இன்ஜினீயரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(வயது 10). பிறந்த போது வாய்பேச முடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார்.
கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்ட சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், 'பென்னட் காமத்' என்ற அறிவியல் முறைப்படி சோதித்து பார்த்ததில் அவரது ஐகியூ., எனப்படும் அறிவுத்திறன் அளவு 225 ஆக இருப்பது தெரியவந்தது. வழக்கமாக மனிதர்களின் அறிவுத்திறன் 110க்குள்தான் இருக்கும். 110க்கு மேல் இருந்தால் அறிவுத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் இச்சிறுமியின் திறன் 225 ஆக உள்ளது என்றார். எனவே முதல் வகுப்பு, 4ம் வகுப்புகளில் டபுள் புரமோசன் எனப்படும் இரட்டை தேர்ச்சி பெற்றார். வரும் கல்வியாண்டில் 6ம் வகுப்பு பயில வேண்டிய சிறுமி விசாலினி 8ம் வகுப்பு பயில உள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் நெல்லையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் படித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.சி.பி., தேர்வினை ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்றார்.
தொடர்ந்து இம்மாதத்தில் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனத்தினர் நடத்தும் சிசிஎன்ஏ எனப்படும் நெட்வொர்க் தேர்வினையும் திருவனந்தபுரத்தில் ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.
இவருக்கு சிறுவயதில் சிகிச்சையளித்த டாக்டர் ராஜேஷ், மதுரை டாக்டர் நம்மாழ்வார், நெல்லை கம்ப்யூட்டர் மைய நிர்வாக சுந்தரபாண்டியன் ஆகியோர் பாராட்டினர். பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுவன் ஹைதர் இத்தகைய சாதனையை கடந்த ஆண்டு செய்துள்ளான். ஆனால் பத்து வயதிலேயே சிறுமி விசாலினி சிஸ்கோ தேர்வினை எழுதியுள்ளார். அவரது முயற்சிகள் குறித்து சிறுமி விசாலினியின் தாய் கூறுகையில், எதை படித்தாலும், கேட்டாலும் எளிதில் புரிந்துகொள்ளும் ஞாபகசக்தி உள்ளது.
ஒரு முறை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்டு தேர்வினை எழுதினாள். இரட்டை தேர்ச்சி பெறுவதால் இவளை விட பெரிய மாணவர்களுடன் வகுப்பில் படிக்க வேண்டியுள்ளது. மேலும் இதற்காக இவளை சில பள்ளிகள் அனுமதிக்கவே மறுத்தன. ஒரு கல்வி ஆண்டில் 3 பள்ளிகளில் சேர்த்து பின்னர் வெளியேற்றப்பட்டு அலைந்தோம். எனவே இவள் வயது மீறினாலும் உயர்கல்வி பயில முறைப்படி அனுமதியளிக்க அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
டாக்டருக்கு படிப்பதுதான் தமது நோக்கம் என்கிறார் சிறுமி விசாலினி. ஏற்கனவே சிறுவயதிலேயே இத்தகைய திறமை படைத்த நெல்லையை சேர்ந்த மாணவன் சந்திரசேகர் போன்றவர்களுக்கும் வயது தொடர்பாக இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனவே சிறுமி விசாலினிக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே அவரது பெற்றோரின் விருப்பமாகும்.
இதுபோன்று நமது பிள்ளைகளையும் சாதனை படைக்கதயார் செய்யுங்கள்,
சிலகுறிப்புகள் :-
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அதிகமாக இருக்கும் பிரச்னைகளில் முக்கியமானது ஞாபக மறதி. உடலை உறுதியாக பராமரிப்பது போல், நமது எண்ணங்களை நினைவில் வைக்கும் திறனை அதிகரிக்க வேண்டும்.
அறிவை பெருக்கும் விளையாட்டுகள்:
நினைவுத் திறனை கூர்மையாக்கும், அறிவுப்பூர்வமான விளையாட்டுகளை விளையாடுங்கள். உதாரணமாக செஸ், கேரம் போர்டு, குறுக்கெழுத்துப் போட்டி போன்ற விளையாட்டுகள் மூளையை கூர்மையாக்கும். நினைவுத் திறன், கவனம், ஒரு செயலின் மீது கருத்தை நிலைநிறுத்துதல் போன்றவற்றை மேம்படுத்தும்.
நன்கு தூங்குங்கள்:
ஞாபக மறதி உள்ள மாணவர்கள், வெவ்வேறு இடங்களில் அமர்ந்தோ, நடந்து கொண்டோ படியுங்கள். மாலை நேரத்தில் படிக்கும் பாடங்களை, அடுத்த நாள் காலை, மற்றொரு முறை பார்வையிடுவது நல்லது. அவ்வாறு செய்வதால் படித்த பாடங்கள் மனதில் பதியும்.
பாடத்தில் உள்ள படங்கள், அட்டவணைகள், கிராபிக்ஸ்கள் போன்றவற்றை பார்த்தவுடன், எண்ணங்களில் ஏற்படும் கற்பனைகள் மற்றும் கருத்துக்களை குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
புத்தகத்தில் உள்ள முக்கியமான வாக்கியங்கள், வார்த்தைகளை வண்ணங்கள் கொண்டு கோடிட்டு வையுங்கள். இவற்றின் வாயிலாக, எளிமையாக பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம்.
குறிப்பேடு அல்லது டைரியில் பாடங்கள் தவிர, நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவதை எழுதுங்கள். உதாரணமாக, பாடம் தொடர்பான சூத்திரங்கள், குறியீடுகள், போன்றவற்றை எழுதி வையுங்கள்.
எழுதியவற்றை நேரம் கிடைக்கும் பொழுது படித்துப் பாருங்கள். இதனால் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஞாபகத்தில் இருக்கும்.
நமது ஊர்களில் குழந்தைகள் 100 க்கு 90% குழந்தைகள் டிவி பார்ப்பதாக கல்வி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர், இதனால் குழந்தைகளின் படிப்புகள் பாதிக்கப்படுகிறது, தாய், தந்தை நீங்கள் குழந்தைகளின் பக்கம் அதிக கவனம் செலுத்தவேண்டும் .
விசாலினி&ஹைதர் போன்று சாதனை படைக்க நமது குழந்தைகளை தயார் செய்யுங்கள்.
ஆக்கம் : அபூ தஃஹ்ஷின் பாத்திமா