும். அவர்கள் ஏனைய பாவச் செயல்களைத் தூண்டினால் அவற்றை வெறுத்தொதுங்க வேண்டுமே தவிர அவர்களுக்கெதிரான புரட்சிகளில் ஈடுபடக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், சிறந்த ஆட்சியாளர் யாரென்றால் நீங்கள் அவர்களையும் அவர்கள் உங்களையும் நேசிக்க வேண்டும்; அவ்வாறே, நீங்கள் அவர்களுக்காகவும் அவர்கள் உங்களுக்காகவும் பிரார்த்திக்க வேண்டும். அவரே உங்களில் சிறந்த ஆட்சியாளராவார். உங்களில் கெட்ட ஆட்சியாளர் யாரென்றால் நீங்கள் அவர்களையும் அவர்கள் உங்களையும் வெறுக்கிறீர்கள்;அவ்வாறே நீங்கள் அவர்களையும் அவர்கள் உங்களையும் சபிக்கிறீர்கள்; அவரே கெட்ட ஆட்சியாளர். அப்போது நபித் தோழர்கள்,அல்லாஹ்வின் தூதரே, அவர்களுக்கெதிராக வாளேந்திப் போராடக் கூடாதா எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும்வரை அவர்களுக்கெதிராகக் கிளர்ச்சி செய்ய வேண்டாம் எனப் பகர்ந்தார்கள். மேலும் கூறினார்கள், உங்களில் ஒருவர் ஆட்சியாளர் ஒரு பாவத்தைச் செய்வதைக் கண்டால் அதை வெறுக்க வேண்டும். ஆனால், அவருக்கு வழிப்படுவதைத் தவிர்க்கக் கூடாது. [நூல்: முஸ்லிம், அஹ்மத்]

5 முஸ்லிம்களுக்கு நன்மை நாடுதல்

முஸ்லிம் சமூகத்திலுள்ள பொதுமக்களுக்கு ஈருலக நன்மையையுங் கருத்திற் கொண்டு அவர்களை நேர்வழி நடத்துவது அச்சமூகத்தின் ஆட்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள் மீதுள்ள கடமையாகும். முஸ்லிம்கள் இவ்விடயத்தில் மிகவும் பொடுபோக்கானவர்களாகக் காணப்படுகின்றனர். இதன் விளைவாக இன்று முஸ்லிம்கள் மத்தியிற் பல பிரிவினர்கள் தோன்றி இஸ்லாமிய உம்மத்தின் சமூகக் கட்டமைப்பு சீர்குலைந்த நிலையில் உள்ளது. முஸ்லிம்களுக்கு நன்மையை நாடுதல்

¨ முஸ்லிம்களுடைய குறைகளை ஒருவருக்கொருவர் மறைத்தல்.

¨ முஸ்லிம்களுக்கேற்படக்கூடிய கெடுதிகளைத் தடுத்து நிறுத்துதல்.

¨ அவர்களுக்கு நன்மை ஏற்படக்கூடிய வழிவகைகளை அறிமுகப்படுத்துதல்.

¨ அவர்கள் மத்தியில் நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல்.

¨ அவர்களில் பெரியோரை மதித்து, சிறுவர்களுக்கு இரக்கம் காட்டுதல்.

என்பது பின்வருவனவற்றை உள்ளடக்கிக் கொள்கிறது:

மேற்கூறப்பட்ட விடயங்களை நோக்கும்போது இந்த நபிமொழி இஸ்லாத்தின் அடிப்படைகள் அனைத்தையும் சுருக்கமாக உள்ளடக்கிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. எனவே, அதிற் கூறப்பட்ட விடயங்களைச் சரிவரப் பேணி நடந்தால் இஸ்லாத்தைப் பூரணமாகப் பின்பற்றியவர்களாக மாற முடியும். எனவே, இந்த நபிமொழியைச் சரிவர விளங்கி அதன் வழி நடக்க அல்லாஹ் எம்மனைவருக்கும் அருள் புரிவானாக!


நன்றி: மனாரு தஃவா
S.A.SULTHAN


Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி